வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Tuesday, December 28, 2010

M.K என்கிற M.கிருஷ்ணமூர்த்தி சாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

M.K என்கிற M. கிருஷ்ணமூர்த்தி சாரை எங்க பள்ளிகூடத்தில் தெரியாதவங்க யாரும் உண்டோ? ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர். எங்கள் பள்ளி துணைத் தலைமை ஆசிரியராக ஓயுவு பெற்றவர். இன்று நம்மிடையே இல்லை. சென்ற 19 டிசம்பர் 2010 ஞாயிறு மறைந்துவிட்டார் என்கிற செய்தி பேரிடியாக வந்து இறங்கியது.

எட்டுமுழ பாலியெஸ்டர் பளிச் வேஷ்டி. அரைக்கை சட்டை நெற்றியில் ஒரு சந்தன கோபி. நீரில் நனைக்கப்பட்ட விபூதி பட்டைகள் தெரிந்தும் தெரியாமலும். சில சமயம் பூசப்பட்ட விபூதி பட்டைகள் கைகளிளும் தெரியும். எதிலும் ஒரு ஃபர்பக்ஷன் இருக்கும். எப்போது பார்த்தாலும் அப்போது தான் குளித்து முடித்து வந்த மாதிரி ஒரு பளிச் முகம். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அப்படி ஒரு தும்பைப்பூவால் அர்ச்சனை செய்த மாதிரியான தோற்றம்.

வகுப்புக்கு வந்த பின் எழுதும் கரும்பலகை சுத்தமாகவே இருந்தாலும் அதை மீண்டும் ஒரு முறை சுத்தம் செய்து மேலே ஒரு பிள்ளையார் சுழி போட்டு விட்டு மாணவர்களை பார்த்து ஒரு புன்சிரிப்பு.

சொல்லிக்கொடுக்கப்போகும் பாடத்தை பற்றி ஒரு சின்ன அலுக்காத முன்னுரை. பின்னர் அது சம்பந்தமான படம் கரும்பலகையில். அதில் பாகம் குறிக்கும் போது கூட கன்னாபின்னா என கோடு போட்டு குறிக்காமல் அதன் இடத்தில் இருந்து ஸ்கேல் வைத்து நேர் கோடாக கிழித்து அதன் நேராக பாகம் எழுதும் ஒரு நேர்த்தி. எழுத்துகள் அழகாக மிகவும் அழகாக பிலிப்பைனீஸ் எழுத்து மாதிரி டைமன் டைமனாக அதும் ஆங்கிலத்தில் எழுதினால் எல்லாமே கேப்பிட்டல் எழுத்துகள் என எம்கே சாரின் ஸ்டைலே தனி தான்.

ஒரு மக்கு மாணவனுக்கு கூட புரியும் படியாக விளக்குதல் அவரின் தனிச்சிறப்பு. அறிவியலில் கண்டிப்பாக எல்லா மாணவனும் எண்பது சதம் மார்க்குகள் எடுக்க வைக்கும் திறன். இவை எல்லாமே தான் எம்கே சார்.

சமீபத்தில் சீமாச்சு அண்ணனுடன் பள்ளியில் இருக்கும் போது ஆசிரியர் மதி அவர்கள் "நம்ம எம்கே சாரின் இடது காலை எடுத்துட்டாங்களாம்" என சொன்ன போது கேட்டுக்கொண்டிருந்த எல்லோருமே ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டோம். அவரை போய் பார்ப்போம் என நினைத்த போது தான் அவன் தன் மகளுடன் பூனே போய் தங்கிவிட்டதாகவும் அவருக்கு காலில் Osteosarcoma என்ற நோய் (ஒரு வித அரிதான் புற்று நோய்.. இது பொதுவாக ஒருவரை 30 வயதுக்குள் மட்டுமே தாக்கக்கூடியது.. சாருக்கு 70 வயதில் எப்படி வந்ததென்பதே ஒரு புதிர்தான்) தாக்கி அதனால் அவர்து இடது காலில் முழங்காலுக்கு மேல் ஆறு அங்குலத்திலிருந்து எடுக்க நேரிட்டது எனவும் அறிந்து வேதனைப்பட்டோம். He was diagnosed with Osteosarcoma in May 2010 and his leg was amputated in October 2010. After that incident he moved to Pune to his daughter's house. In the beginning of December he developed Osteosarcome cancerous tumor in his lungs and started having breathing problems. The cancer spread too fast and he breathed his last on 19th December 2010.

மாலை நேரத்தில் ஒரு ஒயர் கூடை எடுத்து கொண்டு காய்கறிகள், கீரை எல்லாம் வாங்கிகொண்டு கடைத்தெருவை விடு விடென்று ஒரு வலம் வருவார். காய்கறி வாங்கி முடித்து, துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயிலில் , மலைக் கோயிலில் எழுந்தருளியுள்ள பால தண்டாயுதபாணியை அதே விடு விடு வேகமான நடையுடன் மூன்று பிரதட்சிணங்கள்.. கண்ணில் படும் தெரிந்த முகங்களுக்கு (அது தெய்வமாகவே இருந்தாலும்) ஒரு சிறிய தலை அசைப்புடன் கூடிய ஒரு புன்னகை.. நடையில் வேகம் குறைக்காது வீடு போய்ச் சேருவார்.. அப்படி எல்லாம் அவரை பார்த்து பழகிவிட்ட எங்களுக்கு அவர் கால் இல்லாமல் பார்க்கும் தைரியம் இல்லை என்பதால் தான் எங்கள் கண்ணுக்கு எட்டா தூரத்தில் போய்விட்டார் போலும்.

அவரிடம் டியூஷன் படிக்க அவர் வசித்த செட்டித்தெருவுக்கு காலை 5.30க்கு எல்லா மாணவர்களும் போகும் போதே தெரு விழித்துக்கொள்ளும். தெருவே அவரால் கலகலப்பாக ஆகிவிடும். அவருடைய மாணவர்கள் எல்லோருமே கிட்ட தட்ட அவரைப்போலவே எதிலும் ஒரு ஃபர்பெக்ஷன் என்கிற நிலைக்கு கொண்டு வரப்பட்டுவிடுவர். குளிர்காலத்தில் வகுப்பில் மூன்று பிரிவாக இருக்கும் டெஸ்க் எல்லாவற்றையும் இனைத்து போட்டு கொண்டு சிலசமயம் எங்களுக்கு முன் டெஸ்க் மேலே ஏற்றி போட்டு கொண்டு உட்காந்து இருக்கும் போது வந்து "கால் இடுக்கிலே மாட்டிச்சுன்னா விரலை வழிச்சு தான் எடுக்கனும்" என தன் கைவிரலால் வழிப்பது போன்ற பாவனை செய்து காட்டுவது இன்றும் மனதில் நிற்கின்றது.

அவரிடம் படித்த நம் சக பதிவரும், கிழக்குபதிப்பகத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவரும் என் தம்பியுமான முத்துகுமார் ஒரு பத்து நாட்கள் முன்பாக எனக்கு தொலைபேசிய போது "அண்ணே, என் நான்கு வருட உழைப்பில் உண்டான புத்தகம் 'திராவிட இயக்க வரலாறு" இரண்டு பாகமாக 800 பக்க புத்தகமாக வெளிவர இருக்கு. என் மனசுக்கு பிடிச்ச என் ஆசிரியர்கள் எம்கேசாருக்கும் கேபி சாருக்கும் தான் இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்து அச்சில் ஏற்றிவிட்டு விட்டு வந்து உங்களுக்கு போன் செய்கிறேன்" என சொன்ன போது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. திரு. எம்கே சார் கால் இழந்த விஷயத்தை சொல்லலாமா என யோசித்து பின்னர் மெதுவாக சொன்னேன். வெடித்து அழுதான். பின்னர் தேற்றிவிட்டு அவரிடம் நீயே பேசி இந்த விஷயத்தை சொல்லேன் அவர் சந்தோஷப்படுவார் என சொன்னேன். தம்பியும் பூனேவுக்கு போன் செய்து சொன்னான்.

