வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, July 27, 2008

01. நம் தாயின் புன்னகை !!

மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி !!உலகத்தில் ஒவ்வொருவருடைய எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் பெற்றோருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ.. அதை விடப் பெரிய பங்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கு உண்டு என்பது எல்லோருக்குமே புரியும். நான் படித்தது இந்தப் பள்ளியில் தான்.அப்பொழுது இருந்த ஆசிரிய ஆசிரியைகள்.. என் பள்ளியின் ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு தனிப்பட்ட அக்கறையை வளர்த்து இருந்தனர். எங்கள் பள்ளியில் படித்த எந்த ஒரு மாண்வனிடம் கேட்டாலும.. அவரது வாழ்க்கையை வடிவமைத்த ஆசிரியர்களைப் பற்றி ஆதர்சமான கதைகளைக் கூறுவான்..எங்களுக்கெல்லாம் பள்ளியின் மேல் ஒரு அதீதமான ஒரு பாசத்தை ஏற்படுத்தியென்றதென்றால்.. அதற்கு நிச்சயமாக எங்கள் இளமைக் காலத்தில் பள்ளி எங்களுக்குக் கொடுத்த ஆரோக்கியமான சூழ்நிலையும்.. அந்த ஆசிரியர்களின் அன்பும் தான் ஒரு பெரிய காரணமாக இருக்கும்..இன்றைக்கு எங்கள் பள்ளிக்கு 108 வயது ஆகிறது. எங்கள் பள்ளியில் படித்து பல நல்ல நிலைகளில் இருக்கும் மாணவர்கள் அதிகம். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அவர்க்ள் பள்ளியின் மேல வைத்துள்ள பாசத்தை அதன் முன்னேற்றத்துக்கு திசை திருப்பும் முயற்சி தான் இது..

இந்த வருடம் (2008) பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை செல்லும் வாய்ப்பு வந்தது. போனதென்னவோ .. தந்தையின் உடல்நலம் கருதி 20 நாள் விடுப்பில். போன 15 நாட்களில் 10 நாட்கள் பள்ளியிலேயே செலவிட வேண்டி வந்துவிட்டது..நாங்கள் 1980களில் படிக்கும் போது பள்ளியில் 1200 மாணவர்கள் தான்.. அப்பொழுது பள்ளியில் இருந்த கட்டமைப்பு எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது. இப்பொழுது 2008-ல் பள்ளியில் 3600 மாணவர்கள் படிக்கின்றனர்.. மாணவர்கள் பெருகிய அளவுக்கு பள்ளியின் கட்டமைப்பு வளரவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது..30-40 மாணவர்கள் அமர்ந்து படித்த வகுப்புக்களில் 70-80 பேர் சாதாரணமாக அமர்ந்து இருக்கின்றனர். மாணவ மாணவிகளுக்கான் கழிப்பறை வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாகவே இல்லை.. 1200 பேருக்கு என்ன இருந்ததோ அதே கட்டுமான வசதிகள் தான் இப்பொழுதும். இந்த நிலையில் மாணவ மாணவிகளின் சுகாதாரம் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.. அப்படியும் எங்கள் பள்ளி மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மிகச்சிறந்த தேர்ச்சி விகிதங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது..பள்ளியின் கட்டமைப்பை வளர்க்கவென்று யார் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்? யாருடைய பொறுப்புக்களில் இது வருகிறது.. ஆசிரியர்களும், பள்ளி மேலாளர்களும் அவர்கள் தினம் தினம் தேவையானவற்றை (tactical requirements) பொறுப்பாகத்தான் நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்கள்.. Long term planning, Strategic Planning and execution ஆகியவற்றின் பொறுப்பைத்தான் எடுத்துச் செய்ய ஆட்களில்லை..பள்ளியின் தேவை மிகப் பெரியது.. கட்டமைப்பைப் பெருக்க வேண்டும்.. கடந்த 30 வருடங்களில் பள்ளியின் கட்டுமானத்தில் வளர்ச்சியே இல்லை.. இப்பொழுது எடுத்துச் செய்யும் முயற்சி.. இந்த 30 வ்ருட வளர்ச்சியய ஈடு கட்டுவதோடு இல்லாமல்..இன்னும் 20 வருடத்திற்கான வளர்ச்சிக்கும் அடிகோல வேண்டும் என்பது புரிகிறது.. இப்பொழுது எடுக்கும் முயற்சிகள் 50 வருட வளர்ச்சியைக் காட்டவேண்டும் என்பது ஒரு பெரிய தேவை.

இதைச் செயவதற்கு இங்கு படித்துச் சென்ற மாணவர்களை விடப் பொறுப்பானவர்கள் யாராக இருக்கக் கூடும்?என்னிலிருந்து தொடங்குவோம்...அனைவரையும் ஒருங்கிணைத்துப் பள்ளியின் தேவையை உணரச் செய்து அவர்களைப் பள்ளியின் நலனுக்கு அக்கறை எடுக்கச் செய்ய முடியுமா? எவ்வளவு பேரை ஒருங்கிணைக்க வேண்டும்.. அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதெல்லாம் ஒரு மலைப்பாகவே இருந்தது.. இதுவே கேள்விகளாக மயிலாடுதுறையில் சுற்றிக் கொண்டிருந்த போது தான்..

கண்ணில் பட்டன.. பிரம்மாண்டமான இந்த பிறந்தநாள் வாழ்த்து டிஜிடல் போர்டுகள்.. ஜெயலலிதா பிறந்த நாளைக்கு அவரை வாழ்த்தி பெரிய பெரிய டிஜிடல் போர்டுகள்... ஒவ்வொரு போர்டும் சில ஆயிரம் ரூபாய்களைச் செலவழித்து கர்ம சிரத்தையுடன் செய்யப் பட்டிருந்தது.. ஒவ்வொன்றிலும் குறைந்தது 30-40 பெயர்கள் .. அவர்களிடமிருந்து நன்கொடை வாங்கிச் செய்த்தாக. ஒரு சாதாரண் அரசியல்வாதியின் பிறந்த நாளைக்கு வாழத்துச் சொல்லவே 40 பேரை ஒருங்கிணைக்க முடியும் போது.. நம்மால் நம் பள்ளியின் பெயரைச்சொல்லி சில ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க முடியாதா? அதுவும் தொலைதொடர்பு சாதனங்கள் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த நேரத்தில்...
அப்படித் தோன்றியது தான் இந்த முயற்சி.. எங்கள் பள்ளி மாணவர்களையும்.. நலனில் அக்கறை கொண்டோரையும்.. எதிர்கால சந்ததிகளை முன்னேற்ற ஒரு முயற்சியில் பங்கு பெற வைக்க முடியும் என்பது தான் எங்கள் முடிவு.. மற்றவை இறைவன் செயல்..

எங்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளி பெற்ற தாய்க்குச் சமானமானது.. இவ்வளவு குழந்தைகள் நாங்கள் இணைந்து எங்கள் தாயின் முகத்தில் புன்னகை வரவழைக்கும் ஒரு பெரு முயற்சி செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். இதில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பூரணமாக நம்புகிறோம்..

எங்கள் பள்ளிக்கு 108 வயதாகிறது.. இரத்தமும் சதையுமாக உயிருள்ள ஒரு தாயாக எங்கள் பள்ளி இருக்குமானால்.. அவளின் புன்னகை இப்படியாக இருக்குமோ?