வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Saturday, August 29, 2009

எங்கள் பள்ளியின் இரண்டு ஹீரோக்கள்!!!!!







அது 1979 ஜூன் 27ம் தேதி. ஒன்பதாம் வகுப்பு பள்ளி திறந்து 20 நாள் ஆகி இருந்தது. வழக்கம் போல நானும் ராதாவும் போய் தான் மாடியில் இருக்கும் தலைமை ஆசிரியர் அறைக்கு பக்கத்தில் இருக்கும் ஆபீஸ்ல இருந்து அட்டண்டன்ஸ் நோட்டை பத்திரமாக எடுத்து வருவோம் எங்க வகுப்புக்கு. அப்போ தான் நாங்க அந்த இரண்டு ஹீரோக்களையும் பார்த்தோம். இருபத்தி ஆறு இன்ச் பெல்பாட்டம், பூ போட்ட சட்டையை இன்சர்ட் செய்து பட்டையான பெல்ட், முக்கியமா காலில் ஷூ ஹிப்பி தலை இப்படி அந்த இரண்டு ஹீரோக்கலும் தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே உட்காந்து இருந்தாங்க.
ராதா கேட்டான் "யாருடா இவங்க இரண்டு பேரும் நம்ம ராஜா அண்ணன் மாதிரி இருக்காங்க, அவரு படத்து கதாநாயகர் மாதிரி இருக்காங்க'ன்னு கேட்டான். ராஜா அண்ணன் என்பது டி.ராஜேந்தர், அவரு அப்படிதான் டிரஸ் செஞ்சிருபார். (எங்க ஊரிலே டூ வீலர் மோட்டார் சைக்கிள் ஸ்வேகா வண்டி வச்சிருந்த முதல் ஸ்டூடண்ட் அவருதான்) ஒரு குழப்பத்தோட வகுப்புக்கு வந்துவிட்டோம்.



முதல் பீரியட் அறிவியல். ஆச்சர்யம் நாங்க பார்த்த அந்த ஹீரோவில் ஒருவர் வந்து உள்ளே நுழைகிறார். எல்லோரும் எழுந்து நின்றோம்.



"அனைவருக்கும் வணக்கம். என் பெயர் K. ராஜேந்திரன், இன்று முதல் நான் தான் உங்களுக்கு அறிவியல் எடுக்க போகிறேன். (அப்போது தான் S.S.L.C முடிந்து +2 சிஸ்டம் ஆரம்பித்தது. அதனால் அரசாங்க உத்தரவுப்படி பி.ஜி முடித்தவர்கள் தான் +1, +2 வுக்கு பாடம் எடுக்க வேண்டும். அதனால் சூவாலஜி பாடம் எடுக்க இவரை சேர்த்திருக்காங்க பள்ளி மேனேஜ்மெண்ட்)
பின்பு அவர் பேசியது " என்னை உங்க ஆசிரியர் மாதிரி பார்க்க வேண்டாம். ஒரு நண்பனாக பாருங்க, எதுவா இருந்தாலும் என் கிட்ட தைரியமா பேசலாம். இதோ என் கையில் 4 சாக்லெட் வச்சிருக்கேன். இன்றைக்கு யாருக்கு பர்த்டேயோ அவங்க எழுந்து நில்லுங்க. அவங்களுக்கு சாக்லெட் தருவேன்" அப்படின்னு சொன்னதும் நாங்க கிட்ட தட்ட 25 பேர் எழுந்து நின்றோம். என்ன காரணம்னா எங்க வால் தனம் தாங்காமல் எங்களை தூக்கி வந்து 1ம் வகுப்புலே சேர்க்கும் போது துண்டுமுறுக்கி சார் வரிசையா "எல்லாரும் காதை சுத்தி மூக்கை தொடுங்க"ன்னு சொல்லி எல்லாருக்குமே அவர் 27.06.1966 என பிறந்த நாளா எழுதி விட்டார். (என்னை அப்போது சேர்க்க வந்த என் பாட்டியும் காதை சுத்தி மூக்கை தொட வாத்தியார் "அம்மா நீங்க தொட தேவை இல்லை"ன்னு சொன்னது நியாபகம் வருது. பாட்டி ஒரு தீர்க்கதரிசி போல இருக்கு. பிற்காலத்தில் குழந்தைகளை சேர்க்கும் போது பெற்றோர்க்கும் தேர்வு வரும் எனபதை உணர்த்துவதாக உணர்கிறேன்)



