வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Tuesday, March 29, 2011

25. இந்தப் போஸ்டருக்குப் பின்னால பெரிய்ய கதையிருக்கு !!



இந்த முறை (நவம்பர் 2010) மயிலாடுதுறை சென்ற பொழுது நம் பள்ளியின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் ஆசையுடனும் ஒரு ப்ளெக்ஸ் பேனர் (டிஜிட்டல் பேனர்) வைக்க வேண்டுமென்று நினைத்தேன். சென்னை விமான நிலையத்திலிருந்து மயிலாடுதுறை வரை காரில் வரும் போது வழிநெடுக கழகக் கண்மணிகளும், மஞ்சள் நீராட்டுவிழாக்காரர்களும், திருமண விழாதாரர்களும், சினிமா ரசிகர்களும்வைத்திருந்த பேனர்களைப் பார்த்ததன் விளைவு. நான் வைக்க நினைத்த பேனர் வேறு... மற்றபடி, பள்ளி சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் இருந்த கருத்துக்களையெல்லாம் மதித்து பேனர் டிஸைன் செய்து பார்த்தால் வெறும் வெள்ளைத்தாளும் 4 வரி செய்தியுமே மிஞ்சியது..

"சரி.. எல்லோருக்கும் நன்றி.. நானே வெச்சிக்கிறேன்" அப்படீன்னு சொல்லிட்டுப் பார்த்தா என் கூட நின்னு "அண்ணே நீங்க சொல்றதுதான் சரிண்ணே.." சொல்லிக்கிட்டிருந்த ஒரே ஜீவன் நம்ம அபிஅப்பா மட்டும்தான்.."சரி ராஜா.. இப்பவே கூட நிக்கிறே... இனி நம் கனவு நனவாகும் வரை என் கூடவே நில்லு" ன்னு சொல்லி அவரையும் புடிச்சி பேனர்ல போட்டுக்கிட்டேன்...


பள்ளிக்கூட நாட்களில் வகுப்பில் ஏதாவது தப்பு செஞ்சிருந்தால் தான் இந்த மாதிரி கையைக் கட்டிக்கிட்டோ.. கூப்பிக்கிட்டோ நிக்கச் சொல்லி தண்டனை கொடுப்பாங்க.. அப்பல்லாம் என் ஆசிரியர்களிடம் இருந்து ஒரு மாதிரியாத் தப்பிச்சிட்டேன்..

இப்போ பள்ளி வாசலில் நான் என் சக மாணவர்களிட்மிருந்து உதவிகள் வேண்டி, தம்பி தொல்காப்பியனுடன் (அபிஅப்பா) கைக் கூப்பி உங்களை வேண்டுகிறேன்..



அப்படியே, மயிலாடுதுறை மற்றும் ஆங்காங்கே இருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..


உங்களிடம் வாக்கு கேட்டு அரசியல்வாதிகள் கட்டுகட்டாப் பணத்துடனும், மிக்ஸி, கிரைண்டர் ஆடுமாடுகளுடனும் உங்க வீட்டுக்கு வந்துகிட்டிருக்காங்க.. தேர்தலில் வாக்கு போடுவதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமே.. ஆனால் அவங்க உங்க கையிலே திணித்துவிட்டோ.. அல்லது நீங்கள் இல்லாத போது உங்கள் வீட்டுக்க்ள் பணத்தை எறிந்துவிட்டோ போவார்கள்.. நீங்கள் உங்கள் வாக்குகளை விற்காதீர்கள்.. எங்கள் பள்ளி வளர்ச்சி நிதிக்கு (படத்துல இருக்குற கட்டடத்தைப் பாருங்க...) 10 கோடி ரூபாய் வரை பணம் தேவை.. அதற்கு தந்து உதவுங்கள்... இன்று வரை 110 ஆண்டுகளாக, ஏழைப் பிள்ளைகள் இலவசமாய்ப் படிக்கும் கல்விக்கோவில் அது..


ஏப்ரல் 13 அன்று உங்கள் மனசாட்சிப்படி உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயகக் கடமையாற்ற மறந்து விடாதீர்கள்!!!


இந்த படத்தில் உள்ள பேனர் வந்த விதமும் அதன் பின்னால் நான் சந்தித்த சோதனைகளும் அடுத்த இடுகையில் விரிவாக....


Friday, March 11, 2011

பாண்டிச்சேரி கூட்டணி பேச்சுவார்த்தை - ஆயில்யன் பங்கேற்பு!!!


எல்லாம் மந்தமாகவே நடக்கிறது என்று அங்கலாய்த்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ... திட்டமிடல் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது என்பதை உங்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தும் விதத்தில் தான் இந்த பதிவு மக்களே! நம் பள்ளி புதிதாக கட்டப்பட இருக்கும் செய்தி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கான மாதிரி கட்டிடத்தின் படம் கூட பள்ளி கூடத்தின் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. அதன் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் வரைபடங்கள் எல்லாம் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகின்றது. இதனிடையில் நேற்று முன் தினம் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கட்டுமானப்பணியில் இருக்கும் நிறுவனத்தில் இருந்து அதன் தலைவரும், ஒரு ஆர்க்கிடெக்டும், பொறியாளரும் நம் பள்ளிக்கு வருகை தந்து நம் பள்ளி தலைமையாசிரியர் திரு. கே. ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நம் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் திரு. அருண் தாஸ் அவர்களின் தலைமையிலும் பேச்சு வார்த்தை நடந்தது. அது சமயம் நானும், தம்பி ஆயில்யனும், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை கட்டுமான தொழிலதிபர் திரு. மூர்த்தி அண்ணன் அவர்களும் கல்ந்து கொள்ள அண்ணன் திரு. எஸ். எஸ். வாசன் (சீமாச்சு அண்ணன்) வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனைகள் வழங்கினார். வந்திருந்த கட்டுமான நிறுவனத்தினருக்கு திரு. அருண் தாஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். ஆகவே மக்களே இதோ பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் பிரிவு 1 இடிக்கப்பட்டு வேலை ஆரம்பம் ஆகிவிடும். உடனடியாக நம் பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பினை செய்ய சரியான நேரமிது என்பதை உணருங்கள். ஐந்தரை கோடி மதிப்பீடு என்பது இப்போது ஆறு கோடி என.உயர்ந்து விட்டது என்பதையும் உங்கள் மேலான பார்வைக்கு வைக்கின்றோம். (தலைப்பு : சும்மா கவர்ச்சிக்கு)