வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, July 31, 2011

29. மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி புதிய கட்டட மாதிரிப் படங்கள்

எங்கள் பள்ளி (மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி)யின் உள்கட்டமைப்பு வசதிக்கு உதவுமாறு எங்கள் முன்னாள் மாணவர்களை சங்கத்தின் சார்பில் தொடர்பு கொண்டு வருகிறேன்

பள்ளியின் கட்டடங்கள் மற்றும் இதர வசதிகளை உலகத்தரத்துக்கு இல்லாவிட்டாலும் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளி தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு. அரசு உதவிபெறும் பள்ளி இது. கட்டட அமைப்புக்களை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4000 ஏழை மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். மயிலாடுதுறை நகரில் கடந்த 110 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளி இது.

பள்ளியில் புதிதாக 75,000 சதுர அடி கட்டடங்கள் கட்டப்படவேண்டும். முடிந்தால் அருகிலுள்ள வீடுகளை வாங்கி பள்ளியை விரிவு படுத்தியாக வேண்டும். மயிலாடுதுறையில் தரமான கட்டடம் கட்ட தற்போது சதுர அடிக்கு ரூ1300 முதல் 1500 வரை ஆகிறது.

அதனால் கட்டடப்பணிகளுக்கென ரூபாய் 10 கோடியும் புதிய நிலங்கள் வாங்க ரூபாய் 5 கோடியும் திட்ட மதிப்பாக இடப்பட்டு நிதி வசூலிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. எங்கள் பள்ளியில் படித்து, பள்ளியின் பால் அன்பும் பாசமும் கொண்ட முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டவண்ணம் இருக்கின்றேன்..

புதிட கட்டடத்துக்கான மாதிரி படங்கள்.. கட்டி முடித்தபின் எங்கள் பள்ளியின் கனவு கட்டடங்கள் இவ்வாறு இருக்கும் என விழைகிறேன்..

பள்ளியின் முகப்பில் இருக்கும் பெரியவர் தான் கோமல் சீனுவாச ஐயங்கார். 1901 ம் ஆண்டு எங்கள் பள்ளியை நிறுவி அதன் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்தவர். அப்பொழுது எங்கள் பள்ளி அமைந்திருந்த கூரைக் கொட்டகை ஒரு விபத்தில் தீப்பிடித்து எரிந்த போது, பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தன் இல்லத்தையே தந்தவர். அவரும் அவர் மனைவியும், குழந்தைகளும் அவர் வீட்டு மாட்டுக் கொட்டகையில் தங்கி சமைத்து சாப்பிடும் போது பள்ளி வகுப்புகள் அவர் இல்லத்தினுள் தொடர்ந்தன. அவரின் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகத்தினால் மட்டுமே எங்கள் பள்ளி மாணவர்கள் 110 வருடங்களாக சிறந்த முறையில் பயின்று வந்திருக்கின்றனர். தற்போது பள்ளியில் இருப்பது அவரது ஒரு படம் மட்டுமே. பள்ளி கட்டடம் நிறைவுற்றதும், அவரது மார்பளவிலான வெங்கலச் சிலையினை பள்ளி வளாகத்தினுள் என் சொந்த செலவில் அமைத்து அவர் தம் தியாகத்தினை எழுதி வைக்க வேண்டுமென்பது என் அவா. அவர் தம் வாரிசுகள் எங்கிருக்கின்றனர் என் நான் அறியேன்.. தேடிக்கொண்டிருக்கிறேன்.. கிடைத்தால் அவர்களையும் அழைத்து கௌரவிக்க வேண்டும் என்பது என் ஆசை..














Sunday, July 3, 2011

28. எங்கள் முன்னாள் மாணவர் கணேசனுக்கு நன்றி !!

எங்க ஸ்கூல் மாணவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் முதல் கட்டத்தில் எனக்கு அறிமுகமானவர் கணேசன் தான். அவரிடம் நான் பேசியது 2003 ல்.

