வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, July 15, 2012

39. சட்..டென நனைந்தது நெஞ்சம் !! சர்க்கரையானது கண்ணீர் !!

மிகப் பெரீய்ய யாகம் முடித்து அமர்ந்திருந்தார் மன்னர்.  இறையருளால் எல்லாப் பகையையும் வென்று சாம்ராஜ்யத்தையே விரிவுபடுத்தி இனி இந்த உலகில் சாதிக்க வேண்டியதில்லை என்ற எந்தத் தேவையையும் இல்லாத பரிபூரண அமைதி மன்னனிடம். இருக்கும் மனநிறைவைத் தக்க வைக்கும் எண்ணத்தில் அமைந்தது தான் மன்னனின் யாகம்.

மிகப்பெரிய்ய யாகசாலை.. ஆயிரக்கணக்கில் யாக குண்டங்கள்.. நாட்கணக்கில் நடந்த வேத கோஷங்கள்.. இது வரை கேள்விப்பட்டிராத வரையில் நடந்த தான தர்மங்கள்.. ஏழைகள் அனைவருக்கும் மன்னன் அள்ளித்தந்ததில் மிக்க மகிழ்ச்சி... மன்னனைப் புகழாத நபரில்லை.. இதைவிட வேறு யாரும் பெரீய்ய அளவில் யாகமும் தானங்களும் தர்மங்களும் செய்துவிடமுடியாதென்ற இறுமாப்பு மன்னனிடம்..

மிகமாந்த களிப்புடனும், பெருமிதத்துடனும் ஒரு வகையான கர்வத்துடனும் யாகம் முடிந்த யாக சாலையை வலம் வருகிறான் மன்னன் !!

என்ன விதமான மனநிலை இருந்திருக்கும் மன்னனிடம் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்!!

வலம் வரும் மன்னன் யாகசாலையின் ஓரத்தில் ஒரு அதிசயமான விலங்கைப் பார்க்கிறான்.
கொஞ்சம் பெரிய்ய அணில் போலவும் மரநாய் போலவும் ஒரு மிருகம்.. மிக அடர்த்தியான முடிகளுடன் நீண்ட வால்.. அதன் உடலின் கீழ்ப்பாகம் சரியாக பாதியிலிருந்து உடலும் வாலும் தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது... உடலின் மேற்பாகம் சாதாரணமாகவும் அரைக்குக் கீழே தங்கமாகவும் மின்னிய உடலுடன் யாகசாலையின் தர்மம் கொடுக்கும் இடத்தில் சிந்தியிருந்த நீரில் புரண்டு கொண்டிருந்தது...

என்னதான் செய்கிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறான் மன்னன்... ஒரு விதமான ஆச்ச்ர்யத்துடன் அந்த மிருகத்தின் அருகில் செல்கிறான்..


“மன்னா நலமா?”

உயர்ந்த புருவத்துடன் தன்னிடம் பேசும் மிருகத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கிறான்...

”நலமே.. தாங்கள் எப்படியிருக்கிறீர்கள்? .. யாகம் முடிந்து விட்டது.. உங்களுக்கு என்ன தேவை..?”  - ஆச்சர்யம் விலகாத பார்வையுடன் மன்னன்..

“என் உடலின் தங்க நிறத்தையும், என் பேசும் சக்தியையும் வியந்து கொண்டிருக்கிறீர்கள், தானே !!”

“ஆம்”

“அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளும்...ஒரு ஊரில் ஒரு மிக ஏழ்மையான வேதியர் குடும்பமிருந்தது.. கணவன், மனைவி, அழகான் ஒரு பாலகன் மகன் என சிறிய குடும்பம்..

மிக ஏழ்மை.. சாப்பிட்டே சில வேளைகள் ஆகியிருந்தது...

வேதியர் வெளியில் சென்று வேலைகள் செய்து சம்பாதித்து கொஞ்சம் சத்து மாவு வாங்கி வந்திருந்தார்..

