வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, August 31, 2008

அம்மா என்னும் அழகி!!!

அம்மா!!! என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான். நான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன். இவங்க அம்மாவை விட அழகா என்ன? ச்சே அப்படி எல்லாம் இல்லை. என் அம்மா தான் அழகு என்றே யாரையும் பற்றி நினைத்து கொள்வேன். அது போல அம்மாவின் ஆளுமைதன்மையும் என்னை பிரமிக்க வைக்கும். தான் நினைத்ததை சாதிக்கும் அம்மாவின் குணம் எனக்கு வியப்பை தரும்.அம்மாவின் உடை உடுத்தும் நேர்த்தியும் என்னை கவரும்.


அம்மாவின் அறிவு என்னை ஆச்சர்யத்தை கொடுக்கும். அம்மாவின் கண்டிப்பு எனக்கு ஆத்திரம் கொடுக்கும். ஆனாலும் அது பிடிக்கும். அம்மா என் தொடையை திருகிய போதெல்லாம் 'கொடூரி' என நினைத்து கொள்வேன். அப்படி அப்போது செய்திருக்காவிடில் நான் இப்போது கொடூரனாய் ஆகியிருப்பேன். அம்மாவின் பிடிவாதம் எனக்கு பிடிக்கும். அது போல விட்டுகொடுத்தலும் பிடிக்கும்.


பெரிய ஒரு ரூபாய் நாணய பொட்டும், கத்தரிப்பூ வண்ண பட்டு புடவையும், காதில் ஆடும் ஜிமிக்கியும்,முத்து வைத்த கொலுசும், சடை பின்னியிருந்தால் அதில் குஞ்சமும், பின்னியிருக்காவிடில் பன் கொண்டையும், முழங்கை வரையிலான ஜாக்கெட்டும், மஞ்சள் பூசிய முகமும், ரெமி பவுடர் வாசனையும், அக்குள் வியர்வையில் நனைந்த ஜாக்கெட்டும், அழுத்தி நடந்தால் கேட்கும் மெட்டிஒலியும், இடுப்பிலே குண்டாக என் தம்பியும்,தலையில் தொங்கவிட்ட சந்தனமுல்லையும், பன் கொண்டை போட்டால் அதை சுற்றி கனகாம்பரமும்....அப்படியே அம்மா கையை பிடித்து கொண்டு உலகையே சுற்றி வரலாம் என நினைக்கும் மனது.


அம்மாவின் ஞாபக சக்தி அம்மாவிம் வரம். அம்மா படித்தது என்னவோ ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆனால் லெஷ்மிமுதல், சிவசங்கரி வரை அத்துப்படி. ஐந்து மணிக்கு என்னை எழுப்பி படிக்க சொன்ன போது ஆனந்து மாதிரி எனக்கும் அம்மா இல்லையெனில் நன்றாக இருந்திருக்குமே என அசிங்கமாக நினைத்ததுண்டு. போர்வையை போர்த்தி உட்காந்து கொண்டு ஏதோ அய்யர் மந்திரம் ஓதுவது போல் தூக்கத்தில் படித்தால் வார்த்தை தனக்கும் புரியவேண்டும் என தலயில் அம்மா தண்ணி ஊத்திய போது தாயின் காலடியே நரகம் என நான் தவறாய் நினைத்ததுண்டு. முதல் நாள் படித்து மனப்பாடம் செய்ததை அடுத்த நாளும் படித்தால் தூங்கி கொண்டிருக்கும் அம்மாவுக்கு தெரிந்துவிடும். ஐந்தாம் வகுப்பு படித்த அம்மாவுக்கும் குவாண்டம் தியரிக்கும் போன ஜென்ம உறவு போலிருக்கு என நினைத்து கொள்வேன்.