எங்க ஸ்கூலில் 1974 முதல் 1978 வரை 8, 9, 10, 11 ம் வகுப்புகளில் (அந்தக் கால old SSLC) படித்துத் தேறி இன்று அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் பெரிய பதவியில் இருப்பவர்.

நான் 2003 ல் பேசியபோது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருக்கு ஆதர்சமான ஆசிரியர் எஸ். கே அன்று அன்புடன் அறியப்பட்ட திரு எஸ். கிருஷ்ணமுர்த்தி என்ற கணித ஆசிரியர்.

“நானெல்லாம் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் சார்.. என் கிட்டே புத்தகம் நோட்டு வாங்க எல்லாம் அப்ப காசு கிடையாது சார்.. நான் நல்லாப் படிக்கிறதைப் பார்த்துட்டு எஸ். கே சார் தான் எனக்கு அகோர சாஸ்திரிகள் அற நிலைய ட்ரஸ்டுல சொல்லி எனக்கு பாடப் புத்தகங்களெல்லாம் இலவசமாக வாங்கிக் கொடுத்து என்னைக் கரை சேர்த்தவர்.. அவர் ஃபோன் நம்பர் உங்ககிட்டே இருக்கா? அவர்னா எனக்கு ரொம்ப உசிர் சார்” என்று உருகினார்.

எஸ்கே அவர்கள் அப்பொழுது தனது ஆசிரியப் பணியை முடித்து ஓய்வு பெற்று சென்னையில் தன் மகனுடன் செட்டிலாயிருந்தார்.. அவரது தொலைபேசி எண்ணையும் வீட்டு முகவரியையும் வாங்கி கணேசனிடம் கொடுத்தேன்..

“அடுத்த வருஷம் நான் வகேஷனுக்குப் போகும் போது அவசியம் எஸ்.கே சாரைப் பார்த்து நன்றி சொல்லப் போறேன்” என்று ஆனந்தமாக கண்ணீருடன் வாங்கிக்கொண்டார்.

அவரது துரதிருஷ்டம, கணேசன் லீவுக்கு சென்னை செல்வதற்கு முன் அக்டோபர் 2004ல் எங்கள் அன்புக்குரிய ஆசிரியர் காலமாகிவிட்டார்.

பள்ளியின் கட்டிட ப்ராஜெக்ட் ஆரம்பித்த போது நவம்பர் 2009ல் நான் மீண்டும் பேசியது கணேசனிடம் தான்.. கணேசன் ஸ்கூலுக்கு ஏதாவது பண் உதவி முடிந்தால் செய்யுங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தேன். அன்று மட்டும் என்னிடம் அவர் எஸ்.கே சாரைப் பற்றியும் அவர் தனக்குச் செய்த உதவிகளையும் பற்றி 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்..

“அப்ப ஸ்கூலுக்கு ஒரு க்ளாஸ் ரூம் கட்டிக் கொடுத்து விடுங்கள் .. க்ளாஸுக்கு எஸ். கே சார் பேரை வைத்து விடுவோம். சாரோட பொண்ணு துர்கா சென்னையில் தானிருக்கிறார். அவரை வரவழைத்து வகுப்பறையைத் திறந்து வைத்து விடுகிறேன் “ என்றேன்.

“எவ்வளவு சார் ஆகும்? “ என்றார் கணேசன்.

“ஒரு வகுப்பறை எப்படியும் 500 சதுர அடி கட்ட வேண்டியிருக்கும்.. 5 லட்ச ரூபாய் ஆகுமே” என்றேன்.

அடுத்த வினாடி..”எப்போ சார் வேணும்.. கொடுத்துடறேன்” என்று வாக்கு கணேசனிட்மிருந்து வந்தது.

“இப்பத்தான் நாங்க திட்ட வேலைகள் ஆரம்பித்திருக்கிறோம்.. தேவைப் படும் போது தொடர்பு கொள்கிறேன்.. நன்றி..” என்று சொல்லி முடித்தேன்..