மாவைப் பதமாக்கி.. தம் மூவருக்கும் ஆளுக்கொரு உருண்டை வீதம் மூன்று உருண்டைகள் செய்து.. அன்றையப் பிரார்த்தனைகள் முடித்து சாப்பிட உட்கார்ந்திருந்தது.. வேதியர் குடும்பம்...

“அம்மா.. தாயே.. பசிக்கிறதே..” என்ற குரல் வீட்டின் வெளியில்..

வெளியில் சென்று பார்க்கிறாள் வேதியர் மனைவி.. தம்மினும் ஏழ்மையான ஒரு யாசகர் வீட்டு வெளியில் நிற்கிறார்...

“ஐயா.. உள்ளே வாருங்கள்... நான் இப்பொழுதான் எங்களுக்கு சத்துமாவு உருண்டை செய்தேன்.. இந்தாருங்கள் ” என்று தன் பங்கு உருண்டையை யாசகரிடம் தருகிறாள்..

குடும்பமே சாப்பிடுபவரின் முகத்தில் திருப்தி தெரிகிறதா என்று பார்க்கிறார்கள்..

வந்தவருக்கு இன்னும் பசியாறவில்லை..

வேதியர் தன் பங்கு உருண்டையையும் தருகிறார்... பின்னர் அவர்கள் மகன் தன் பங்கு உருண்டையையும் தந்த பின்பே.. வந்தவர் பசியாறுகிறார்...

வந்தவர் சென்ற பின்னர்.. குடும்பத்திலிருந்த மூவரும் பசியால் இறந்து விடுகின்றனர்..

அப்பொழுது நான் அங்கு சென்றிருந்தேன்.. அங்கே சிதறியிருந்த சத்து மாவுத் துகள்கள் என் மேனியில் பட்ட பொழுது என் மேனி தங்கமாக மாறத்துவங்கியது... எனக்குப் பேசும் சக்தியும் வந்தது..

அப்படியும் பாதி உடல் தங்கமாகும் அளவுக்குத்தான் அங்கு மாவு இருந்தது.. அதற்குப் பின் ஒவ்வொரு முறையும் யாகங்கள் நடக்குமிடங்களுக்குச் சென்று அங்கு சிதறியிருக்கும் நீரில் நான் புரண்டு பார்ப்பேன்.. இன்றளவில் என் மறு பாதியுடல் தங்கமாக மாறுமளவுக்கு எந்த பெரிய தர்மமும் நடக்கவில்லை..

மன்னா.. நீங்கள் நடத்திய இந்த யாகத்துக்கும் அந்த சக்தியில்லையே..”

வாயடைத்து நின்றான் மன்னவன் !!

oOo   oOo

மேகனா !!

சார்லெட்டில் என் மகள் படிக்கும் பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பில் படிக்கும் 6 வயது மாணவி.. என் வீட்டுக்கு அடிக்கடை வரும் குழந்தை.. பெற்றோர் ஆந்திராவிலிருந்து வந்து இங்கு சில வருடங்களாக சார்லெட்டில் இருக்கும் என் குடும்ப நண்பர்.

மேக்னாவிடம்.. நம் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி பற்றியும் நாம் கட்டடம் கட்டும் திட்டம் பற்றியும் அதற்கு ஒரு சதுர அடிக்கு $35/- செலவாவது பற்றியும் பேசுவதுண்டு.. 

”உன் பிறந்த நாளைக்கு அப்பாவிடம் கேட்டு என் பள்ளிக்கு ஒரு சதுர அடி டொனேஷன் வாங்கித்தரமுடியுமா?” என்று கேட்டதுண்டு..

சமீபத்தில் மேகனாவின் ஏழாவது பிறந்த நாள்.... அவள் அப்பாவிடம் பேசுகிறாள் !!

“Daddy.. what are you going to do for my Birthday ?"

"Whatever, you want.. I can take you to a place of your choice..or buy a gift or arrange a party for your friends...what do you want.."

"I DONT WANT ANY OF THAT.... Give me the money you can spend.. I want to donate it to Vasan Uncle's school project.."