அம்மாவின் சமையல் போல இனி இந்த ஜென்மத்தில் எங்கும் நான் சாப்பிடபோவதில்லை. அப்பா சாப்பிடும் போது மட்டும் பக்கத்தில் இருந்து பரிமாறும் அம்மா பார்க்கவே அழகாய் இருக்கும். அப்பா மோர் சாதம் சாப்பிடும் போது கையில் உருண்டையில் கட்டை விரலால் சின்ன குழி செய்து அதில் அம்மா கொஞ்சமாய் குழம்பு ஊத்தும் போது எனக்கும் அப்படி அம்மா செய்யாதா என ஏங்கியது உண்டு. அம்மா என்னை கொஞ்சியதாக ஞாபகம் இல்லை. அம்மாவின் கண்டிப்புகளே ஞாபகத்தில் இருக்கின்றன.

முதன் முதலாக அம்மா அப்பாவிடம் "விகடன் படிக்க முடியவில்லை. கண்ணாடி போடனும் போல இருக்கு" என சொல்லிய போது நான் கொஞ்சம் ப்யத்துடன் வெட்கப்பட்டேன். ஓ அம்மாவுக்கும் வயசாகுமோ? அப்போதும் அம்மா அழகாய் தான் இருந்தது. பின்பு நெற்றி ஓர நரை விழுந்தது அம்மாவுக்கு. அப்பாவின் மீசைக்கான கருப்பு மை பென்சிலால் அல்லது கண்மையினால் அம்மா அதை மறைத்து கொண்ட போது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

பெரியக்கா வயதுக்கு வந்த போது அம்மா அழுதது ஞாபகம் இருக்கு. ஆனால் அப்போது காரணம் தெரியவில்லை. எதற்குமே நீ கவலைப்பட மாட்டாயே அப்போது ஏன் அழுதாய் என இப்போது புரிகின்றது. பொறுப்பு சுமை அதிகமான கவலை போலிருக்கு அப்போது உனக்கு. கொஞ்ச நேரம் தான் பின்னே அதன் பின்னே அம்மா எப்போதுமே எதற்குமே கலங்கியது இல்லை.


எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே அம்மாவிடம் சண்டையிட்டு 27 பக்க கடிதம் எழுதி வீட்டின் வாசலில் தபால் பெட்டியில் போட்டு அடுத்த நாள் "சார் போஸ்ட்" என கூவிய தபால்காரரிடம் இருந்து நான் வாங்காமல் "மேடம் உங்களுக்கு தான்"" என உன்னிடம் சொல்லி அடுக்களை வேலையாக இருந்த அம்மாவை விட்டு வாங்க சொல்லி அதை வாங்கிய அம்மா 1 வாரம் அதை பிரிக்காமல் என்னை சித்ரவதை செய்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அதன் பிறகு நானும் அதை மறந்து விட்டேன். அதன் பின் பல வருஷம் கழித்து எனக்கு திருமணம் எல்லாம் ஆன பின்பு ஒரு நாள் அம்மாவின் பெட்டியை குடைந்த போது அந்த கடிதம் கண்டேன். அப்போது அம்மா சொன்னது "உன் கடிதத்தை படித்து பார்" என்று. படித்த எனக்கு சிரிப்பையும் கண்னீரையும் அடக்க முடியவில்லை. "இன்னுமா இதை வைத்திருக்கிறாய்" என கேட்ட போது சொன்னது"எனக்குன்னு தனியா ஏது சொத்து. இதல்லாம் தான்"என்றது. அதிலே நான் எழுதி இருந்தது எல்லாமே வாழ்த்துப்பா இல்லை. என் அதிக பட்ச கோவத்தை காட்ட எண்ணி "**" என என் தேள் கொடுக்கால் கொட்டியிருந்தேன். அது அம்மாவுக்கு சொத்தாம். நான் என்ன சொல்ல இதற்கு மேல்!