இப்படியாக அவருடைய மாணவர்களின் அன்புக்கு பாத்திரமான திரு. எம்கே சார் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா அமைதியடைய எங்கள் பள்ளியின் சார்பிலும், பள்ளியின் தாளாளர், பள்ளிக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய அலுவலர்கள்,முன்னாள், இந்நாள் மாணவர்கள் சார்பாக பிரார்திக்கின்றோம்.

Saturday, September 4, 2010

ஆசிரிய விருது பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்தமிழக அரசின் "நல்லாசிரியர் விருது" பெறும் G.மதியரசன் M.A.,B.Ed.,M.Phil அவர்களுக்கு எம் உளம் கனிந்த வாழ்த்துகளினையும்,

துறையூர் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் ஆசிரியர் தின விழ சிறப்பு விருதாக “ஆசிரியச்செம்மல்” விருதினை பெறும் எம் பள்ளி ஆசிரியர்கள்T.குணசேகரன் M.A.,M.A.,B.Sc.,B.Ed
T.ஜம்புநாதன் M.A.,B.Sc.,M.Ed

அவர்களுக்கும் எம் உளம் கனிந்த வாழ்த்துகள்!

மேலும் மாணவர்களின் சிறப்பான கல்விக்கும்,வாழ்க்கையின் ஆரம்ப கட்ட கல்வி பயணத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எம் பள்ளி ஆசிரியர்கள் மேலும் பல விருதுகளினை பெற்றிட வாழ்த்துகின்றோம்

முன்னாள் மாணவர்கள்
தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளி
மயிலாடுதுறை

Wednesday, September 1, 2010

தமிழய்யா முனைவர்.திரு.இராமபத்திரன் பரிமளரங்கனிடம் இணைந்தார்!!!


*** மேலே முன்பு இருந்த படம் மாற்றப்பட்டுள்ளது ***

காலை அந்த செய்தி வந்தபோது ஒரு நிமிடம் மூச்சு நின்று போனது. தமிழய்யா முனைவர் திரு இமாமபத்திரன் உலக வாழ்வில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு வைகுண்டம் அடைந்தார் என்கிற செய்தி இடியாய் தாக்கியது.

அவர் பாடம் நடத்தும் பாங்கும், தனிமனித ஒழுக்கமும், அவரின் நேர்மையான உழைப்பும், தான் செய்த வேலையை வேலையாக நினைக்காமல் தன் கடமையாக நினைத்த குணமும், அவர் கம்பரை, கம்பரின் தமிழை காதலித்த அழகும், பலமொழி புலமையும், நன்றி மறவா குணமும் நினைவில் வந்து வந்து போயின.

அவர் தன் கடைசி காலத்தில் தன் மகன் வீட்டில் புதுச்சேரியில் வசித்தாலும் தன் கடைசி விருப்பத்தின் பொருட்டு ரங்கன் காலடியில், காவிரியின் மடியில் கரைய ஆசைப்பட்ட காரணத்தால் அன்னாரின் உடல் அவர் வாழ்ந்த பரிமள ரங்கநாதர் சன்னதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. என் வீட்டில் இருந்து அவர் வீட்டுக்கு கிளம்பி வரும் வழியில் எங்கள் பள்ளியை பார்த்தேன். களை இழந்து காணப்பட்டது. வாசலில் ஒரு கரும்பலகையில் அவரது மறைவு செய்தி எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

கிருஷ்ணஜெயந்தி என்று கூட பார்க்காமல் ரங்கன் தன் நடையை சாத்திகொண்டு துக்கம் அனுஷ்டித்தான். ரங்கனை சேவிக்க சந்தோஷமாக வந்த கூட்டம் இராமபத்திரன் அய்யாவின் மறைவை கேட்டு அதிர்ந்தது."கண்ணன் பிறந்தநாள் இந்த அஷ்டமி திதியில் அய்யா போய் அவனுடன் சேர்ந்தது மிகவும் பொருத்தமான நிகழ்வு" என்றே அங்கே இருந்த அத்தனை பேரும் முணுமுணுத்தனர்.

எங்கள் பள்ளி முன்னாள் தாளாளர் டாக்டர் வெங்கட்ரமணன் முதல் தற்போதைய தாளாளர் எங்கள் ஆசிரியர் திரு. ஜே.ஆர்.ஆர், முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி.புஷ்பவள்ளி, தற்போதைய தலைமை ஆசிரியர் திரு. கே.ஆர், உதவி தலைமை ஆசிரியர் திரு. கே.பி உட்பட அனைத்து ஆசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் என அந்த ரங்கனின் சன்னதியே ஒரு வித இறுக்கமான சூழ்நிலையில் குழுமியிருந்தது.

அய்யாவை போய் பார்த்தேன். ஒரு கண்ணாடி பெட்டியில்.... அந்த ஸ்ரீரங்கம் ரங்கனின் கம்பீர சயனமா? குடந்தை சாரங்காவின் எழுந்தமாதிரி ஆனால் எழாமல் நடிக்கும் சயனமா? சுகவாசி மாயவரம் பரிமள ரங்கனின் சயனமா என தெரியாத அளவு "நான் இந்த உலகில் சாதிக்க வந்ததை சாதித்து விட்டு நிம்மதியாய் ரங்கனின் பாதம் பணிந்தேன்" என்கிற ஒரு கர்வமான மந்தகாச புன்னகையோடு அதே மாயவரத்தான் வேஷ்டி என சொல்லுவார்களே அந்த பட்டை மயில்கண் காரிகன் பஞ்சகச்சம், தோளில் ஆண்டாள் மாலை மாதிரி அதே பட்டை மயில்கண் சிகப்பு பச்சைகரை உருமா, நான்கு நாட்கள் முள்வெள்ளை மழிக்கப்படாத முகம், அதே கம்பீரம்....

பக்கத்தில் அய்யாவின் பாரியாள், மகள், மகன்...

"மூணு வருஷம் முன்னே அப்போலோவில் சேர்த்த போது டாக்டரம்மா (டாக்டர் டெல்பின் விக்டோரியா அம்மா) ரொம்ப உபகாரமா இருந்தாங்க. ரொம்ப கடமைப்பட்டிருக்கோம்" - இது அய்யாவின் மனைவி!

எனக்கு சிலிர்தது. இந்த நேரத்தில் இந்த நன்றி என்னும் வார்த்தை சொல்ல வேண்டுமா என்ன? அய்யாவின் குணம் அங்கே பிரதிபலித்தது.

வெளியே வந்தேன். அவருடைய தம்பி திரு. அரங்கநாதன் தமிழய்யா(எங்கள் பள்ளி தான்) வந்து என் கையை பிடித்து கொண்டு எதும் சொல்லாமல் அப்படியே நின்றார். அவர் கண்களில் கண்ணீர். நானும் கசிந்தேன். "வாசன் அப்பா கார்த்தால வந்துட்டு போனார். உங்க அப்பா இப்போதான் வந்துட்டு போனார்" என்றார். மயிலாடுதுறை சிவாவின் அப்பா அங்கே தான் இருந்தார்.