பிறந்த நாள் அன்று .. என்னை ஸ்பெஷலாக அவர்கள் வீட்டுக்கு அழைத்து ஒரு கவரில் $70 பணம் வைத்து அதனுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து “Vasan Uncle Take it.. Its for your school.." என்று தந்த அந்தக் குழந்தை என் எதிரில் தேவதையாகத் தெரிந்தாள்...

ஒரு ஏழு வயது பெண்ணுக்கு தன் பிறந்தநாள் பற்றி எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் என்பது எனக்குப் புரியும்... மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையான நான்.. அவர்களின் நட்பு வட்டங்கள் தங்கள் பிறந்த நாட்களை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும்..

எல்லாவற்றையும் மறுதளித்துவிட்டு...”Vasan Uncle .. Take it.." என்று சொன்ன அந்தக் குழந்தையைக் கட்டியணைத்து வாழ்த்தினேன்..

உடனே.. கடைக்குச் சென்று.. 10 டாலருக்கு ஒரு கேக் வாங்கிவந்து அவளுக்கு அளித்தேன்..

”Why did you spend that money for cake, Uncle? I would have added that to my donation to your school..."

"அம்மா .. தாயே.. உன் மனசு மிக மிகப் பெரியது.. ஏழு வயசுக்கு நீ செய்வது...மிகப் பெரிய தியாகம் தான்...உனக்கு எல்லா நலனும் இறைவன் அருள்வான்..” என்று வாழ்த்தி விடைபெற்றேன்...

அன்றைய தினம் சென்ற கதையில் பார்த்த மரநாய்... மேக்னா வீட்டுக்கு வந்திருந்தால்.. அதன் முழு உடலும் தங்கமாக மாறியிருக்கும்...

இன்றைய நம் எல்லா தேவைகளும் முடிந்த பின்னர்.. நம் எதிர்காலத்துக்கு நாம் தேவையென நினைப்பதெல்லாம் சேர்த்த பின்னர்.. மீதியிருப்பதைத் தருவது பெரிய்ய தர்மமில்லை...

இன்றைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டு அதற்குண்டான செலவை நல்ல காரியங்களுக்குத் தருவது மிகப் பெரிய தியாகம்..

ஏழு வயது மேகனாவுக்கு வந்த இந்த தெளிவு.. நம் எல்லோருக்கும் வரும் நாள் .. பொன்னாள்...

Sunday, April 15, 2012

38. நம் பள்ளியின் விளையாட்டு வீரர்கள் !!

நம் பள்ளியின் பெருமை மிகு விளையாட்டு வீரர்கள் குழு, நம் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் திரு அண்ணாதுரை அவர்களுடன்.

17 வயது மாணவர்களுக்கான (RDG) மாநில அளவில் கூடைப்பந்து மூன்றாமிடம். நாம் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டோம். இது வரை 5 முறைகள் கலந்து கொண்டுள்ளோம்.

பள்ளிகளுக்கிடையேயான குடியரசு தின்ப் போட்டிகளில் ஏற்காட்டில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்கள் விவரம்

தட்டு எறிதல் (Discus Throw) - I தங்கப் பதக்கம்
குண்டு எறிதல் (Shot Put) - III வெங்கலப் பதக்கம்
நீளம் தாண்டுதல் (Long Jump ) - III வெங்கலப் பதக்கம்


மாநில அளவில் இந்த ஆண்டு நம் பள்ளியிலிருந்து தங்கப் பதக்கம் பெற்ற மாணவிகள் ஹரிப்பிரியா, காமாட்சி, கார்த்திகா, கிறிஸ்டல், சாம்பியன் லஷ்மிப்பிரியா
மாணவி எஸ். லட்சுமிப்பிரியா தேசிய அளவில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலமும், மாநில அளவில் 30க்கு மேல் தங்கப் பதக்கங்களும் 10 வெள்ளிப் பதக்கங்களும் 5 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார் !!