விஷயத்துக்கு வருவோம். அப்படியாக நாங்க 25 பேர் எழுந்து நின்றோம். பின்னே அவர் "சரி என்னை பற்றி நானே சொலி கொள்வதை விட நீங்களே கேள்வி கேட்கலாம்" என சொன்ன போது ராதா தான் முதல் கேள்வி " சார் நீங்க +2 சார் தானே பின்ன ஏன் 9ம் வகுப்புக்கு எல்லாம் எடுக்குறீங்க" அதுக்கு அவர் சொன்னார் "நான் படித்து முடித்தவுடம் நான் யு.ஜி முடித்த அதே ஏ.வி.சி. கல்லூரியில் 6 மாதம் தற்காலிகமாக பணியாற்றினேன். நான் புதுசு தானே இந்த ஆசிரிய பணிக்கு. அதனால் எடுத்த உடன் +1 எடுக்க வேண்டாம் முதலில் சின்ன வகுப்புகளுக்கு எடுத்து பழகட்டும் என மேனேஜ்மெண்ட் நினைத்திருக்கலாம். அவர்கள் நம்பிக்கையை பெறுவேன். மிக நன்றாக பணியாற்றி பிற்காலத்தில் மேனேஜ்மெண்ட் என்னை அழைத்து தலைமையாசிரியர் பதவி கொடுக்கும் படியாக நம்பிக்கையுடன் பணியாற்றுவேன். ( அவர் தான் இப்போது தலைமை ஆசிரியர் - என்னே ஒரு நம்பிக்கை பாருங்க) அப்படியே அவர் மாணவர்களோடு நண்பர் மாதிரி நடந்து கொண்டார்.



முதல் வகுப்பாக இருப்பதால் பாடம் வேண்டாம். ஆனா சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துப்போம் என சொல்லி டினோசர் படம் வரைந்தார் போர்டில். (மிக அழகாக இருக்கும் அவர் கையெழுத்தும், படம் வரையும் திறமை)அவர் அதன் சைஸ் பத்தி எல்லாம் சொன்ன போது ஒருத்தன் கேட்டான்" சார் 3 தென்ன மரம் உயரம் இருக்குமா?"" அதுக்கு அவர் அதுக்கு மேலயும் இருக்கும். என சொல்லிய போது சார் கதை விடுறார் என நினைத்து கொண்டோம். அதற்கு முன்னால் அவர் ஏ.வி.சி கல்லூரியில் வேலை பார்த்த போது அதன் வெள்ளி விழா வந்தது. அப்போது அங்கே 40 அடி உயரத்தில் பிலாஸ்டர் ஆஃப் பாரீசினால் டினோசர் சிலை செய்து அங்கே இருக்கும் பிருந்தாவன் தோட்டத்தில் வைத்தார். அதன் பிறகு ஏ வி சி நிர்வாகம் அதன் மேலேயே ஸ்டீல் பொருத்தி அதை எலும்பு கூடாக ஆக்கி அதன் உள்ளே ஒரு வகையான புல் வளர்த்து இப்போது பார்த்தால் பிரம்மாண்ட பச்சை டினோசர் மாதிரி இப்பவும் கம்பீரமாக நிற்கின்றது.



அடுத்து வகுப்பு வந்தது. அடுத்த ஹீரோ வந்தார். இரண்டு பேருமே இளமை ஊஞ்சலாடுகிறது கமல் மாதிரி இருப்பாங்க. எங்கள் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா? வீட்டில் 8 கஜ புடவை கட்டின பாட்டி, அம்மா, 8 முழ வேஷ்டி கட்டின அப்பா எல்லோரையுமே பார்த்து பழகின நம் கண்களுக்கு எப்பவாது விருந்தாளியா டெல்லி, மும்பாய்ல இருந்து சுடிதார், ஹை ஹீல்ஸ், திருத்திய புருவத்தோடு வரும் சித்தியை, ஜீன்ஸ், டிஷர்ட், ஷூ, கூலிங் கிளாஸ் சகிதமாவரும் சித்தப்பாவோ, மாமாவையோ பார்த்தால் ஒரு சந்தோஷம் வருமே (எங்களுக்கு அப்ப வந்தது. இப்போது மாதிரி சுடிதார் கலாசாரம் அப்ப கிடையாது) அது போல எங்களுக்க்கு இந்த இரண்டு நாயகர்களையும் பிடித்து விட்டது.