நினைத்து பார்க்க பிரம்மிப்பாக இருந்தது. நாங்கள் எல்லோரும் அவரிடம் படித்தோம். ஆனால் அதையும் மீறி எங்க குடும்பம் எல்லாம் கூட அவருக்காக வருகின்றது அங்கே அவர் குடும்ப துக்கத்தில் பங்கெடுக்க. காரணம் அவர் ஆசிரியர் என்பதுக்கும் மேலாக அவரிடம் படித்த மாணவர்களை நடத்திய விதம் தான்.

திரும்ப வீட்டுக்கு வரும் போது நகராட்சி மேல்நிலைப்பள்ளி வழியாக வந்தேன். வாசலில் கரும்பலகையில் "எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்..." என குறிப்பிட்டு அய்யாவின் மறைவு செய்தி எழுதி வைக்கப்பட்டு இருந்தது. என்ன தான் அவர் எங்கள் பள்ளியின் மாபெரும் ஆசிரியராக இருந்தாலும் அந்த பள்ளிக்கு மாணவர் தானே 60 வருடம் முன்பாக! அதான் டெல்லிக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளை தானே! அவரைப்போலவே அவர் படித்த பள்ளிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்தேன் இப்படிப்பட்ட ஒரு ஆசிரியரை எங்கள் பள்ளிக்கும் எங்களுக்கும் தந்தமைக்காக!

அய்யாவின் ஆன்மா ஆண்டவனிடத்தில் அமைதியடையட்டும்!

Tuesday, August 31, 2010

19. தமிழாசிரியர் டாக்டர் இராமபத்ரன் அவர்கள் காலமானார்

எங்கள் அன்புக்குரிய தமிழாசிரியர் உயர்திரு ஆ. இராமபத்ராச்சாரியார் இன்று காலை புதுச்சேரியில் அவரது மகனின் இல்லத்தில் இன்று 31, ஆகஸ்ட் 2010 அன்று காலமானார். அன்னாரது ஈமக்கிரியைகள் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அவரது இல்லத்தில் இன்று தொடங்குகிறது.

ஆசிரியருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.


oOo
எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் - DBTR National Higher Secondary School, Mayiladuturai, Tamil Nadu


குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..
ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...

கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...
oOo
மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..


இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..

கடந்த ஏப்ரல் (2007) மாதத்தில் அவர் உடல்நிலை சரியில்லாதிருந்தார். அவர் பிழைப்பது மருத்துவ ரீதியாக மிகக் கடினம் அவர் இருந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர் குணமடைய வேண்டுமென்று...இவ்வாறு
பிரார்த்தித்திருந்தேன்..


Thursday, July 15, 2010

18. இந்த வார குமுதத்தில் எங்கள் பள்ளி மாணவர் சீதாராமன்

லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் தமிழின் புகழ் உலகெங்கும் பறந்து கொண்டிருக்க,தஞ்சாவூரில் பிறந்த ஒரு தமிழரின் புகழ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆர்.சீதாராமன். இன்று இவரது கட்டுப்பாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. கத்தார் நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான தோஹா பேங்க்கின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன்.வங்கித் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்கான உலக விருதை,சென்ற மாதம் பெற்றிருக்கிறார் சீதாராமன்.

பிறந்தது தஞ்சாவூர் அருகே உள்ள தரங்கம்பாடியில்.அப்பாவுக்கு ஆசிரியர் வேலை.சீதாராமனையும் சேர்த்து நான்கு குழந்தைகள்.சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தியிருக்கிறார்கள்.பிறகு வேலை விஷயமாக குடும்பம் மும்பை சென்று விட,சீதாராமனும் அவரது இன்னொரு சகோதரரும் மயிலாடுதுறை இலவச ஹாஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்கள். ‘அங்க தங்கிப் படிச்சா, எங்க ரெண்டு பேரோட செலவு அப்பாவுக்கு குறையுமேனு இங்க தங்கினோம்’ என்கிறார். இன்று லண்டன், பாரீஸ், நியூயார்க் என்று உலகப் பெருநகரங்களுக்குப் பறந்து கொண்டிருக்கும் சீதாராமன். மயிலாடுதுறையில் பள்ளிப் படிப்பு, பிறகு பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.காம் படிப்பு.

“எங்கம்மா எங்ககிட்ட சொன்னதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ‘நல்லா படிங்க, படிப்புதான் வாழ்க்கையை உயர்த்தும், எப்பவும் உங்களைவிட்டுப் போகாது’ இதைத்தான் சொல்வாங்க’’ என்கிறார் சீதாராமன். தாய் சொல்லைத் தட்டாமல் படித்த சீதாராமன் சி.ஏ.படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு கம்பெனியாக பணியாற்றி, வளர்ந்து, உயர்ந்து இன்று அரபு நாடுகளின் மிக முக்கியமான வங்கியான தோஹா வங்கியின் தலைமைப் பொறுப்பு.

சமீபத்தில் தோஹா சென்றிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் சீதாராமனைச்சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.அங்கு நடந்த விழாவில் சீதாராமனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனும் கலந்து கொண்டிருக்கிறார்.

“சீதாராமனை நான் முன்பு பல முறை சந்தித்தும் அவர் சாதனைகளைக் கேள்விப்பட்டு இருந்தாலும் தோஹாவில் அவரைச் சந்தித்து சாதனைகளை நேரில் கண்டபோது வியந்து போனேன். வங்கித் துறையில் அவர் சாதித்த சாதனைகள் பிரமிக்க வைத்தன.அந்நாட்டு அரசாங்க அதிகாரிகளும் பிரமுகர்களும் பாராட்டிய விதமே அதற்கு உரைகல். வெளியே மட்டுமல்ல அவரது இல்லமும் பிரமிக்க வைக்கிறது. அந்த வீட்டைக் காண ஆயிரம் கண் வேண்டும்.அதை ஒரு அருங்காட்சியகமாகவே அலங்கரித்து வைத்திருக்கிறார் அவரது மனைவி. எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள அருங்கலைப் பொருளை தேடிக் கொண்டு வந்து விடுகிறார்.விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு இலக்கணம் சீதாராமன் தம்பதியினர்.வங்கித் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளையும் அவர் பெற்ற விருதுகளையும் பட்டியலிட முடியாது. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளியிலும் சீதாராமனின் பேச்சாற்றல் அழகுமிக்கது’’ என்று சீதாராமனின் நல்ல குணங்களைப் பட்டியலிடுகிறார் நீதியரசர்.

இன்று உலகமெங்கும் சுற்றினாலும் தனது ஆதார வேர்களை மறந்துவிடவில்லை சீதாராமன்.அவருக்கு கல்வி தந்த பள்ளிக்கு நிதியுதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்.கண் பார்வையற்ற நாற்பது மாணவர்களைத் தனது சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.

“பணமில்லாமல், வசதியில்லாமல் ஒரு மாணவனின் எதிர்காலம் தடைப்பட்டுவிடக்கூடாது என்று கருதுகிறேன். அதனால் கல்விக்கு அதிக உதவிகள் செய்கிறேன்’’ என்கிறார் சீதாராமன்.

கல்வி ஒருவரை எந்த அளவு உயர்த்தும் என்பதற்கு இந்த தமிழர் சாட்சி.நன்றி: குமுதம் வார இதழ்


Sunday, July 11, 2010

17. எங்கள் பள்ளியின் பெருமை மிகு ஆசிரியை செல்வி. ஜெயசீதா

ஆசிரியர் தொழில் ஓரு புனிதமான தொழில். நாம் கடந்த வந்த பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நிச்சயம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஓரு மறக்க முடியாத மற்றோரு ஆசிரியர் ஜெயசீதா கணக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் தன்னலமற்ற ஓரு ஆசிரியர் இவர்.

மயிலாடுதுறையில் உள்ள தி.ப.ர.அர. தேசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்க்கும் ஆசிரியர் இவர். பள்ளி காலங்களில் நான் இவரிடம் நான் படிக்கவில்லை. பள்ளி வாழ்க்கை முடித்து அவஅகல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கும் பொழுது என் நண்பர்கள் சிலர் அந்த ஆசிரியையிடம் மாலை வேளைகளில் சிறப்புப் பாடம் டீயுசன் படிந்தார்கள், பிறகு நானும் சேர்ந்தேன். மிகப் பொறுமையாக, அன்பாக நடந்தும் ஆசிரியை. அதுமட்டும் அல்ல, கோபமே பட மாட்டார்கள்.

இவர்கள் ஏனோ திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. இப்படிபட்ட சில ஜீவன்கள் திருமணம் செய்துக் கொள்ளமால் இருப்பது கூட நம் சமுதாயத்திற்கு நல்லதோ என்று கூட எனக்கு அடிக்கடி தோணும். இவரைப் பற்றி நான் எழுத இரண்டு காரணங்கள் உண்டு. இன்று தற்செயலாக ஓர் புதிய வலைத் தளத்தைப் பார்த்தேன். http://eenippadikal.blogspot.com/ இந்த வலைப் பூவை எழுதி உள்ளர்கள் நான் படித்த அதே பள்ளியில் படித்த மாணவர்கள். அதில் அவர்களை வாழ்த்தி பின்னூட்டம் தரமுடியவில்லை. உடன் நான் படித்த பள்ளி நினைவிற்கு வருகையில் அந்த ஆசிரியரின் நினைவு வந்தது.எங்கள் பள்ளியின் ஆர்குட் குழுமத்தில் எங்கள் பெருமைமிகு ஆசிரியை ஜெயசீதா அவர்கள் பற்றி அவரிடம் படித்த மாணவமணிகள் பகிர்ந்து கொண்டது

இரண்டாவது ஓர் முக்கிய காரணம், நாங்கள் இளங்கலை கணிதம் படித்தப் பொழுது அவரிடம்ஓர் மூன்று அல்லது நான்கு மாதங்கள் படித்து விட்டு, தேர்வுகளில் நல்ல மதிப் பெண்கள் எடுக்கவில்லை.அதற்கு முழு காரணம் நாங்களே மற்றும் தேர்வும் மிக கடுமையாக இருந்தது. நாங்கள் நல்ல மதிப் பெண் எடுக்காத காரணத்தால் ஜெயசீதா ஆசிரியை எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை.நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்! கணிதம் படித்த ஆண்டு 1988, அன்று ரூபாய் 200 மிகப் பெரியப் பணம், அதுவும்கிட்டதட்ட 5 நபர்களிடம். எவ்வளவுப் பெரிய மனம் வேண்டும் அவர்களுக்கு! சுயநலமில்லா, பொருளின் மீது பற்று இல்லா ஓர் ஜீவன்!

தமிழகம் செல்லும் பொழுது எல்லாம் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும் பொழுது அந்த ஆசிரியை பார்ப்பது வழக்கம், இன்றும் அதே அன்புடன், அதே புன்னகையுடன், சற்று வயதான தோற்றத்துடன் ஜெயசீதா....வாழ்க பல்லாண்டு!

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


நன்றி
மயிலாடுதுறை சிவா...

”கணிதப் பாடத்தில் மோசமாகப் படித்தவர்களுக்கு அவர் ஒ்ரு கடவுளே.. வெறும் 20 சதவிகிதம் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த என்னை 90% கணிதத்த்தில் வாங்க வைத்த பெருமை என் ஆசிரியை ஜெயசீதாவையேச் சேரும்” என்கிறார் சுரேஷ். படித்த பொழுதை விட, தான் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து வேலை செய்யும் பொழுது, ஆசிரியையின் மகத்துவத்தை நினைவு கூர்ந்த சுரேஷ் , மயிலாடுதுறை சிவா, ஆயில்யன், தொல்காப்பியன் போன்ற மாணவர்கள் எங்கள் பள்ளியின் நிலையான சொத்து...
16. நமது பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விவரம்

சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் நமது பள்ளி 96 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 416

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 398

பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் : மணிகண்டன் 486/500

பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் : மணிகண்டன் 481/500

பள்ளியிலிருந்து மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற முயற்சி செய்யப்பட்டது. மாணவர் மணிகண்டனிடம் கேட்ட பொழுது தான் தமிழ்ப் பாடத்தில் மட்டும் சிறிது மதிப்பெண் குறைந்து விட்டதாகச் சொன்னார்.

பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. இராஜேந்திரனிடம் கேட்டபொழுது “மாணவர்கள் மொழிப் பாடத்தில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை, மற்றும் பெற்றோரும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானது என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் விதைப்பதினால் மாணவர்களும் அந்தப் பாடங்களில் அதிக அக்கறை செலுத்துவதில்லை“ என்று கூறினார்.

இந்த வருடம் பள்ளி்யின் தமிழ் விடைத்தாள்கள் பாளையங்கோட்டை தமிழாசிரியர்களிடம் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழாசிரியர்கள் சிறுசிறு சந்திப்பிழைகளுக்கெல்லாம் மதிப்பெண் குறைத்து விடுவார்கள் மாணவர்கள் எழுதும் போது மிகமிக கவனமாக எழுதவேண்டும் என்று கூறினார்.

இந்த வருடம் மாநில அளவிலான முதல் மதிப்பெண் 591/600 என்றும் நமது பள்ளி மாணவர் மணிகண்டன் 5 மதிப்பெண்களில் முதலாமிடத்தைத் தவறவிட்டது மிக வருந்தத்தக்கதெனவும், அடுத்த (நடப்பு) கல்வியாண்டில், முதல் மதிப்பெண் பெறக்கூடிய அளவிலான மாணவர்கள் இருக்கிறார்களெனவும் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்திலிருந்து - சீமாச்சு...

15. பள்ளியில் சமீபத்திய புகைப்படங்கள்
சமீபத்திய CEO (Chief Education Office) & DEO (District Education Officer) ஆய்வுக்கு வந்த பொழுது பள்ளி மாணவி புதிய Audio Visual உபகரணங்களின் உதவியுடன் மனிதனின் இதய இயங்குவதை விளக்குகிறார்.

புகைப்படத்தில் பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. இராஜேந்திரன், உதவித் தலைமையாசிரியர் திரு கே. பத்மனாபன் மற்றும் ஆய்வாளர்கள்.

Thursday, May 20, 2010

14. எங்க ஸ்கூல் பிள்ளைகளுக்குப் பாராட்டுக்கள் !!

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்திருக்கிறதே, நாமளும் நம்ம பள்ளோடத்திலிருந்து 203 பேரைத் தேர்வுக்கு அனுப்பியிருக்கோமேன்னு கொஞ்சம் கவலையோடத்தான் தலைமையாசிரியர் இராஜேந்திரன் அவர்களுக்குத் தொலைபேசினேன்.

இந்த வருடம் 12ம் வகுப்பு கணித வினாத்தாள் எந்த வருடமும் இல்லாத அளவில் கடுமையாக இருந்ததென்று கேள்வி. பொதுவாகக் கணிதத் தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்கள் சென்ற 10 வருடங்களுக்கான தேர்வு வினாத்தாள்களிலிருந்து உள்ள் வினாக்களை மாதிரி வினாக்களாக வைத்து பழகுவார்கள். இந்த வருடம் வினாத்தாள் குறித்த ஆசிரியர் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காக, சென்ற ஐந்து வருட கணித வினாத்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு அதில் வராத மாதிரி கணக்குகளைக் கேட்டிருந்தார் என்பது பரவலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குற்றச்சாட்டு. கணித்தத்தில் முதுநிலைப் படிப்புப் படித்திருக்கும் என்னால் அந்த குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லையாயினும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் நிலையிலிருந்தும், அவன் வாழ்க்கையையே முடிவு செய்யும் ஒரு தேர்வினைச் சந்திக்க இருந்த ஒரு மாணவனின் மன அழுத்தத்தையும் வைத்துப் பார்த்தால் குற்றச்சாட்டில் கொஞ்சம் அதிகமாகவே நியாயமிருப்பதாகப் பட்டது.

எங்கள் பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய‌ 203 மாணவர்களில் 12 பேர் தவிர மீதி 191 (94 %) மாணவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த 12 மாணவர்களில் 9 பேர் கணீதத்தில் மட்டுமே மதிப்பெண் குறைந்திருக்கிறார்கள். கணித வினாத்தாள் சரியாக இருந்திருக்கும் பட்சத்தில் எங்கள் பள்ளி 98% தேர்ச்சி பெற்றிருக்கக் கூடும்.

சென்ற வருடம் எங்கள் பள்ளி பெற்ற் 100% தேர்ச்சி விகிதம் இந்த வருடமும் பெற வேண்டுமென்று ஆசிரியர்களும் மாணவர்களும் உழைத்திருந்தாலும இந்த வருடத்தின் மாநிலம் தழுவிய தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும் பொழுது, 94 சதவிகிதம் மிக நல்ல விகிதமாகத்தான் படுகிறது.

எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் 1132/1200 பெற்ற மாணவர் ஸ்ரீநாத்துக்கும், இரண்டாவது மதிப்பெண் 1127/1200 பெற்ற மாணவர் தினேஷுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இதில் மாணவர் தினேஷ் கணிதம், இயற்பியல், வேதியியல் கூட்டில் 196/200 எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற வருடம் எங்கள் பள்ளி மாணவி ஆர்த்தி இந்த மூன்று பாடத்திலும் 200/200 எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மொழிப் பாடங்களில் போதுமான அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு பெற்றோரும் ட்யூஷன் ஆசிரியர்கள் மட்டுமே காரணம். "தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாஸானாலே போதும்" என்று வருட ஆரம்பத்திலிருந்தே பெற்றோர் அறிவுறுத்திவிடுவதால் (அவங்க கவலை அவங்களுக்கு !!) மாணவர்கள் இந்த இரண்டு பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில்லை. அதனால் மட்டுமே இந்த வருடம் மாநில அளவிலான ரேங்க் எதுவும் எடுக்கவில்லை.

தேர்ச்சி பெற்ற் மாணவர்களுக்கு வாழத்துக்கள் !!

மாணவர்களை மிகச் சிறந்த முறையில் பயிற்றுவித்து சிறந்த தேர்ச்சி விகிதம் காட்டிய ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்கள் !!!

பள்ளி மாணவர்கள் ஸ்ரீநாத், தினேஷ் இருவருக்கும் சிறப்புப் பாராட்டுக்கள் !!


Friday, March 26, 2010

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!!

இன்றைக்கு ஒரு நண்பரை பார்த்தேன். பார்த்தேன் என்பதை விட தரிசித்தேன் என்பதே சரி! காரணம் சீமாச்சு அண்ணாவின் மிகப்பெரிய தேடல் லிஸ்ட் நண்பர். கிட்ட தட்ட எனக்கு சீனியர் ஹீரோ!

திரு.பஸ்ருல் ரஹமான். அப்போது அவரால் ஒரு நாள் எங்களுக்கு லீவ் கிடைத்தது என்பதே எங்களுக்கு அவரை ஹீரோ ஆக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.


அவர் பால் பேட்மிட்டனில் நேஷனல் சாம்பியன். அப்போதே பல கப் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்.

அது போகட்டும். இன்றைக்கு அவர் உதிர்த்த வார்த்தைகள்!!

"தம்பி எப்படிடா இருக்கே?"

"அண்ணே எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே!"

"டேய் நீ தானே உன் வண்டி வந்து இடிச்சே! டேய் இது இனோவாடா தம்பி"

"ஸோ வாட்! மாயவரம் ரோட்டுக்குக்கு BMWவும், ஒபாமா காரும் ஒரே தராசு தான். ஆனா என்னை வா, போ, வாடா, போடா போடும் தகுதி யாருக்கும் கொடுக்கலை இன்னும்"

"டேய் நான் தாண்டா! எட்டாம் நம்பர் கிளியனூர் பஸ்"

"அண்ணா"

"போகட்டும்டா! டேய் நம்ம வாசன் நம்ம ஸ்கூல் கட்ட பயங்கரமா ஏர்பாடு ஆகுதாமே"

ஆமா அண்ணா"

"டேய் உனக்கு தெரியுமா? நீ கேள்வி பட்டதுண்டா நம்ம ஸ்கூல்ல தான் இஸ்லாமிய ஆண்பிள்ளைங்க எந்த நாளும் கைலி அணிந்து வரலாம். தவிர வெள்ளி கிழமை 2 மணி நேரம் மதிய பிரேயருக்காக பர்மிஷன்"

"ஓ அப்படியா அண்ணே"

"என்னடா சுரத்தே இல்லாம பேசுர"

"இல்லை அண்ணே உடம்பு சரியில்லை"

"சரி சரி நம்ம கே.ஆர் சார் எப்படி இருக்கார்?"

"நல்லா இருக்காரு அண்ணே"

"மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு...முதன் முதலா தலைமை ஆசிரியர்! எனக்கு மனசு குளுந்து போச்சுடா தம்பி"

"இதுக்கு எல்லாம் காரணம் என்னன்னு நினைக்குறெடா"

"தெரியலைண்ணா"

"நம்ம ஸ்கூல் நிர்வாகம் அப்படி!"

"அஃகோர்ஸ் நாங்க எல்லாம் நாட்டுக்கு வெளியே இருந்தாலும் அம்மா மடி மாதிரிடா நம்ம ஸ்கூல். நீ என்னவோ சுரத்தே இல்லாம பேசுற. சரி பை நாளை பார்ப்போம்"

**********

நான் சுரத்தே இல்லாமல் இல்லை! எங்களை சுத்தி இருக்கும் நீடூர், வடகரை, இலந்தங்குடி, கிளியனூர் உட்பட 23 இஸ்லாமிய கிராமங்கள் , அந்த ஊர் பெரிய மனிதர்கள் எல்லாரும் படித்த பள்ளி எங்கள் பள்ளியே! இதில் தான் எனக்கு பெருமையே!!!!

"

Wednesday, March 24, 2010

12. இறைவர் பூசனை - ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம்

கானகமெங்கும் இங்குமங்குமாய் ஓடி, அலையாய் அலைந்து, ஏதோ ஒரு மரத்தின் கொம்பில் இருக்கும் தேன் அடைதனைக் கண்டு, அதில் இருக்கும் தேனையும் வடித்தாயிற்று. ஆம், பெற்ற பிள்ளைக்கு ஊட்டச்சத்தாய், நோய்க்கு மருந்தாய் தேவைப்படுவதுதான் அந்த மாமருந்து. அடுத்தபடியாக அதைப்பக்குவமாய் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிய தருணம் எப்படியோ, அப்படிப்பட்ட தருணம்தான் ஜெகதீசனுக்கும்!