நம் பள்ளியின் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் !!

நம் பள்ளி சாம்பியன்கள் (இடமிருந்து வலம்) லஷ்மிப்பிரியா, கிறிஸ்டல், சதீஷ் குமார்.

Sunday, April 8, 2012

37. மூன்றடி மண் தந்தான் இந்த நவீன வாமனன் !!


நம் பள்ளி கட்டிட வேலைகளுக்காக நம் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் நன்கொடை கேட்கும் நேரங்களில் நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைய்ய நடக்கின்றன. எல்லாவற்றிலும் எனக்கு அதிகமாக போதிப்பவர்கள் குழந்தைகள் தான் !!


இந்த முறை என் க்ளீவ்லேண்ட் பயணத்தின் போது என் நெடு நாளைய நண்பர் ஜெயராஜுவையும் அவரது இரண்டு மகன்களையும் (முகுந்த், நித்தின்) சந்திக்க நேர்ந்தது.. ஜெயராஜுவையும் அவரது மனைவியையும் 10 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்.

ஜெயராஜுவும் அவரது மனைவியும் என்னுடன் முன்னாட்களில் நான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே வேலை பார்த்தவர்கள்.. 2002 வாக்கில் அவர்களுக்குத் திருமணமானவுடன் பார்த்தது. அதற்குப் பிறகு 10 வருடங்கள் சென்று இப்பொழுதுதான் மகன்களுடன் சந்திக்கிறேன்.

ஜெயராஜு ஒரிஜினலா தெலுங்கு பேசும் ஆந்திராக்காரர். ஆனால் கலந்து கட்டி தமிழ், கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளும் பேசுவார்.. நான் 1995லிருந்து செய்து வரும் நல்ல காரியங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.

சிறுவன் நித்தின் என்னிடம் வந்தான்.. அவனுக்கு நேற்றுதான் (ஏப்ரல் 6) 7 வயது முடிந்திருந்தது.

“மாமா.. எனக்கு நேத்திக்குத் தான் பர்த் டே !!”

“ரொம்ப சந்தோஷம்டா ராஜா... ஹேப்பி பர்த்டே..!!”

”தேங்க்ஸ்..மாமா !!”

”எனக்கு ஒரு உதவி செய்யேன்... நீ நல்லா பர்த்டே கொண்டாடியிருப்பே...நான் என் புள்ளங்களுக்காக ஒரு ஸ்கூல் கட்டிக்கிட்டிருக்கேன்.. அதுக்கு ஒரு லட்சம் சதுர அடி கட்டணும்.. உன் பர்த்டேக்காக எனக்கு ஒரே ஒரு சதுர அடி கட்ட $35/- டாடி கிட்டேருந்து வாங்கிக் கொடேன்.....”

பள்ளிக்கூடம் கட்டறது.. சதுர அடி கணக்கு எல்லாம் 7 வயசுக் குழந்தைகிட்டே பேசறது எனக்கே ஒரு மாதிரியா இருந்திச்சி... இருந்தாலும் அவனுக்குள் அந்த விதையை ஊன்றி விடுவதில் எனக்கு ஒரு பிடிவாதம்..

“உங்க ஸ்கூலை எனக்குக் காட்டுங்களேன்..”

உடனே ஐ-போன் எடுத்து நம் பள்ளியின் வீடியோவக் காட்டினேன்.. விவரமாகக் கேள்விகள் எல்லாம் கேட்டான்..

”ஏன் எல்லாரும் தரையில உக்கார்ந்திருக்காங்க.. சேர் ..டேபிள் எல்லாம் இல்லியா உங்க கிட்டே..”

“வாங்கணும்டா ராஜா...”

“உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்..?”

“3.5 மில்லியன் டாலர் வேணும்.. முப்பத்தஞ்சு .. முப்பத்தஞ்சு டாலரா நான் ஒரு லட்சம் பர்த்டே வாழ்த்துக்கள் சொல்லி பணம் திரட்டணும்..”

“அப்படியா,...,.”