சென்ற வாரம் அவரைத் தொடர்பு கொண்டு பள்ளிக்காகத் தொடங்கிய வங்கிப் பதிவு எண்ணைச் சொன்னேன்..

இன்று கணேசனிடமிருந்து செய்தி..

“ஒரு லட்ச ரூபாய் நம்ம ஸ்கூல் அக்கவுண்டுக்கு அனுப்பியிருக்கிறேன்... வந்து விட்டதா என்று சொல்லுங்கள்.. அது வந்த வுடன் அடுத்த வாரம் மீதம் 4 லட்ச் ரூபாய் அனுப்பி வைக்கிறேன்” என்று.

எங்கள் பள்ளி மாணவர்களின் குருபக்திக்கு மாணவர் கணேசன் முத்துகிருஷ்ணன் ஒரு பெரிய சான்று..

கணேசனுக்கும் அவர் தம் குருபக்திக்கும் எனது பெரிய வந்தனங்கள் !!

தான் மறைந்த பின்னும் தனது மாணவர்கள் மனதில் இடம் பிடித்த எனது அன்புக்குரிய ஆசிரியர் (இவர் எனக்கும் கணித ஆசிரியர்.. அவரிடம் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் நான் கணிதமும் ஆங்கிலமும் படித்திருக்கிறேன்) திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அவரது குடும்பத்தினர் பல்லாண்டு வாழ அன்புடன் பிரார்த்திக்கிறேன்..

Sunday, June 26, 2011

27. முன்னாள் மாணவர் அரசூரானுக்கு நன்றி!!

எங்கள் பள்ளி (மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி)யின் உள்கட்டமைப்பு வசதிக்கு உதவுமாறு எங்கள் முன்னாள் மாணவர்களை சங்கத்தின் சார்பில் தொடர்பு கொண்டு வருகிறேன்

பள்ளியின் கட்டடங்கள் மற்றும் இதர வசதிகளை உலகத்தரத்துக்கு இல்லாவிட்டாலும் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளி தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு. அரசு உதவிபெறும் பள்ளி இது. கட்டட அமைப்புக்களை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4000 ஏழை மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். மயிலாடுதுறை நகரில் கடந்த 110 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளி இது.

பள்ளியில் புதிதாக 75,000 சதுர அடி கட்டடங்கள் கட்டப்படவேண்டும். முடிந்தால் அருகிலுள்ள வீடுகளை வாங்கி பள்ளியை விரிவு படுத்தியாக வேண்டும். மயிலாடுதுறையில் தரமான கட்டடம் கட்ட தற்போது சதுர அடிக்கு ரூ1300 முதல் 1500 வரை ஆகிறது.

அதனால் கட்டடப்பணிகளுக்கென ரூபாய் 10 கோடியும் புதிய நிலங்கள் வாங்க ரூபாய் 5 கோடியும் திட்ட மதிப்பாக இடப்பட்டு நிதி வசூலிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. எங்கள் பள்ளியில் படித்து, பள்ளியின் பால் அன்பும் பாசமும் கொண்ட முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்.

110 வருட பாரம்பரியப் பள்ளி என்பதால் எங்கள் பள்ளியின் மூத்த மாணவர்களின் தலைமுறைகளும் இப்பொழுது உலகளவில் இருக்கிறார்கள். “எங்க அப்பாவும் தாத்தாவும் மாயவரம் நேஷனல் ஹைஸ்கூல்ல தான் சார் படிச்சாங்க” என்று பெருமை பேசும் இளைஞர்கள் அதிகம்.

எங்கள் பள்ளியில் படித்து இங்க பதிவு எழுதும் இளம் பதிவர்கள் அதிகம்.

பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் பேசும் போது பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் அவர்களின் அனுபவங்களையும் நெகிழ்ச்சியான சம்பவங்களையும் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. “அப்ப மட்டும் நான் இந்த ஸ்கூல்ல படிக்கலைனா, அந்த ஆசிரியர்கள் எனக்கு அன்பாக சொல்லிக் கொடுத்திருக்காவிட்டால் இப்ப என்னால இந்த அளவுக்கு வந்திருக்கவே முடியாது சார்.. என் குடும்பம் நல்ல நிலையில் இன்று இருப்பதற்கு பெரிய்ய காரணமே அந்த பள்ளிக்கூடம் தான் சார்” என்ற வார்த்தைகளை நான் மாணவர்களிடம் கேட்காத நாளே கிடையாது.

ஒவ்வொருவரிடமிருந்து அதைக் கேட்கும் போது ஒரு கலவையான உணர்ச்சிக்குவியலே பதிலாகத் தெரியும்..


புதிய கட்டடத்திற்கான 15 கோடி ரூபாய் எப்படி நான் வசூலிப்பதென்று எனக்கு முதலில் மலைப்பாகத்தான் இருந்தது.. அப்துல் கலாம் பாணியில் கனவு மட்டும் கண்டுகொண்டிருந்தால் மட்டும் போதாது.. கண்ட கனவை நிறைவேற்ற உழைக்கவும் வேண்டும் என்பது புரிந்தது.. உலகெங்கிலும் உள்ள எங்கள் பள்ளி மாணவர்களைத் தொடர்பு கொண்டு 1500 பேரைத் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரிடமுன் 1 லட்ச ரூபாய் நன்கொடையாகப் பெற்றால் இது நிச்சயம் முடியும். 110 வருடங்களில் 7-8 தலைமுறைகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெருமையுடன் படித்துச் சென்ற பள்ளி இது. தொடர்பு கொண்டு அவர்களிடம் பள்ளி நினைவுகளில் அவர்களை ஆழ்த்தினால் நிச்சயம் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் பலரிடம் பேசி வருகிறேன்


இங்கு தமிழ்ப் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் என் நண்பர் அரசூரான் ராஜா எங்கள் பள்ளியில் 11வது மற்றும் 12வது படித்தவர். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு எங்கள் பள்ளிக்கு வந்தவர். ”நான் இரண்டு வருடங்களே இந்தப் பள்ளியில் படித்திருந்தாலும் இந்தப்பள்ளிக்கு நான் முழுமையாகக் கடன்பட்டிருக்கிறேன் அண்ணே.. ” என்று அடிக்கடி என்னிடம் சொல்லி பெருமைப் பட்டிருக்கிறார்

சென்ற வருடம் நான் அவரிடம் பேசியபோது ”என் சார்பாக நான் ரூ50,000 தருகிறேன் அண்ணே” என்று உடனடியாக வாக்கு தந்தவர். அதற்கு பின் மற்ற மாணவர்களிடம் பேசினாலும் நானே முன்வந்து அரசூரானுக்கு அவரது வாக்குறுதியை நினைவுறுத்தவில்லை.. எங்கள் பள்ளி மாணவர்கள் நினைவூட்டினால் தான் தருவார்கள் என்பது கிடையாதென்று எனக்குத் தெரியும்.

சனிக்கிழமை அரசூரானிடமிருந்து ஒரு ஃபோன். அவர் தற்போது வட அமெரிக்காவில் வசிக்கிறார். விடுமுறைக்கு இந்தியா செல்வதுண்டு.

“அண்ணே மாயவரம் போயிட்டு இப்பத்தான் வந்தேண்ணே !”

“என்ன ராஜா ..ட்ரிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா?”

“நல்லாயிருந்திச்சிண்ணே..”

இப்பத்தான் ப்ளேன்ல இருந்து வந்து இறங்கியிருக்காரு.. இன்னும் களைப்பாயிருப்பாரு.. நாம ஆரம்பிக்க வேண்டாமென்று ஒரு மனது சொன்னாலும்.. இன்னொரு மனது கேட்கவில்லை..

“ரொம்ப பிஸியா இருந்திருப்பீங்க அங்க.. நம்ப ஸ்கூல் பக்கம் போயிட்டு வந்தியா ராஜா..” - கொஞ்சம் தயக்கதுடன் தான் கேட்டேன்..