உள்ளே வந்தார் "என் பெயர் K. பத்மனாதன், (K.P) நான் படிச்சது கெமிஸ்ட்ரி. ஆனா உங்களுக்கு ஆங்கிலம் எடுக்க போகிறேன். என சொல்லி விட்டு நேரிடையாக பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். KR சார் ஒரு டைப்புன்னா, இவர் வேறு மாதிரியான டைப். பாடத்தை மண்டையில் ஏற்றாமல் விட மாட்டார். ஜாலியாகவும் இருப்பார். அதே சமயம் கண்டிப்பாகவும் இருப்பார். அந்த கால கட்டத்தில் எங்க பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் சினிமா தியேட்டர்களுக்கு போக மாட்டாங்க. ஏன்னா ஏதாவது ஒரு மாணவன் தன்னை அங்கே பார்த்து விட்டால் மானமே போவதாக உணர்வார்கள். அதை உடைத்து எறிந்தவர் K.P சார் எல்லா படமும் பார்த்துவிட்டு அடுத்த நாள் நல்ல படமா இருந்தா வகுப்பிலேயே சொல்லுவார்.




கெமிஸ்ட்ரி ஈக்குவேஷன் எழுதும் போது இடமிருந்து வலமாக எழுதுவார், அடுத்த ஸ்டெப்பை அப்படியே வலமிருந்து இடமாக வருவார். பீரியாடிக் டேபிள் அவர் மனதில் அப்படியே பசை போட்டு ஒட்டியிருக்கும். லேப்பில் அவர் ஆக்டிவிட்டீஸ் அருமையா இருக்கும். எந்த கலவை சால்ட்டாக இருந்தாலும் பார்த்த உடனே சொல்லி விடுவார்.

இவர்களின் சுறு சுறுப்பை பார்த்து நிர்வாகம் KR சாருக்கு Interact Club- Incharge, பொறுப்பும் KP சாருக்கு N.S.S In Charge பொறுப்பும் தந்தார்கள். அங்கே தான் பல மாணவர்கள் பட்டை தீட்ட பட்டாங்க. 12 வது படிக்கும் போது 1 மாதம் KR சார் வீட்டில் தான் இரவு முழுக்க தங்கி படித்தோம். காலை 4 மணிக்கு எழுப்பி விடுவார். காபி கிடைக்கும். அவங்க அம்மா எங்களை அவங்க பிள்ளை மாதிரி தான் நடத்துவான்க. அது போல இரவு 12 மணிக்கு மேல் படிக்க விட மாட்டார். வந்து லைட் ஆஃப் செய்து விடுவார்.



ஆயிற்று. எல்லோரும் கல்லூரி வந்தாச்சு. நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கும் போது இருவருக்கும் கல்யாணம். ஓடி ஓடி வேலை செய்தோம். (கவனிக்க அப்போ நாங்க கல்லூரிக்கு வந்தாச்சு) வந்த இரண்டு அண்ணிகளும் சொக்க தங்கம். எங்கள் மீது அப்படி ஒரு அன்பாக இருப்பாங்க. இப்போ வரையிலும் நான் ஊருக்கு போனா முதல்ல அங்க தான் போவோம்.

1984ம் வருடம். எம்.ஜி.ஆர் ஆட்சி. அப்போது மிக பெரிய ஆசிரியர் போராட்டம். பல்லாயிரகணக்கான ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு பள்ளி கூடத்துக்கு குறந்தது 40 ஆசிரியர்கள் சிறைக்கு போக சங்கம் முடிவெடுத்தது. தமிழநாடு முழுக்க இருந்தும் 30000 ஆசிரியர்கள். எங்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகள் வேண்டாம் என சொல்லி விட்டு மீதி அனைத்து ஆண் ஆசிரியர்களும் சிறைக்கு. நம்ம இந்த பதிவின் நாயகர்கள் புது மாப்பிள்ளைகள். ஓரிரு நாட்களில் விட்டு விடுவாகள் என நினைத்தோம். ஆச்சு 50 நாட்களுக்கு மேலே. திருச்சி சிறைவாசம்.




இந்த நிலையில் KR சார் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அண்ணி சாரை பார்க்க வேண்டும் என அழுகை. திருச்சியில் போய் மனு போட்டு பார்க்கலாம் என்றால் அந்த பச்ச குழந்தையை தூக்கி போக முடியுமா. பின்பு ஒரு நாள் எல்லா ஆசிரியரும் தஞ்சை நீதிமன்றத்துக்கு வருகிறார்கள் என கேள்வி பட்டு நான் அண்ணியை ரயிலில் மெதுவாக அழைத்து சென்றேன் குழந்தையோடு. தஞ்சை ஸ்டேஷனில் இருந்து ஒரு குதிரை வண்டி பிடித்து கோர்ட்க்கு போனேன். அன்றைக்கு 300 ஆசிரியர்களிக்கு அழைப்பு கோர்ட்டில் இருந்து. அந்த கோர்ட் வளாகமே 300 ஆசிரியர் குடும்பத்தினரால் நிரம்பி வழிந்தது. நாங்க காலை 9 மணிக்கு அங்கே இருந்தோம். ஆனா எங்கள் பள்ளியின் பஸ் திருச்சியில் இருந்து மதியம் 2 மணிக்கு தான் வந்தது. பாவம் அந்த பச்சை குழந்தையை வைத்து கொண்டு அந்த வெயிலில் படாத பாடு பட்டாங்க.


அப்ப தான் சார் பார்க்கிறார் குழந்தையை. எல்லா ஆசிரியரும் தாடி. அய்யோ கொடுமையாக இருந்தது. ஆனால் கம்பீர்மாக இருந்தனர். இப்போது சீமாச்சு அண்ணன் மாதிரி மேனேஜ்மெண்ட் குழுவில் இருபவரும், முன்னாள் தலைமை ஆசிரியருமான J.R. ராமமூர்த்தி சார் தான் கொஞ்சம் சோர்வா இருந்தார். ஒரு 15 நிமிடம் தான் பேச முடிந்தது. திரும்பவும் சிறை க்கு போயிட்டாங்க. இந்த நிகழ்ச்சி யை சொல்வதன் காரணம் நான் மட்டும் அல்ல அவர்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் ஆயிரகணக்கானோர் ஆசிரியர் மாணவர்கள் போல கிடையாது. குடும்ப அங்கத்தினர் மாதிரி தான். இது எங்க பள்ளியின் சிறப்பு.


பிறகு என் திருமணத்தின் போது KR சார் அப்பாவிடம் "எனக்கு கலயாண வேலையிலே முக்கியமான ஒரு வேலை தாங்க நான் தான் செய்வேன் " என சொல்ல (நான் கல்யாணத்துகு முதல் நாள் தான் போனேன்) அப்பா பிடிவாதமாக "நீங்க வந்தா போதும் சார்" என சொல்ல இவர் ரொம்ப பிடிவாதமாக இருக்க பின்னே சார் தான் சிதம்பரம் போய் தேங்காய் பையில் போட்டு கொடுக்க அபிராமி அந்தாதி புத்தகம் 600 அழகான ஆப்செட் அட்டையோட பிரிண்ட் செய்து அவரே எடுத்து வந்தார். நான் போய் மிகவும் கடிந்து கொண்டேன்.


வேலையில் சேர்ந்த அன்று சார் சொன்ன மாதிரியே கடந்த 4 வருடங்களாக KR சார் தலைமை ஆசிரியர், (நல்லாசிரியர் விருதும் வாங்கி விட்டார்), KP சார் உதவி தலைமை ஆசிரியர். நம்பு உன்னால் முடியும் என அடிக்கடி சொல்வார்கள் இருவரும். சாதித்து விட்டனர்.
நான் சொல்ல வந்ததில் 10 சதம் மட்டுமே சொல்லியிருக்கேன். ஏன்னா இப்பவே பதிவு பெரியதாக ஆகிவிட்டது.


எனக்கு 1 வருஷ சீனியர் சீமாச்சு அண்ணா அடுத்து இராமபத்திரன் சாரை பத்தி சொல்லுவார்.
அடுத்து எனக்கு 1 வருஷம் ஜூனியர் மயிலாடுதுறை சிவா (ஏற்கனவே NV சார் பத்தி எழுதிவிட்டார்) அதனால வேற ஹீரோ பத்தி எழுதனும்.
ராம்கி எழுதனும், ஆயில்யன், மூக்கு சுந்தர் , எல்லே ராம் சார் எல்லாரும் எழுதனும் நம்ம ஏணிப்படிகள் பற்றி என்பது என் சின்ன வேண்டுகோள்!!