ரொம்ப ஆழமாக யோசித்தான்....அவன் டாடியிடம் திரும்பி..

“டாடி.. இந்த மாமா ஸ்கூலுக்குக் காசு கொடுங்க.. அவங்க கட்டட்டும்...”


“எவ்வளவுடா கொடுக்கட்டும்...” - ஜெயராஜு அவன் மகனிடம் கேட்டார்...

“நிறைய்ய கொடுங்க.. எல்லாத்தையும் கொடுங்க...”

கர்ணனிடம் கையேந்திய வறியவனாக.. அவன் முன் மண்டியிட்டு அவனை முத்தமிட்டு அவன் கையிலிருந்தே $101/- க்கான காசோலாயைப் பெற்றுக் கொண்டேன்..

“மாமா.. அடுத்த பர்த்டேக்கும் தர்றேன்.. அண்ணன் பர்த்டேக்கும் தர்றேன்.. அடிக்கடி ஃபோன் பண்ணுங்க...”

நித்தின் நீ பல்லாண்டு வாழ்க.. என் பள்ளி போல பல பள்ளிக்கூடங்கள் நீ கட்டி அதில் நிறைய்ய மாணவர்கள் உன்னைப்போல் படித்து வளர்ச்சியுற வாழ்த்துகிறேன் !!

என் நாட்டுக் குழந்தைகள் தெய்வங்கள்.... அவர்களுக்கு இருக்கும் பரந்த உள்ளங்களில் நம் கனவுகளை விதைத்து விட்டால் போது.. நாளைய பாரதம் பிரகாசமாயிடும்..

என் பள்ளி வளர்ச்சிக்கு தன் பிறந்த நாள் பரிசாக முன்று சதுர அடி (ஜெயராஜுவின் $101 + என் பங்கு $4/- மொத்தம் $105/-) வழங்கிய என் நவீன வாமனன்.. நித்தின் அவர்கள் பல்லாண்டு வாழ நம் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் !!

Wednesday, March 14, 2012

35. பரீட்சை பேப்பரேய்ய்! - ஆயில்யன்

வாத்தியாரு புல்லட்டை விட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா! பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு!எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும்டோய்ய்ய்ய்!

அலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு காலையில வாராம எஸ்கேப்பாகிடுவான்.வூட்டுக்குபோயிடலாமான்னு ஒரு நினைப்பு வந்துடும்! ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும்தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட்லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு! அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது!சரி வர்றது வரட்டும்ன்னு, நல்லா ஜம்முன்னு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணிவைச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூட்க்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா - பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர்கட்டோட எண்ட்ரீ போடுவாரு - அந்த டைமிங்கல கடைசி நேரத்துல க்ளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாகஅமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட - அப்படி எதுவுமே நடக்காம படம்ரீலிசு ஆகறமாதிரி வாத்தியாரு வந்துப்புடுவாரு! வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூடஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னாஅடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னா”க்களுக்கு கனாகண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும்! [எனக்குமட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]

சரி இனி நடப்பது நடந்தே தீரும் அப்படின்னு மனசை தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிசமே ஒரு டெரரான நினைப்பு வந்துகுந்தும் பாருங்க! அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்க்கோமே அப்புறம் என்னடா தம்பி பயம் அனேகமாநாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம் நல்லவேளை நம்ம இங்கீலிசு மீடியத்துல போயி படிக்கல - பொம்பள புள்ளைங்ககிடையாது - ஸோ நாமதான் ஃபர்ஸ்ட்டு மார்க் அப்படின்னு திரும்பவும் ஒரு குட்டி கனவு!

பலிச்சிருச்சான்னு இண்ட்ரஸ்டாயிட்டீங்க போல (ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுலடிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்கவீணாக்குவேன்!?)

சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்!

குட் வெரிகுட் இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார் அப்படின்னு அன்பா அனுப்பி வைத்தஅந்த வாத்தியாரு இன்னும் கண்ணுல நிக்கிறாங்க - தெய்வம் ! :)


டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா,திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!