தோஹா! பாரசீக வளைகுடாவின் தீபகற்ப நாடான கட்டார் நாட்டின் தலைநகர்தான் இந்த தோஹா என்கிற நகரம். அராபிய மொழியில், தோஹா என்றால் பெரிய மரம் என்று பொருள். அதாவது, பெரிய மரங்களைக் காவு கொண்ட நகரம் என்கிற பொருளில் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். அங்கேதான் தமிழகத்து இளைஞனான ஜெகதீசனுக்கு வேலை. மாதமெல்லாம் உழைத்து ஈட்டிய வருவாயை, வங்கியினூடாக தன் இந்தியாவில் மயிலாடுதுறையிலுள்ள தன் பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டிய அலுவலில் மும்முரமாய் நம் ஜெகதீசன்.

“மாமு, நீங்க யார்கிட்ட இந்தவாட்டி டிமாண்ட் டிராப்ஃட் கொடுத்து அனுப்பப் போறீங்க? நானும் கொடுத்து அனுப்பணும் மாமு!”

“ஜெகதீசா, நான் நம்ம ஜவஹர் பாய்கிட்ட கொடுத்துட்டேன் நேத்தே!”

“அட, அப்படியா? ஜவஹர் அண்ணன் எப்ப ஊருக்கு போறாரு?”

“நாளை மறுநாள்னு நினைக்கேன், வியாழக்கிழமை மதியம்!”

“அப்படியா, அப்ப நான் இப்பவே போயி பேங்க்ல டீடீ எடுத்துட்டு வந்திடுறேன் மாமு!”

"சீக்கிரம், சலாவுக்கு நேரமாகுது பாருங்க; பேங்க் மூடிடுவாங்க இல்லையா!”

அல் திவான் வீதியும் அல் ஷமால் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு மிக அண்மையில் இருக்கும் ஜெகதீசனுக்கு, வாடி முஷேரப் வீதியில் இருக்கும் தோஹா வங்கிக்குச் செல்ல எப்படியும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆகும். அதே சமயத்தில் சலா என்று சொல்லப்படுகிற தொழுகைக்கு இன்னமும் ஒண்ணரை மணி நேரம்தான் இருக்கிறது. அதற்குள் எப்படியாவது வங்கி வேலையை முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால், ஜவஹர் பாய் கிளம்பி விடுவார்; அடுத்த வாரம் வரை ஊருக்கு பணம் அனுப்புவதைக் கிடப்பில்தான் போட வேண்டும். எப்படியும் அனுப்பியே தீருவது என்ற மனநிலையோடு வங்கிக்கு விரைந்தார் ஜெகதீசன்.

துரித கதியில் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில், குறுக்குச் சாலையான அப்துல்லா பின் தானி வீதி வழியாகச் சென்று வாடி முஷேரப் சாலை அடைகிறார் ஜெகதீசன். அடைந்த மாத்திரத்திலேயே, மற்றொரு வங்கியான யூனியன் வங்கியில் இந்தியர்கள் பெருமளவிலாகக் கூடி வரிசையில் நிற்பதைக் கண்டதும் ஜெகதீசனுக்கு முகம் சோர்ந்தது. என்றாலும், மனம் தள்ராது தோஹா வங்கியையும் சென்று பார்த்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

யூனியன் வங்கிக்கு மிக அருகண்மையிலேயே தோஹா வங்கி என்பதால், சில நிமிடங்களில் தோஹா வங்கியை அடைந்து விட்ட ஜெகதீசனுக்கு முகம் மலர்ந்தது. யூனியன் வங்கி அளவுக்கு கூட்டம் இல்லை; என்றாலும் சுமார் பத்துப் பதினைந்து பேர் ஏற்கனவே வரிசையில் நினிறிருந்தார்கள்.

பொறுமையாக நின்றிருந்தார் ஜெகதீசன். இனியும் தொழுகைக்கு கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இருக்கின்றன எனும் தைரியமும் கூட. தனது முறையும் வந்தது. தொகையைச் சொல்லி, நிரப்பிய படிவத்தையும் வங்கி அலுவலர்களிடத்தே கொடுத்து ஆயிற்று. மற்றவர்களோடு ஜெகதீசனும் அமர்ந்திருக்க, வந்திருந்த அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கான சான்றளிக்கப்பட்ட காசோலையும் அவர்களிடத்தே ஒப்படைக்கப்பட்டது.

தனக்குப் பின்னாலே வந்தவர்களுக்குக் கூட வேலை முடிந்து விட்டதே, தனக்கு மட்டும் ஏன் இன்னும் அழைப்பு வரவில்லை எனும் கவலை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது ஜெகதீசனுக்கு. தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால், வங்கியை மூடிவிடுவார்கள். என்ன செய்வது? இனி அடுத்த வாரம்தான் கொடுத்து அனுப்ப முடியும் எனும் கவலை தோய்ந்த முகத்தோடு இருந்த ஜெகதீசனுக்கு, வழமையான அறையை விடுத்து வேறொரு அறையில் இருந்து அழைப்பு வந்தது. ஜெகதீசனுக்கு இப்போது வேறு பயம் பற்றிக் கொண்டது. தமது வங்கிக் கணக்கில் ஏதாவது குளறுபடியாக இருக்குமோ என்கிற கவலைதான் அது.

அறைக்குள் நுழைந்ததுமே ஒலித்தது தமிழ்க் குரல்! புலம் பெயர்ந்த நாட்டிலே, நாட்டின் தலைசிறந்த வங்கி அலுவலராக ஒரு தமிழரா?? ஜெகதீசனுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியும் அளவு கடந்த ஆச்சரியமும் மேலோங்கியது.

“வாங்க ஜெகதீசன்! நீங்க மயிலாடுதுறையா??”

“ஆமாங்க சார்!”

“அதான், படிவத்துல பார்த்தேன்! நானும் மயிலாடுதுறைதான்!! ஆமா, நீங்க ஊர்ல....?”, இழுத்தார் அந்த அதிகாரி.

“சார், நான் DBTR தேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே.ஆர். இராமமூர்த்தி ஆசிரியரோட மகன் சார்! ஸ்கூல்ல JRR ன்னு சொன்னால் எல்லாருக்கும் எங்க அப்பாவைத் தெரியும் சார்”

ஜெகதீசன் சொல்லி முடிப்பதற்குள் அந்த அலுவலர் எழுந்து, ஜெகதீசனை உச்சி முகர்ந்து ஆரத் தழுவிக் கொண்டார். ஜெகதீசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பள்ளியின் மகிமையா? அல்லது தனது தந்தையின் புகழா?? எதுவாயினும் அது தனக்குப் பெருமையே என்கிற பரவசத்தில்,

“சார், நீங்க??”

”ஜெகதீசன், நானும் DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவன் தான்... உங்கப்பாவோட மாணவனுங்கூட... இப்ப இந்த வங்கியோட தலைமை நிர்வாகி, CEOவாக வேலை செய்துட்டு இருக்கேன்!”, ஒரு சில மணித் துளிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்,

“நான் இப்ப இந்த நிலையில இருக்கேன்னா, அதுக்கு உங்கப்பாதான் காரணம் தெரியுமா? அந்தப் பள்ளிக்கூடத்தையும் உங்கப்பாவையும் மறக்கவே முடியாதுப்பா!! சார் இப்போ எப்படி இருக்காங்க? உடல் நிலையெல்லாம் நல்ல நிலைமையில் இருக்காரா?”, கண்களின் ஓரத்தில் ஆனந்தக் கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

அறையில் நிலவிய பரவசத் தருணத்தில் ஜெகதீசனுக்கும் மெய் சிலிர்த்தது. அதனூடாக வினவினார், “சார், உங்க பேரு?”

உணர்ச்சிவயப்பட்டதில் இருந்து மீண்டவாறே பேசலானார், “ஆங்...ஜெகதீசன்... சொல்ல மறந்துட்டனே? எம் பேரு சீத்தாராமன். குத்தாலத்து சீத்தாராமன் அப்படின்னு உங்க அப்பாகிட்டச் சொல்லுங்க. என்னை அவருக்கு நல்லாத் தெரியும்! சாரை நான் அவசியம் சந்திக்கணும்னு சொன்னேன்னு சொல்லுங்க. என்னோட நமஸ்காரத்தையும் மறக்காமல் சொல்லிடுங்க.”

“சரிங்க சார்!”, என்று கூறி, வங்கி வேலையை முடித்த கையோடு புறப்படலானார் ஜெகதீசன்.

அப்பாவின் மாணவர்கள் என்று நிறைய பேரை நிறைய பதவிகளில் சந்தித்தி்ருந்தாலும் கத்தார் நாட்டில் முக்கிய வங்கி்யின் முதன்மை மேலதிகாரியாக சீத்தாராமனைச் சந்தித்ததும், அவர் தன் அப்பாவின் பெயரைக் கேட்டவுடனேயே முகத்தில் காட்டிய உணர்ச்சி பாவங்களும் ஜெகதீசனை மிக்க வியப்பிலாழ்த்தியது. 40 வருடங்களாக ஒரு ஆசிரியரின் மகனாக இருக்கும் நிலையில் தனக்குக் கிடைத்த பல்வேறு விதமான அனுபவங்களில் இது அவனுக்கு மிக மகத்தானதாக இருந்தது. எப்படியும் வெள்ளிக்கிழமை அப்பாவுக்கு தொலைபேசும் போது சீத்தாராமனைச் சந்தித்தது குறித்துச் சொன்னால் மகிழ்ச்சியடைவார். அவருக்கு சீத்தாராமனை நினைவிருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆசிரியர் தொழிலில் அதுவும் 50 ஆண்டுகால ஆசிரியர் தொழிலில் அப்பா சில ஆயிரம் மாணவர்களை உருவாக்கியிருப்பார். ஒவ்வொருவரையும் நினைவில் கொள்வதென்பது முடியாத காரியம். பலவிதமான நினைவலைகள் மனதைச் சுழற்ற ஜவகரிடம் டீடீயை நேரத்தில் கொடுக்க வேண்டுமென்ற பிரதான கவலையே முன்னால் நின்றது.

oOo

வழக்கமான லெளகீக வாழ்க்கையில் காலதேவனின் காலச் சக்கரம் சுழன்றதில் சில மாதங்கள் கழிந்தது. ஜெகதீசனுக்கு வாழ்க்கைத்தரமும் சற்றே உயர்ந்தது. கட்டார் மற்றும் வளைகுடா நாடுகளை பெற்றோருக்குக் காண்பிக்கும் பொருட்டு பெற்றோரை அழைத்து வந்தார் ஜெகதீசன். வந்தவர்கள் பல இடங்களைக் கண்டு களித்தனர். அதனூடாக ஜெகதீசன் தன் தந்தையிடம் அவரது மாணவரான சீத்தாராமன் அவர்கள் பற்றிய விபரத்தைக் கூறவே, அவரும் தோஹா வங்கிக்கு வங்கியின் தலைமை அதிகாரியான தனது மாணவனைக் காணச் சென்றார்.

“சார், உங்களுக்கு என்ன வேணும்?”

“நான், சி.இ.ஓ சீத்தாராமன் சாரைப் பார்க்கணும்!”

“என்னது? சி.இ,ஓ சாரைப் பார்க்கணுமா?? அப்பாயின்ட்மென்ட் இருக்கா??”

“இல்லீங்களே?”

“அப்படின்னா, இங்க உக்காருங்க! பிஸியா இருப்பாரு ! முடிஞ்சா பார்க்கலாம்!!”

காத்திருந்தார், காத்திருந்தார், காத்துக் கொண்டே இருந்தார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் அல்லவா? பொறுமையே உருவாகக் காத்திருந்தார். வேலையின் உச்சத்தில் மூழ்கி இருந்த அலுவலர்களில் ஒருவர், பெரியவர் ஒருவர் வெகு நேரமாகக் காத்திருக்கிறாரே என நினைத்தவரானார். சற்று இரக்க குணம் மிகுந்தவர் போலத் தெரிகிறது. அப்படி நினைத்த அந்த அதிகாரி, தலைமை நிர்வாகியான சீத்தாராமன் அவர்கள் அறைக்குச் சென்று,

“சார், வணக்கம்! உள்ள வரலாமா?”

“யெஸ்!”

“சார், யாரோ உங்க ஆசிரியராம், ஜே.ஆர்.ஆர்னு சொல்லிட்டு ஒருத்தர் ரிசப்சன்ல காத்திட்டு இருக்கார் சார். அவரை....”, தயங்கித் தயங்கி சொல்ல முயற்சித்தார் அந்த அலுவலர்.

“யோவ்... என்னையா சொல்லுறீங்க? ஜே.ஆர்.ஆர் சார், இங்க வந்திருக்காரா?? யோவ், அவரைப் பார்க்க நான் அல்லவா போகணும்?? ஏன்யா அவரைக் காத்திருக்கச் சொன்னீங்க??”

தனது ஆசானைக் காத்திருப்பில் அமரச் சொல்லிவிட்டார்களே என்கிற பரிதவிப்பில், ஏதோ செய்யக் கூடாத செயலைச் செய்து விட்ட குற்ற உணர்ச்சியில் கிளர்ந்து எழுந்தார் அந்த நல்ல மாணவரும், ஆசானின் மீது பயபக்தியும் கொண்ட தோஹா வங்கியின் தலைமை நிர்வாகியான சீத்தாராமன். அத்தோடு நில்லாமல், தனது ஆசான் ஜே.ஆர்.ஆர் இருக்கும் இடம் நோக்கித் தானே விரைந்து செல்கிறார்.

மாதா, பிதா, குரு தெய்வம் என்றல்லவா படித்தோம்? அந்த குருவான விசுவாமித்திரரே, தனது குருவான ஜே.ஆர்.ஆர் உருவில் தன்னைக் காண வந்திருப்பதைப் போலத்தான் உணர்கிறார், DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவரான இந்த சீத்தாராமன். தான் இன்றைக்கு ஒரு பன்னாட்டு வங்கியின் தலைமை நிர்வாகியாக இருப்பதற்கு இவர்தானே காரணம் என்கிற தாக்கத்தில் கட்டுண்டு போகிறார் இந்த மாணவர்.

ஆசானைத் தாள்பணிந்து, வரவேற்று தன் அறைக்கு அழைத்துச் சென்றார். வங்கி அலுவலர்களும், வாடிக்கையாளர்களும் அக்காட்சியை வியந்து கண்டனர். ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு எத்தகையது என்பதை அக்காட்சிப் பறைசாற்றிச் சொல்லியது.

நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். முத்தாய்ப்பாகக் கேட்டார் அந்த சீரிய மாணவர், “சார், என்னோட வாழ்க்கையே உங்களாலதான் சார். நான் உங்களுக்குக் குருதட்சிணையா என்ன தரணும் சார். தயங்காமச் சொல்லுங்க சார். இது என்னோட பணிவான விண்ணப்பம்!”