அம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது. ஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா "எப்புடுடீ இருக்க??" என கேட்ட போது உடைந்து அழுதேன். இத்தனை வருஷம் கூடவே இருந்தேனே அப்போது ஒரே ஒரு தடவை இப்படி கொஞ்சலாக கேட்டிருந்தால் நான் உன் காலையே சுற்றி வந்திருப்பேனே என தோன்றியது. அம்மாவை நான் அப்போது தான் முதன் முதலாக நேசிக்க தொடங்கினேன் என நினைக்கிறேன்.அப்போது தான் அம்மாவின் உருவத்தை மனதில் நினைத்து பார்த்து கொண்டேன். நான் நினைவு தெரிந்து பார்த்த அம்மாவுக்கும் அப்போது இருந்த அம்மாவுக்கும் நிறைய வித்யாசம் இருந்தது. ஆனால் அம்மாவை நினைத்தாலே வருமே ஒரு அம்மா வாசனை அது மட்டும் மாறவேயில்லை. அந்த வாசனையை எப்படி சொல்வது, ஒரு மாதிரியாக மஞ்சள் வாசனை மாதிரி, ஒரு வித குங்கும வாசனை மாதிரி அதை வர்ணிக்க முடியவில்லை எனக்கு. நான் அபுதாபி வரும் முன் என் கையை பிடித்து கொண்டது அம்மா. அது என்ன அந்த கைக்கு மட்டும் அப்படி ஒரு பொச பொசப்பு. அப்படியே ஃபிரிட்ஜில் வைத்த வாழை தண்டு மாதிரி ஒரு ஜில் அம்மா கையிலே இருந்தது.அதுவரை அம்மாவின் ஸ்பரிசம் என்னை அடிக்க மட்டுமேயாக இருந்தமையால் அப்போது அந்த மென்மை புரியவில்லை எனக்கு. ஆனால் "என்னை விட்டு வெகுதூரம் போகிறாயா"என அம்மா மனதில் நினைத்து கொண்டே என்னை ஸ்பரிசித்தது அம்மாவின் மென்மையை உணர வைத்தது. புகைவண்டி நிலையத்தில் அம்மா பேசவேயில்லை. இலவச அறிவுரை ஏதும் சொல்லவில்லை. மெதுவாக கேட்டது, "தம்பி ரொம்ப தூரம் போற .....அப்பாவுக்கு எதுவும்ன்னா ஒடனே வருவியா?"...எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அம்மா அப்படி கேட்ட போது.அப்பா அப்போது ((இப்போதும் தான்) ஒன்றும் சுகவீனமாக இல்லை. நன்றாகவே இருந்தார்கள். நான் கேட்டேன் அம்மாவிடம் "ஏம்மா உனக்கு எதுனா ஆச்சுன்னா வர வேண்டாமா?"


அம்மாவின் பதில் என் மனதை பிழிந்தது. "ப்ச் எங்கடா, நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும் உன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...தவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ" அம்மா பேசியதை நினைத்து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.

என் வெளிநாட்டு வாழ்க்கையில் அந்த முதல் ஒரு வருடத்தில் அம்மா ஏக்கம் எனக்கு நாளுக்கு நாள் அதிகமானது என்றே சொல்ல வேண்டும். முதன் முறை லீவுக்கு வந்த போது விமான நிலையத்தில் அம்மாவை தேடினேன். காரணம் வர சொல்லியிருந்தேன். அப்பா மட்டுமே வந்திருந்தார்கள். அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறப்பட்டது. சென்னையிலிருந்து என் ஊருக்கு 7 மனி நேர பஸ் பயணம். எனக்கு அந்த 7 மணி நேரமும் நரகமாக இருந்தது. என் ஊரை நெருங்க நெருங்க இறங்கி பேருந்தை முந்தி கொண்டு ஓடலாமா என்றிருந்தது.

முடிவாய் வந்து சேர்ந்த போது அம்மா திண்ணையிலேயே படுத்து இருந்தது. என்னை கூப்பிட அப்பா சென்னைக்கு வரும் போதிலிருந்து அம்மா திண்னையிலேயே தான் இருந்திருக்கிறது. எனக்கு முதன் முதலாக அம்மாவை பார்த்து வெட்கம் வந்தது. இது எனக்கு முதல் அனுபவம். ஏன் அப்படி வெட்கம் வந்தது என எனக்கு அப்போது புரியாவிடினும் பின்னர் புரிந்தது. நான் இப்போதும் ஊருக்கு போகும் போதெல்லாம் என் மகள் என்னிடம் வர 1 மணி நேரமாவது ஆகும். நான் கொண்டு செல்லும் அவளுக்கான பொருட்களை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்ற்றெல்லாம் சொல்லி பின்னரே என்னிடம் வருவாள். இதே நிகழ்வுதான் எனக்கு அப்போது நடந்தது. என்ன தான் வயதானாலும் தாய்க்கு மகன் குழந்தை தானே!