Sunday, March 4, 2012

34. பள்ளி ஆண்டுவிழா தொகுப்பு - புகைப்படங்கள்ஆண்டு விழா 23-02-2012 வியாழக்கிழமை மாலை 3.00 மணி அளவில் பள்ளி வழிபாட்டரங்கில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தாளாளர் திரு. J. R. இராமமூர்த்தி அவர்கள் தலைமை உரை ஆற்றவும் , தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் திரு. K. இராஜேந்திரன் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்கவும் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களான Er. திரு. M. கோபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.

மாணவரும், சிறப்பு விருந்தினருமான திரு. G. வெங்கடசுப்பிரமணியன், (Project Director, Mettupakkam Foundations Pvt. Ltd., Chennai) ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மலரினை பள்ளியின் உதவித்தலைமையாசிரியர்கள் திருமதி. H. நிர்மலா அவர்களும் திரு. S. அண்ணாதுரை அவர்களும் பெற்று கொண்டனர். திரு. G.மதியரசன் அவர்கள் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார்.


நம் பள்ளியில் 25 ஆண்டு பணி முதிர்வு பெற்ற ஆசிரியர்கள் திரு. S. விஜயரெங்கன் மற்றும் நல்லாசிரியர் திரு. G. மதியரசன் ஆகியோருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


2010-2011 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்த 33 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சார்பாக
நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. R. ஜெயசங்கர், Prop. K.S.M. & R.V.V. Whole sale, அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். ரூ. 30000 மதிப்புள்ள பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களால் நிகழத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

விழா நிகழ்ச்சிகளை திரு. T. குலசேகரன் மற்றும் திருமதி M. அபிராமிதேவி மற்றும் திரு. D. கலைச்செழியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதுகலை உதவித்தலைமையாசிரியர் திரு கே. பத்மனாபன் அவர்கள் நன்றியுரை ஆற்றவும் நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.புதிய வகுப்பறை (Shri. S.K. Hall) கட்டிட திறப்பு விழா

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். பெற்றோர் ஆசிரியர் கழக கட்டிட வளாகத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. M. கணேசன், Bank of America, U.S.A., அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட ரூ. 5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம்) மதிப்புள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஓய்வு பெற்ற பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் நல்லாசிரியர் திரு S. கிருஷணமூர்த்தி B.A., B.Sc., B.Tஅவர்களது நினைவாக Shri. S.K. Hall என்ற பெயரில் அன்னாரது துணைவியார் திருமதி கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னதாக முதுகலை தமிழாசிரியை திருமதி வி. அபிதகுஜாம்பாள் அவர்கள் திருக்குறள், கடவுள் வாழ்த்து பாக்களைப் பண்ணுடன் இசைத்தார். திரு S.K அவர்களின் புதல்வர் திரு K. முத்துராஜகோபால் அவர்களும், புதல்வி திருமது K.துர்கா ரமணி அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு வாஜபேயர் அவர்களது நினைவாக அன்னாரது புதல்வர் பள்ளி வளர்ச்சிநிதிக்கு ரூ 10,001 அளித்து உதவினார். பள்ளியின் முன்னாள் மாணவரும், ஆஸ்த்துமா மற்றும் அலர்ஜி சிறப்பு மருத்துவருமான Dr. திரு. ஸ்ரீதரன் M.D. அவர்கள் பள்ளிக் கட்டிட நிதிக்காக ரூபாய் 10,001 அளித்து உதவினார். விழாவில் பள்ளித் தாளாளர் திரு JR இராமமூர்த்து அவர்கள் தலைமையேற்கவும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு M. கோபாலன் அவர்கள், திரு ஸ்ரீதரன் அவர்கள், திரு வி.கிருபாநிதி அவர்களுடன் பள்ளித்தலைமையாசிரியர், நல்லாசிரியர் திரு கே.இராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். விழாவிம் போது பள்ளியின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.Tuesday, February 21, 2012

33. நம் பள்ளி ஆண்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் !!