ஆசிரியர் பெருந்தகை எதுவும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அவர் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியதைப் பெருமையாக நினைப்பதாகவும், அங்கே அவர் செய்தவை எல்லாம் தனது கடமை என்றும் சொல்லி மறுத்தது கண்டு கண்கலங்கிப் போனார் சீத்தாராமன். ஆசிரியரின் பெருமையை தனது பள்ளிக்காலத்திலேயே அறிந்திருந்தாலும், தன் ஆசிரியர் ஒ்ரு சொக்கத்தங்கம்தான் என்ற ஒரு பெருமையே அவரையும் தற்பெருமை கொள்ளச் செய்தது. ஆசிரியர் தொழிலில் மாணவனின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன்னலம் கருதாது பணியாற்றும் மிக நல்ல ஆசிரியர்களை 110 வருடங்களுக்கும் மேலாகக் கொண்டது அந்தப் பள்ளி. அந்த ஆசிரியர்களுக்கெல்லா தலைமைஆசிரியரான ஜேஆர் ஆரா “எனக்கு இதைக் கொடு” என்று மாணவனிடம் கேட்டுவிடப் போகிறார். சீத்தாராமனும் சம்பிரதாயத்திற்காகக் கேட்கவில்லை, ஆசிரியரும் சம்பிரதாயத்திற்காக மறுக்கவில்லை. இருவர் உள்ளங்களுமே அதை மிக நன்றாக அறிந்திருந்தன.

“சார், முடியவே முடியாது! நீங்க எதனா சொல்லியே ஆகணும். இல்லாட்டி, என்னால நிம்மதியாவே இருக்க முடியாது சார்!! நான் ஸ்கூல்ல படிக்கும் போது நீங்கள் எனக்களித்த தனிப்பட்ட கவனமும் வழிகாட்டலும் மட்டுமே எனது இன்றைய நிலைக்குக் காரணம்.. என் கடமையை நான் செய்ய ஒ்ரு வழி சொல்லுங்கள் சார்”, இறைஞ்சினார், உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த சீரிய மாணவரான சீத்தாராமன்.

நல்லதொரு வாய்ப்பு தனக்குக் கிடைக்கப் பெற்றதையும், தனது மாணவர்களுள் ஒருவரான சீத்தாராமனும் இதற்குக் கடமைப்பட்டவன்தானே என உணர்ந்த, ஆசான் ஜே.ஆர்.ஆர் அவர்கள் வாய் திறந்து சொன்னார்,

“அப்படியா சீத்தாராமா, அப்ப எனக்கு உங்களால ஒரு காரியம் ஆகணுமப்பா!”

“ சொல்லுங்க சார்! அது என்னோட பாக்கியம்!! ப்ளீஸ் சொல்லுங்க சார்....” - ஆசிரியர் எதைச் சொன்னாலும் தன்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை சீத்தாராமனிடம்.

“நம்ம பள்ளிக்கூடக் கட்டடமெல்லாம் நீ படிக்கிறதுக்கு முன்னாடி கட்டினதுதான். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் 50 வயசுக்கு மேல ஆறது. மழை பெயஞ்சா கட்டிடமெல்லாம் ஒழுகறது. பசங்கள்ளாம் வகுப்புல உக்கார்ந்து படிக்கக் கஷ்டப் படறாங்க. நீங்க உங்களால முடிஞ்சதை.....”, அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே இடைமறித்தார் சீத்தாராமன்.

”சார், நான் செய்யுறேன் சார். அது எவ்வளவு ஆனாலும் நான் செய்யுறேன் சார்!!”, ஆசிரியர், மாணவர் இருவருமே புளகாங்கிதமடைந்தனர்.

கல்விக்கூடங்கள் கோயில்கள் என்பதும், கோவிலில் இருப்பது தெய்வம் என்பதும் இவர்கள் வாழ்க்கையில் உண்மையாகிப் போனதுதான் வரலாறு. பத்து இலட்சம் ரூபாய் என்கிற திட்ட மதிப்பீட்டில் வேலைகளைத் துவங்க, மயிலாடுதுறை தேசியத் துவக்கப் பள்ளியின் கோபால இராகவ சர்மா பிளாக் எனும் உபகட்டிடமானது உருவானது பதினேழு இலட்ச ரூபாய்ச் செலவில். மனமுவந்து முழுத்தொகைக்கும் பொறுப்பேற்றார், கல்விக்கும் அறத்திற்கும் பெருமை சேர்க்கும் இந்த சீத்தாராமன்.

நல்லதொரு நாளில், பள்ளிக்கட்டிடத் திறப்பு விழாவானது செவ்வனே நடத்தப்படுகிறது. முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்ப்பொது மக்கள் என அனைவரும் திரளாக வந்திருந்து விழாவுக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

அப்போது அத்தனை பேர் முன்னிலையிலும் நடந்தேறிய காட்சியில், அந்த தசரத இராமனே வந்து இந்த சீத்தாராமன் உருவில் தோன்றுகிறார். கட்டார் நாட்டிலே, பல கோடிகளைக் கட்டியாள்கிற உயர்ந்த பதவியில் வீற்றிருக்கும் தலைமை நிர்வாகியானவர், அந்த நிமிடத்தில், அந்தப் பள்ளியின் மாணவர்களுள் ஒருவர் மட்டுமே என்கிற சூழலில் தன்னை இருத்திக் கொண்டு, தன்னையும் மயிலாடுதுறையைச் சார்ந்த சமுதாயத்தையும் மேன்மைப்படுத்துகிற ஆசானின் பாதங்களை, தரையில் வீழ்ந்து தொட்டு வணங்குகிறார்! காட்சியைக் கண்டவர் மனம் நெக்குருகிப் பணிவில் நண்ணி நெகிழ்கிறது. DBTR தேசியத் துவக்கப் பள்ளியும் பொன்னொளி வீசும் தோற்றத்தோடு மிடுக்கோடு காட்சியளிக்கத் துவங்குகிறது!!

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்!
புதிய கட்டிடத் திறப்பு விழாவில் ஆசிரியர் வழியொற்றிப் பின் தொடரும் மாணவரும் அவர் குடும்பத்தாரும்


ஆ்சிரியர் வழிகாட்டலில் தந்தைபெயரில் தான் அமைத்த பள்ளிக்கட்டிடத்தை தன் தாய் கையால் திறந்து வைக்க, தன் குழந்தைகள் அதைப் பெருமையுடன் வழிகாட்டலாய் நோக்க கடமை முடிக்கிறார் சீத்தாராமன்


தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியைகளுடன் சீத்தாராமன்ஆச்சார்ய தேவோ பவ! பள்ளியின் விழாமேடையில் ஆசிரியன் தாள் பணியும் மாணவர் சீத்தாராமன் - தன் ஆசிரியரையும் மாணவரையும் பெருமையுடன் மடி சுமக்கும் எங்கள் பள்ளி மேடை


அவையத்து முந்தியிருந்த மாணவனை பெருமையுடன் தன் அருகமர்த்திய ஆசிரியர் ஜே ஆர் இராமமூர்த்தி


உங்களைப் போல நாங்களும் வருவோம் என்று முன்னாள் மாணவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் இந்நாள் மாணவர்கள்Wednesday, January 27, 2010

11. எங்கள் பள்ளியில் குடியரசு தின விழா - புகைப்படங்கள்

எங்கள் பள்ளியில் இந்திய குடியரசு தின விழா 26.01.2010 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.. அவ்வமயம் எடுத்த புகைப்படங்கள்.. பள்ளி மாணவ மாண்விகள் பார்வைக்காக...

பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் நிகழ்ச்சிக்கு முன்பாக..


பள்ளி ஆசிரிய ஆசிரியைகள்.. நிகழ்ச்சி அரங்கத்தில்பள்ளி மேடை நிகழ்ச்சிக்குத் தயாராகிறது,...


எங்கள் பள்ளி ஆசிரியை திருமதி விஜயலக்ஷ்மி ராமநாதன் அவர்கள் கொடியேற்றி வைக்கிறார்கள்கொடியேற்றம்..
கொடியேற்றம்
பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. ராஜேந்திரன் அவர்கள் முன்னுரை..


ஆசிரியை திருமதி விஜயலக்ஷ்மி ராமநாதன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்..