“வெள்ளிக்கிழமை போயிருந்தேண்ணே.. கிளம்பறதுக்கு முதல் நாள் தான் கொஞ்சம் நேரம் கிடைச்சது.. போய் ஹெட் மாஸ்டரைப்பார்த்து நம்ம பள்ளி கட்டட நிதிக்காக நான் சொன்னமாதிரி ரூபாய் 50000 காசோலை கொடுத்திட்டேன் அண்ணே..” - அப்படீன்னாரு...

ரொம்ம மகிழ்ச்சியா இருந்தது.. சொல்லி ஒரு வருடம் ஆனது. நான் எந்தவிதமான நினைவூட்டலும் செய்யவில்லை.. தான் அங்கு போயிருந்த போது மறக்காமல் பள்ளிக்குச் சென்று காசோலை தந்து வந்தது .. இது தான் எங்கள் பள்ளி எங்கள் எல்லோருக்கும் கற்றுத் தந்தது..

இரண்டுவருடங்கள் மட்டுமே எங்கள் பள்ளியில் படித்திருந்த மாணவருக்கே இவ்வளவு பாசமிருந்திருந்தால் ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, ஆறாம் வகுப்பிலிருந்தோ 7 முதல் 12 வருடங்கள் படித்த மாணவர்களுக்கு எவ்வளவு பாசமிருக்கும் !!

நான் அந்தப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 7 வருடங்கள் படித்தேன்.. எல்லோர் ஆதரவிலும் நான் எடுத்துள்ள இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்னும் என் நம்பிக்கை விருட்சமாக என்னுள் வளர்கிறது !!!

பள்ளியின் அனைத்து மாணவர்கள் சார்பாக.. என் அன்பு நண்பர் அரசூரான் ராஜா-சுஜா தம்பதிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..


Monday, May 30, 2011

26. எங்கள் பள்ளி 2011 மாநிலப் பொதுத்தேர்வு முடிவுகள்..

மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது தேர்வுகளில் வழக்கம்போல சாதனை புரிந்துள்ளனர்.


பன்னிரண்டாவது XII பொதுத்தேர்வு முடிவுகள் :

பொதுத்தேர்வு எழுதிய 237 மாணவர்களில் 225 மாணவர்கள் வெற்றி பெற்று எங்கள் பள்ளி தேர்ச்சிவிகிதத்தை 95% சதவிகிதமாக்கினர்.

பொருளாதாரப் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்..

12 மாணவர்கள் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்தனர். அதில் கணிதத்தில் இருவர், இயற்பியலில் இருவர், வேதியியலில் ஒருவர், வர்த்தகத்தில் 6 பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

1200-க்கு 1137 மதிப்பெண்கள் பெற்று எங்கள் பள்ளி மாணவர் P.இராஜகோபாலன் பள்ளியிலேயே முதல் மாணவராக வரப்பெற்றார்.

1200-க்கு 1126 மதிப்பெண்கள் பெற்று மாணவி C.ஷோபனா இரண்டாம் இடத்தையும் , 1111 மதிப்பெண்கள் பெற்று மாணவி அனுப்ரியா மூன்றாமிடத்தையும் பெற்றார்.


பத்தாம் வகுப்பு Xth பொதுத்தேர்வு முடிவுகள் :


பொதுத்தேர்வு எழுதிய 413 மாணவர்களில் 390 மாணவர்கள் வெற்றி பெற்று எங்கள் பள்ளி தேர்ச்சிவிகிதத்தை 95% சதவிகிதமாக்கினர்.

ஆறு மாணவர்கள் கணிதத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர். அறிவியல் பாடத்தில் ஒரு மாணவர் 100/100 பெற்றார். தேர்வு எழுதிய மாணவர்களில் 112 மாணவர்கள் (27 % சதவிகிதம்) 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றது இந்த வருட சாதனை.


500-க்கு 484 மதிப்பெண்கள் பெற்று மாணவர் அஜீத் குமார் எங்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.. இவர் கணிதத்திலும் அறிவியலிலும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்..

500-க்கு 481 பெற்று மாணவி சபீபா இரண்டாமிடத்தையும், 480 பெற்று மாணவி திவ்யா மூன்றாமிடத்தையும் பெற்றார்.


அனைத்து மாணவ மாணவியருக்கும், இந்த சாதனையின் பின் நின்று பெரும் உழைப்பை நல்கிய ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்..

ஒரு பொதுத்துறை பள்ளியில் தேர்வு எழுதிய 413 மாணவர்களில் 112 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெறுவதென்பது மிகப்பெரிய சாதனைதான்...!!!!!!



Tuesday, March 29, 2011

25. இந்தப் போஸ்டருக்குப் பின்னால பெரிய்ய கதையிருக்கு !!



இந்த முறை (நவம்பர் 2010) மயிலாடுதுறை சென்ற பொழுது நம் பள்ளியின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் ஆசையுடனும் ஒரு ப்ளெக்ஸ் பேனர் (டிஜிட்டல் பேனர்) வைக்க வேண்டுமென்று நினைத்தேன். சென்னை விமான நிலையத்திலிருந்து மயிலாடுதுறை வரை காரில் வரும் போது வழிநெடுக கழகக் கண்மணிகளும், மஞ்சள் நீராட்டுவிழாக்காரர்களும், திருமண விழாதாரர்களும், சினிமா ரசிகர்களும்வைத்திருந்த பேனர்களைப் பார்த்ததன் விளைவு. நான் வைக்க நினைத்த பேனர் வேறு... மற்றபடி, பள்ளி சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் இருந்த கருத்துக்களையெல்லாம் மதித்து பேனர் டிஸைன் செய்து பார்த்தால் வெறும் வெள்ளைத்தாளும் 4 வரி செய்தியுமே மிஞ்சியது..

"சரி.. எல்லோருக்கும் நன்றி.. நானே வெச்சிக்கிறேன்" அப்படீன்னு சொல்லிட்டுப் பார்த்தா என் கூட நின்னு "அண்ணே நீங்க சொல்றதுதான் சரிண்ணே.." சொல்லிக்கிட்டிருந்த ஒரே ஜீவன் நம்ம அபிஅப்பா மட்டும்தான்.."சரி ராஜா.. இப்பவே கூட நிக்கிறே... இனி நம் கனவு நனவாகும் வரை என் கூடவே நில்லு" ன்னு சொல்லி அவரையும் புடிச்சி பேனர்ல போட்டுக்கிட்டேன்...


பள்ளிக்கூட நாட்களில் வகுப்பில் ஏதாவது தப்பு செஞ்சிருந்தால் தான் இந்த மாதிரி கையைக் கட்டிக்கிட்டோ.. கூப்பிக்கிட்டோ நிக்கச் சொல்லி தண்டனை கொடுப்பாங்க.. அப்பல்லாம் என் ஆசிரியர்களிடம் இருந்து ஒரு மாதிரியாத் தப்பிச்சிட்டேன்..

இப்போ பள்ளி வாசலில் நான் என் சக மாணவர்களிட்மிருந்து உதவிகள் வேண்டி, தம்பி தொல்காப்பியனுடன் (அபிஅப்பா) கைக் கூப்பி உங்களை வேண்டுகிறேன்..



அப்படியே, மயிலாடுதுறை மற்றும் ஆங்காங்கே இருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..