அம்மா நான் ஊருக்கு போகும் போது இருந்த மாதிரி இல்லை. மிகவும் வயதான தோற்றத்துடன் எண்ணெய் இல்லா நரை முடியோடும், கடைவாய் பல் விழுந்தும், தோல் சுருங்கியும் இருந்தது.ஒரு வருட இடைவெளி இப்படியா புரட்டி போடும். ராகுகாலம் முடியும் வரை வீட்டின் உள்ளே போகவேண்ண்டாம் திண்ணையிலேயே இருப்போம் என்றது. அதன் குரலும் முன்பு போல இல்லை. படுத்துக்கோ என்றது. தலையை தூக்கி மடியில் வைத்து கொண்டது. தலைமுடி கோதிவிட்டது. எதுனா சாப்பிடுறியா என்றது. அம்மா உடலளவில் மாறி போயிருந்தாலும் அம்மாவின் வாசனை அப்படியே இருந்தது. அதன் சுங்கடி புடவை வழ வழவென இருந்தது. தைல பாட்டில் எடுத்து வந்தியா என கேட்டது. எனக்கு பெண் பார்க்க வேண்டும் என்றது. எனக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தது!!


அதன் பொக்கை வாய் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது!!! அம்மா நீ எப்பவும் அழகும்மா!!! அடிக்கடி சீமாச்சு அண்ணன் சொல்லுவார் "அம்மான்னா அழகுடா"ன்னு அது சரி தான் அம்மா!!!



********************************************************************************************************

இந்த பதிவுக்கும் நான் என் பள்ளியின் மேல் வைத்திருக்கும் அன்புக்கும் ஆறு வித்யாசம் இல்லை ஒரு வித்யாசமும் இல்லை!! அடுத்த அடுத்த பதிவுகளிள் அண்ணன் செய்ய போகும் விஷயங்கள் பற்றி விளக்கமாக சொல்கின்றேன்!!

Monday, August 11, 2008

மாணவனாய்....!

நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே
கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்!


கடந்து வந்த பாதை
பாதையில் பலர் சொன்ன கருத்துக்கள்
புரியாமல் ஏற்றுக்கொண்டவை சில
புரிந்துக்கொண்டதால் ஏற்று கொள்ளாதவை பல
அலட்சியப்படுத்தியதால் அடிபாடுகளில் சிக்கி கொள்ளவைத்தவையும் கூட கொஞ்சம் இருக்கும்!

இப்பொழுதும் கூட நான் பின்னோக்கி பார்க்கும் பார்வையில் என் மனதினை மிகவும் துன்பபடுத்துவது நான் தவறவிட்ட ஆசிரியர்கள் அவர்கள் தந்த பாடங்கள் வாழ்க்கைக்கு மிக தேவையானதாய்....!

மாணவனாய்...
கற்ற விசயங்களே என்னை இத்தனை உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறதென்றால்
நான் தவறவிட்ட விசயங்கள், வகுப்புக்கள் என்னை கட்டாயம் மேலும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்திருக்ககூடும் !

எம்மை பிரம்பால் மிரட்டி,
அன்பால் அதட்டி,
நீங்கள் கற்றுத்தந்தவையே!
இன்று நானும் கூட நம் பள்ளி பற்றி எழுத ஒரு வாய்ப்பினை தந்திருக்கிறது !


நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே
கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்!

ஆம் போகும் பாதை தெளிவாய் இருக்கிறது!
விபத்து ஏற்படாது என்ற நம்பிக்கை
எனக்கு கல்வியால் தான் வந்தது!
நன்றிகளோடு....!

என் பள்ளியுடனான உறவினை தொடர்ந்தபடியே....!