வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Wednesday, October 14, 2009

வெளிநாட்டு வாழ் தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு!!!

மயிலடுதுறை, தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளியில் ( நம் பள்ளியில்) சுமார் இருபது லெட்ச ரூபாய் செலவில் அதி நவீனமாய் புதிதாய் கட்டப்பட்ட கணினி துறை அரங்கத்தை இன்று பார்வையிட்ட நம் பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் நமது அண்ணன் சீமாச்சு அவர்கள் (S.S. வாசன் U.S.A) அந்த கணினி அரங்கத்தினால் கவரப்பட்டு பரிட்சாத்த முறையில் இரு (பெரிய்) வகுப்பறைகளுக்கு டைல்ஸ் தளம் அமைக்கவும், சுவற்றில் எமல்ஷன் வண்ணம் பூசவும், சில கழிவறைகளை மேல்வசதி செய்யவும் முடிவெடுத்து அதற்கான வேலை நாளையே தொடங்க இருக்கின்றது.

நம் பள்ளியில் படித்த வெளிநாட்டு வாழ் முன்னாள் மாணவர்கள் உடன் சீமாச்சு அண்ணா அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக விபரங்கள் இன்று மதியம் 1 மணிக்கு நம் பள்ளி தாளாளர் டாக்டர். வெங்கட்ரமணன் அவர்களின் தலைமையில் நடைபெறும் கலந்தாய்வுக்கு பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும்.

புதிய கணினி அரங்க புகைப்படங்கள் நாளை அந்த விபரங்களுடன் வெளியிடப்படும். அண்ணன் அவர்கள் இந்த முறை இன்னும் 9 நாட்கள் மட்டுமே மயிலாடுதுறையில் இருக்க முடியும் என்பதால் உடன் தொடர்பு கொள்ளவும்.

தவிர நம் ஊர் நண்பர்கள் யார் யார் தீபாவளி விடுமுறைக்கு நம் ஊர் வருகின்றனர் என்பதையும் தெரிவித்தால் "Young India Association" மற்றும் தி.ப. தி. அர. தேசிய மேல்நிலைப்பள்ளி சேவை மையம் பற்றியும் விரிவாக ஆலோசிக்க ஏதுவாக இருக்கும்.

என்றும் தங்கள் அன்பு

அபிஅப்பா

Saturday, September 5, 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!

இந்த கோழி இருக்கே கோழி அது மண்ணுல கொத்தி கொத்தி எதுனா சாப்டுகிட்டே இருக்கும். ஒரு சிமெண்ட் தரையா பாத்துச்சுன்னா சர் புர்ன்னு மூக்கை(அலகை) தேய்ச்சு கூர்மையா ஆக்கிகிட்டு திரும்பவும் மண்ணுக்கு போய் கொத்தி கொத்தி திங்க ஆரம்பிச்சுடும்!அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை.

நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.

* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி

* 2 வது B - காமாட்சி டீச்சர் - "

* 3 வது C - குண்டு சார் - "

* 4 வது C - தியாகராஜன் சார் - "

* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "

* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி

* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி

* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "

* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "

* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "

* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "

* 12 வது A - K. பத்மநாதன் சார் -

"அப்பாடா!
உங்களுக்கு ஞாபகம் இருந்தா சொல்லுங்க atleast section மட்டுமாவது!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!!!!!!

(இது ஒரு மீள் பதிவு)

ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன்....

ஜே.ஆர்.ராமமூர்த்தி சார் (தலைமை ஆசிரியர் - ஓய்வு)
ராமபத்ரன் சார் (தமிழாசிரியர்)
NV-1 சார்
NV-2 சார்
புஷ்பவல்லி மேடம் (தலைமை ஆசிரியர் - ஓய்வு)
கே.ராஜேந்திரன் சார் (தலைமை ஆசிரியர்)
கே.பத்மநாபன் சார் (வேதியியல்)
ராமனாதன் சார் (தமிழ்)
கே.விஸ்வநாதன் (KV)சார்
BMS சார் (கணக்கு)
அரங்கராஜன் சார் (தமிழ்)
ராமமூர்த்தி சார்
முத்துகுமரசுவாமி சார் (வணிகவியல்)
சந்தானகோபாலன் சார் (NCC)
சரோஜா மேடம்
லெட்சுமி மேடம் (ஆங்கிலம்)
சேஷாத்ரி சார் (வரலாறு)
விஜயரெங்கன் சார்
ஜெயசீதா மேடம் (கணிதம்)
காஞ்சிநாதன் சார் (இயற்பியல்)
விஜயலட்சுமி மேடம்
ராமநாதன் சார் (வரலாறு)
அபிதாகுஜாம்பாள் மேடம்
வெங்கட்ராமன் சார் (ஓவிய ஆசிரியர்)
சண்முகம் சார் (தமிழாசிரியர்)
மதியழகன் சார்
கலியமூர்த்தி சார்
ரவிக்குமார் சார் (விளையாட்டு)
ரவிச்சந்திரன் சார் (விளையாட்டு)
கிராப்ட் சார்