நமது பள்ளியின் 112 வது ஆண்டுவிழா நாளை மறுநாள் (பிப்ரவரி 23, வியாழக்கிழமை நம் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் G.வெங்கடசுப்ரமணியன், R.ஜெயசங்கர் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்.

நம் பள்ளி ஆண்டு விழா மலர் வெளியீடு, பள்ளியில் 25 ஆண்டுகள் பணிமுடித்த எங்கள் அன்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்குதல், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெறுகிறது.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுமாய்க் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்..

Thursday, February 16, 2012

32. கல்விக் குற்றவாளிகள் ‍-- நன்றி விகடன்

இந்த கல்வி வியாபார நிறுவனங்களை விட எங்கள் மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி பல கோடி மடங்குகள் சிறந்ததென்பதில் எங்களுக்கு ஐயமில்லை

ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்

கல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து அரங்கேறி வரும் அவலங்களைப் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மேலிடுகிறது.

பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையிலேயே கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற மாணவன்; உடன் பழகிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளைச் சூறையாடிய மாணவர்கள்; 'பஸ் தினம்' என்ற பெயரில் அரசுப் பேருந்துகளின் மீது கல்லெறிந்து நாசமாக்கி, பொதுமக்களையும் போலீஸாரையும் காயப்படுத்திய மாணவர் கூட்டம்... இவை எல்லாமே, அடுத்தடுத்து வெளியான செய்திகள். இதே நாட்களில்தான், படிப்பின் மீது கொண்ட விரக்தி, பயம் காரணமாக மாணவன் ஒருவன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட தகவலும் வெளியாகி இருக்கிறது.'இங்கேதான் தவறு' என்று இடம்சுட்டிப் பொருள் விளக்க முடியாத அளவுக்கு கல்வித் தாயின் உடலெங்கும் புரையோடிப்போய் இருக்கின்றன கண்மூடித்தனமான காயங்கள். ஒழுக்கம் என்பது கற்பவர்களுக்கு மட்டுமல்ல... கற்பிக்கும் ஆசான்களுக்கும் அதிஅவசியம் என்பதுதான் காலம் காலமாக இருந்துவந்த நிலைமை. ஆனால், அரசாங்கம் தொடங்கி, கல்விக்கூடங்கள் வரையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களில் எதுவுமே ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை. அவையும்கூட, மதிப்பெண் சார்ந்தவையாகவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சாமர்த்தியம் சார்ந்தவையாகவும் மாறிப்போயிருக்கின்றன!

இன்னொரு பக்கம், புகழ்பெற்ற பல தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மட்டுமல்ல... அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் மரியாதையும்கூட ரொம்பவே சிறுத்துப்போய் இருக்கிறது!

மாணவனின் வாழ்க்கை என்பது அவன் வாங்கும் மதிப்பெண்களில் மட்டும் ஊசலாடும் விதமாகக் கல்விமுறையை வைத்திருப்பதால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட, அவன் வாழ்க்கையே அறுந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டதுபோல பெற்றோர் காட்டும் பதற்றம், அப்படியே மாணவர்களையும் தொற்றிக்கொள்கிறது.

'பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் வெற்றி காட்டாவிட்டால், எங்கள் கல்வி நிலையத்தின் வியாபாரம் கெட்டுவிடும்' என்று வெளிப்படையாகச் சொல்லியே மாணவர்களை வெளியேற்றும் சீர்கெட்ட கல்விமுறைதானே, ஒரு பாவமும் அறியாத அந்த ஆசிரியை உயிரை இன்று விலையாகக் கேட்டுவிட்டது? கல்விக்குக் கொட்டிக் கொடுப்பதைக் குடும்பத்தின் கௌரவமாகவும்... கை நிறைய குழந்தையின் செலவுக்குக் கொடுப்பதைத் தங்கள் குற்ற உணர்வுக்கான வடிகாலாகவும் நினைக்கிற பெற்றோரும் அல்லவா இந்தப் பாவத்தின் பங்குதாரர்கள்?

தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த நடைமுறை புத்திசாலிகளையும் ஒழுக்கச் சீலர்களையும் உழைப்பாளிகளையும் குழந்தைகளுக்கு உதாரணம் காட்டத் தவறுவது கல்விக்கூடங்கள் மட்டுமா... பெற்றோரும்தானே? பொய் சொல்லாத அரிச்சந்திரனைப் பற்றியோ, தர்மம் தவறாத தருமரைப் பற்றியோ, அகிம்சையே உருவான மகாத்மா காந்தியைப் பற்றியோ நினைப்பதற்காவது இவர்களுக்கு நேரம் இருந்தால்தானே, குழந்தைகளோடு வாய்விட்டுப் பகிர்ந்துகொள்வதற்கு!

'நீதி போதனை' வகுப்புகளை முற்றிலுமாக இழுத்து மூடிவிட்ட நாம், மதிப்பெண் குவிக்கும் சூத்திரங்களை மட்டுமே வாழ்க்கையின் சாத்திரங்களாக இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்கப்போகிறோம்? புத்தியைத் தீட்ட வேண்டிய தெய்வீகப் பட்டறையில் கத்தியைத் தீட்டியது அந்த மாணவனின் தவறல்ல... முழுக்க முழுக்க இன்றைய கல்விமுறையின் குற்றம்தான் என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறோம்?

அரசாங்கம், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரின் நோக்கும் போக்கும் ஒரே நாளில் நேராகிவிடும் என்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கு இன்றில் இருந்தாவது நம் பார்வையைச் சீராக்கி, நேராக்கிக்கொள்ள மாட்டோமா?!

இந்தச் சூழ்நிலையில், எங்கள் பள்ளி ஆசிரியர்களையும், முன்னாள், இந்நாள் மாணவர்களையும் அவர் தம் நல்லொழுக்கத்தினையும் எண்ணிப் பெருமையுறுகிறோம்

Tuesday, January 31, 2012

31. எங்கள் பள்ளியின் பெருமை மிகு வேதியியல் ஆசிரியர் திரு கே.பி


மயிலாடுதுறை அருகே நீடூர் கடுவங்குடியில் உள்ள தீன் கலை அறிவியல் கல்லூரியில் உலக வேதியியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் டி.எஸ்.ஏ ரபியுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி கவுரவத்தலைவர் ஜலாலுதீன், நீடூர் அரபிக் கல்லூரி தலைவர் நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வாசுதேவன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கல்வித்துறையில் சிறந்த வேதியியல் பணியாற்றியதற்காகநாகை ஏ.டி,எம் கல்லூரி வேதியியல் பிரிவு தலைவர் பேராசிரியை மதுராம்பாள்,மயிலாடுதுறை டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர்பத்மநாபன், மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நடராஜன் ஆகியோருக்கு ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.செந்தில்வேல் விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் பேங்காக் தமிழ் முஸ்லிம் அமைப்பின் தலைவர் சலாலுதீன், மயிலாடுதுறை டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.ராஜேந்திரன், உதவி தலைமையாசிரியர் காஞ்சிநாதன், நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிவக்குமார், செல்வக்குமார், பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், வினோத்குமார், சுகந்தவல்லி, குணசுந்தரி, கங்காதேவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை கல்யாணி நன்றி கூறினார்.

30. எங்கள் பள்ளியில் குடியரசு தின விழா - 2012 - மயிலாடுதுறை

இந்த வருடத்தின் 63-வது இந்திய குடியரசுதின விழா நம் பள்ளியின் மைதானத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டு பணி நிறைவைப் பெற இருக்கும் நம் பள்ளியின் பதிவு எழுத்தர் திரு செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். திரு செல்வராஜ் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் திரு கே ராஜேந்திரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.


பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவேறியது.