வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Thursday, July 15, 2010

18. இந்த வார குமுதத்தில் எங்கள் பள்ளி மாணவர் சீதாராமன்

லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் தமிழின் புகழ் உலகெங்கும் பறந்து கொண்டிருக்க,தஞ்சாவூரில் பிறந்த ஒரு தமிழரின் புகழ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆர்.சீதாராமன். இன்று இவரது கட்டுப்பாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. கத்தார் நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான தோஹா பேங்க்கின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன்.வங்கித் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்கான உலக விருதை,சென்ற மாதம் பெற்றிருக்கிறார் சீதாராமன்.

பிறந்தது தஞ்சாவூர் அருகே உள்ள தரங்கம்பாடியில்.அப்பாவுக்கு ஆசிரியர் வேலை.சீதாராமனையும் சேர்த்து நான்கு குழந்தைகள்.சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தியிருக்கிறார்கள்.பிறகு வேலை விஷயமாக குடும்பம் மும்பை சென்று விட,சீதாராமனும் அவரது இன்னொரு சகோதரரும் மயிலாடுதுறை இலவச ஹாஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்கள். ‘அங்க தங்கிப் படிச்சா, எங்க ரெண்டு பேரோட செலவு அப்பாவுக்கு குறையுமேனு இங்க தங்கினோம்’ என்கிறார். இன்று லண்டன், பாரீஸ், நியூயார்க் என்று உலகப் பெருநகரங்களுக்குப் பறந்து கொண்டிருக்கும் சீதாராமன். மயிலாடுதுறையில் பள்ளிப் படிப்பு, பிறகு பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.காம் படிப்பு.

“எங்கம்மா எங்ககிட்ட சொன்னதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ‘நல்லா படிங்க, படிப்புதான் வாழ்க்கையை உயர்த்தும், எப்பவும் உங்களைவிட்டுப் போகாது’ இதைத்தான் சொல்வாங்க’’ என்கிறார் சீதாராமன். தாய் சொல்லைத் தட்டாமல் படித்த சீதாராமன் சி.ஏ.படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு கம்பெனியாக பணியாற்றி, வளர்ந்து, உயர்ந்து இன்று அரபு நாடுகளின் மிக முக்கியமான வங்கியான தோஹா வங்கியின் தலைமைப் பொறுப்பு.

சமீபத்தில் தோஹா சென்றிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் சீதாராமனைச்சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.அங்கு நடந்த விழாவில் சீதாராமனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனும் கலந்து கொண்டிருக்கிறார்.

“சீதாராமனை நான் முன்பு பல முறை சந்தித்தும் அவர் சாதனைகளைக் கேள்விப்பட்டு இருந்தாலும் தோஹாவில் அவரைச் சந்தித்து சாதனைகளை நேரில் கண்டபோது வியந்து போனேன். வங்கித் துறையில் அவர் சாதித்த சாதனைகள் பிரமிக்க வைத்தன.அந்நாட்டு அரசாங்க அதிகாரிகளும் பிரமுகர்களும் பாராட்டிய விதமே அதற்கு உரைகல். வெளியே மட்டுமல்ல அவரது இல்லமும் பிரமிக்க வைக்கிறது. அந்த வீட்டைக் காண ஆயிரம் கண் வேண்டும்.அதை ஒரு அருங்காட்சியகமாகவே அலங்கரித்து வைத்திருக்கிறார் அவரது மனைவி. எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள அருங்கலைப் பொருளை தேடிக் கொண்டு வந்து விடுகிறார்.விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு இலக்கணம் சீதாராமன் தம்பதியினர்.வங்கித் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளையும் அவர் பெற்ற விருதுகளையும் பட்டியலிட முடியாது. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளியிலும் சீதாராமனின் பேச்சாற்றல் அழகுமிக்கது’’ என்று சீதாராமனின் நல்ல குணங்களைப் பட்டியலிடுகிறார் நீதியரசர்.

இன்று உலகமெங்கும் சுற்றினாலும் தனது ஆதார வேர்களை மறந்துவிடவில்லை சீதாராமன்.அவருக்கு கல்வி தந்த பள்ளிக்கு நிதியுதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்.கண் பார்வையற்ற நாற்பது மாணவர்களைத் தனது சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.

“பணமில்லாமல், வசதியில்லாமல் ஒரு மாணவனின் எதிர்காலம் தடைப்பட்டுவிடக்கூடாது என்று கருதுகிறேன். அதனால் கல்விக்கு அதிக உதவிகள் செய்கிறேன்’’ என்கிறார் சீதாராமன்.

கல்வி ஒருவரை எந்த அளவு உயர்த்தும் என்பதற்கு இந்த தமிழர் சாட்சி.



நன்றி: குமுதம் வார இதழ்


Sunday, July 11, 2010

17. எங்கள் பள்ளியின் பெருமை மிகு ஆசிரியை செல்வி. ஜெயசீதா

ஆசிரியர் தொழில் ஓரு புனிதமான தொழில். நாம் கடந்த வந்த பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நிச்சயம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஓரு மறக்க முடியாத மற்றோரு ஆசிரியர் ஜெயசீதா கணக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் தன்னலமற்ற ஓரு ஆசிரியர் இவர்.

மயிலாடுதுறையில் உள்ள தி.ப.ர.அர. தேசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்க்கும் ஆசிரியர் இவர். பள்ளி காலங்களில் நான் இவரிடம் நான் படிக்கவில்லை. பள்ளி வாழ்க்கை முடித்து அவஅகல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கும் பொழுது என் நண்பர்கள் சிலர் அந்த ஆசிரியையிடம் மாலை வேளைகளில் சிறப்புப் பாடம் டீயுசன் படிந்தார்கள், பிறகு நானும் சேர்ந்தேன். மிகப் பொறுமையாக, அன்பாக நடந்தும் ஆசிரியை. அதுமட்டும் அல்ல, கோபமே பட மாட்டார்கள்.

இவர்கள் ஏனோ திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. இப்படிபட்ட சில ஜீவன்கள் திருமணம் செய்துக் கொள்ளமால் இருப்பது கூட நம் சமுதாயத்திற்கு நல்லதோ என்று கூட எனக்கு அடிக்கடி தோணும். இவரைப் பற்றி நான் எழுத இரண்டு காரணங்கள் உண்டு. இன்று தற்செயலாக ஓர் புதிய வலைத் தளத்தைப் பார்த்தேன். http://eenippadikal.blogspot.com/ இந்த வலைப் பூவை எழுதி உள்ளர்கள் நான் படித்த அதே பள்ளியில் படித்த மாணவர்கள். அதில் அவர்களை வாழ்த்தி பின்னூட்டம் தரமுடியவில்லை. உடன் நான் படித்த பள்ளி நினைவிற்கு வருகையில் அந்த ஆசிரியரின் நினைவு வந்தது.



எங்கள் பள்ளியின் ஆர்குட் குழுமத்தில் எங்கள் பெருமைமிகு ஆசிரியை ஜெயசீதா அவர்கள் பற்றி அவரிடம் படித்த மாணவமணிகள் பகிர்ந்து கொண்டது

இரண்டாவது ஓர் முக்கிய காரணம், நாங்கள் இளங்கலை கணிதம் படித்தப் பொழுது அவரிடம்ஓர் மூன்று அல்லது நான்கு மாதங்கள் படித்து விட்டு, தேர்வுகளில் நல்ல மதிப் பெண்கள் எடுக்கவில்லை.அதற்கு முழு காரணம் நாங்களே மற்றும் தேர்வும் மிக கடுமையாக இருந்தது. நாங்கள் நல்ல மதிப் பெண் எடுக்காத காரணத்தால் ஜெயசீதா ஆசிரியை எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை.நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்! கணிதம் படித்த ஆண்டு 1988, அன்று ரூபாய் 200 மிகப் பெரியப் பணம், அதுவும்கிட்டதட்ட 5 நபர்களிடம். எவ்வளவுப் பெரிய மனம் வேண்டும் அவர்களுக்கு! சுயநலமில்லா, பொருளின் மீது பற்று இல்லா ஓர் ஜீவன்!

தமிழகம் செல்லும் பொழுது எல்லாம் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும் பொழுது அந்த ஆசிரியை பார்ப்பது வழக்கம், இன்றும் அதே அன்புடன், அதே புன்னகையுடன், சற்று வயதான தோற்றத்துடன் ஜெயசீதா....வாழ்க பல்லாண்டு!

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


நன்றி
மயிலாடுதுறை சிவா...

”கணிதப் பாடத்தில் மோசமாகப் படித்தவர்களுக்கு அவர் ஒ்ரு கடவுளே.. வெறும் 20 சதவிகிதம் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த என்னை 90% கணிதத்த்தில் வாங்க வைத்த பெருமை என் ஆசிரியை ஜெயசீதாவையேச் சேரும்” என்கிறார் சுரேஷ். படித்த பொழுதை விட, தான் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து வேலை செய்யும் பொழுது, ஆசிரியையின் மகத்துவத்தை நினைவு கூர்ந்த சுரேஷ் , மயிலாடுதுறை சிவா, ஆயில்யன், தொல்காப்பியன் போன்ற மாணவர்கள் எங்கள் பள்ளியின் நிலையான சொத்து...




16. நமது பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விவரம்

சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் நமது பள்ளி 96 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 416

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 398

பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் : மணிகண்டன் 486/500

பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் : மணிகண்டன் 481/500

பள்ளியிலிருந்து மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற முயற்சி செய்யப்பட்டது. மாணவர் மணிகண்டனிடம் கேட்ட பொழுது தான் தமிழ்ப் பாடத்தில் மட்டும் சிறிது மதிப்பெண் குறைந்து விட்டதாகச் சொன்னார்.

பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. இராஜேந்திரனிடம் கேட்டபொழுது “மாணவர்கள் மொழிப் பாடத்தில் அதிக அளவு கவனம் செலுத்துவதில்லை, மற்றும் பெற்றோரும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதுமானது என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் விதைப்பதினால் மாணவர்களும் அந்தப் பாடங்களில் அதிக அக்கறை செலுத்துவதில்லை“ என்று கூறினார்.

இந்த வருடம் பள்ளி்யின் தமிழ் விடைத்தாள்கள் பாளையங்கோட்டை தமிழாசிரியர்களிடம் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழாசிரியர்கள் சிறுசிறு சந்திப்பிழைகளுக்கெல்லாம் மதிப்பெண் குறைத்து விடுவார்கள் மாணவர்கள் எழுதும் போது மிகமிக கவனமாக எழுதவேண்டும் என்று கூறினார்.

இந்த வருடம் மாநில அளவிலான முதல் மதிப்பெண் 591/600 என்றும் நமது பள்ளி மாணவர் மணிகண்டன் 5 மதிப்பெண்களில் முதலாமிடத்தைத் தவறவிட்டது மிக வருந்தத்தக்கதெனவும், அடுத்த (நடப்பு) கல்வியாண்டில், முதல் மதிப்பெண் பெறக்கூடிய அளவிலான மாணவர்கள் இருக்கிறார்களெனவும் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்திலிருந்து - சீமாச்சு...

15. பள்ளியில் சமீபத்திய புகைப்படங்கள்




சமீபத்திய CEO (Chief Education Office) & DEO (District Education Officer) ஆய்வுக்கு வந்த பொழுது பள்ளி மாணவி புதிய Audio Visual உபகரணங்களின் உதவியுடன் மனிதனின் இதய இயங்குவதை விளக்குகிறார்.

புகைப்படத்தில் பள்ளித் தலைமையாசிரியர் திரு கே. இராஜேந்திரன், உதவித் தலைமையாசிரியர் திரு கே. பத்மனாபன் மற்றும் ஆய்வாளர்கள்.