உங்களிடம் வாக்கு கேட்டு அரசியல்வாதிகள் கட்டுகட்டாப் பணத்துடனும், மிக்ஸி, கிரைண்டர் ஆடுமாடுகளுடனும் உங்க வீட்டுக்கு வந்துகிட்டிருக்காங்க.. தேர்தலில் வாக்கு போடுவதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமே.. ஆனால் அவங்க உங்க கையிலே திணித்துவிட்டோ.. அல்லது நீங்கள் இல்லாத போது உங்கள் வீட்டுக்க்ள் பணத்தை எறிந்துவிட்டோ போவார்கள்.. நீங்கள் உங்கள் வாக்குகளை விற்காதீர்கள்.. எங்கள் பள்ளி வளர்ச்சி நிதிக்கு (படத்துல இருக்குற கட்டடத்தைப் பாருங்க...) 10 கோடி ரூபாய் வரை பணம் தேவை.. அதற்கு தந்து உதவுங்கள்... இன்று வரை 110 ஆண்டுகளாக, ஏழைப் பிள்ளைகள் இலவசமாய்ப் படிக்கும் கல்விக்கோவில் அது..


ஏப்ரல் 13 அன்று உங்கள் மனசாட்சிப்படி உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயகக் கடமையாற்ற மறந்து விடாதீர்கள்!!!


இந்த படத்தில் உள்ள பேனர் வந்த விதமும் அதன் பின்னால் நான் சந்தித்த சோதனைகளும் அடுத்த இடுகையில் விரிவாக....


Friday, March 11, 2011

பாண்டிச்சேரி கூட்டணி பேச்சுவார்த்தை - ஆயில்யன் பங்கேற்பு!!!


எல்லாம் மந்தமாகவே நடக்கிறது என்று அங்கலாய்த்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ... திட்டமிடல் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது என்பதை உங்களுக்கு எல்லாம் தெரியப்படுத்தும் விதத்தில் தான் இந்த பதிவு மக்களே! நம் பள்ளி புதிதாக கட்டப்பட இருக்கும் செய்தி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கான மாதிரி கட்டிடத்தின் படம் கூட பள்ளி கூடத்தின் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. அதன் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் வரைபடங்கள் எல்லாம் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு வருகின்றது. இதனிடையில் நேற்று முன் தினம் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய கட்டுமானப்பணியில் இருக்கும் நிறுவனத்தில் இருந்து அதன் தலைவரும், ஒரு ஆர்க்கிடெக்டும், பொறியாளரும் நம் பள்ளிக்கு வருகை தந்து நம் பள்ளி தலைமையாசிரியர் திரு. கே. ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நம் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் திரு. அருண் தாஸ் அவர்களின் தலைமையிலும் பேச்சு வார்த்தை நடந்தது. அது சமயம் நானும், தம்பி ஆயில்யனும், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை கட்டுமான தொழிலதிபர் திரு. மூர்த்தி அண்ணன் அவர்களும் கல்ந்து கொள்ள அண்ணன் திரு. எஸ். எஸ். வாசன் (சீமாச்சு அண்ணன்) வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனைகள் வழங்கினார். வந்திருந்த கட்டுமான நிறுவனத்தினருக்கு திரு. அருண் தாஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். ஆகவே மக்களே இதோ பள்ளி தேர்வுகள் முடிந்தவுடன் பிரிவு 1 இடிக்கப்பட்டு வேலை ஆரம்பம் ஆகிவிடும். உடனடியாக நம் பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்கள் பங்களிப்பினை செய்ய சரியான நேரமிது என்பதை உணருங்கள். ஐந்தரை கோடி மதிப்பீடு என்பது இப்போது ஆறு கோடி என.உயர்ந்து விட்டது என்பதையும் உங்கள் மேலான பார்வைக்கு வைக்கின்றோம். (தலைப்பு : சும்மா கவர்ச்சிக்கு)

Sunday, February 27, 2011

23. மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியின் 111 ஆவது ஆண்டுவிழா..

இன்று 28 பிப்ரவரி, 2011 திங்கட்கிழமையன்று, நூற்றுப்பதினோராவது ஆண்டுவிழாக் காணும் எங்கள் பள்ளியின் இன்னாள் மாணவமாணவிகளுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..




வரும் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவமாணவிகள் பள்ளிக்குப் பெருவெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகிறோம் !!