இன்னும் பலர் நினைவுகளினூடாய், முகம் அறிந்து, பெயர் மறந்து போன டிபிடிஆர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,

மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்பானதொரு கல்வி கற்று,பல்வேறு நாடுகளிலும்,பல நிலைகளிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மாணவர்கள் சார்பாக ஆசிரியதின வாழ்த்துக்களினை தெரிவித்து வணங்கி மகிழ்கின்றோம்!Saturday, August 29, 2009

எங்கள் பள்ளியின் இரண்டு ஹீரோக்கள்!!!!!அது 1979 ஜூன் 27ம் தேதி. ஒன்பதாம் வகுப்பு பள்ளி திறந்து 20 நாள் ஆகி இருந்தது. வழக்கம் போல நானும் ராதாவும் போய் தான் மாடியில் இருக்கும் தலைமை ஆசிரியர் அறைக்கு பக்கத்தில் இருக்கும் ஆபீஸ்ல இருந்து அட்டண்டன்ஸ் நோட்டை பத்திரமாக எடுத்து வருவோம் எங்க வகுப்புக்கு. அப்போ தான் நாங்க அந்த இரண்டு ஹீரோக்களையும் பார்த்தோம். இருபத்தி ஆறு இன்ச் பெல்பாட்டம், பூ போட்ட சட்டையை இன்சர்ட் செய்து பட்டையான பெல்ட், முக்கியமா காலில் ஷூ ஹிப்பி தலை இப்படி அந்த இரண்டு ஹீரோக்கலும் தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே உட்காந்து இருந்தாங்க.
ராதா கேட்டான் "யாருடா இவங்க இரண்டு பேரும் நம்ம ராஜா அண்ணன் மாதிரி இருக்காங்க, அவரு படத்து கதாநாயகர் மாதிரி இருக்காங்க'ன்னு கேட்டான். ராஜா அண்ணன் என்பது டி.ராஜேந்தர், அவரு அப்படிதான் டிரஸ் செஞ்சிருபார். (எங்க ஊரிலே டூ வீலர் மோட்டார் சைக்கிள் ஸ்வேகா வண்டி வச்சிருந்த முதல் ஸ்டூடண்ட் அவருதான்) ஒரு குழப்பத்தோட வகுப்புக்கு வந்துவிட்டோம்.முதல் பீரியட் அறிவியல். ஆச்சர்யம் நாங்க பார்த்த அந்த ஹீரோவில் ஒருவர் வந்து உள்ளே நுழைகிறார். எல்லோரும் எழுந்து நின்றோம்."அனைவருக்கும் வணக்கம். என் பெயர் K. ராஜேந்திரன், இன்று முதல் நான் தான் உங்களுக்கு அறிவியல் எடுக்க போகிறேன். (அப்போது தான் S.S.L.C முடிந்து +2 சிஸ்டம் ஆரம்பித்தது. அதனால் அரசாங்க உத்தரவுப்படி பி.ஜி முடித்தவர்கள் தான் +1, +2 வுக்கு பாடம் எடுக்க வேண்டும். அதனால் சூவாலஜி பாடம் எடுக்க இவரை சேர்த்திருக்காங்க பள்ளி மேனேஜ்மெண்ட்)
பின்பு அவர் பேசியது " என்னை உங்க ஆசிரியர் மாதிரி பார்க்க வேண்டாம். ஒரு நண்பனாக பாருங்க, எதுவா இருந்தாலும் என் கிட்ட தைரியமா பேசலாம். இதோ என் கையில் 4 சாக்லெட் வச்சிருக்கேன். இன்றைக்கு யாருக்கு பர்த்டேயோ அவங்க எழுந்து நில்லுங்க. அவங்களுக்கு சாக்லெட் தருவேன்" அப்படின்னு சொன்னதும் நாங்க கிட்ட தட்ட 25 பேர் எழுந்து நின்றோம். என்ன காரணம்னா எங்க வால் தனம் தாங்காமல் எங்களை தூக்கி வந்து 1ம் வகுப்புலே சேர்க்கும் போது துண்டுமுறுக்கி சார் வரிசையா "எல்லாரும் காதை சுத்தி மூக்கை தொடுங்க"ன்னு சொல்லி எல்லாருக்குமே அவர் 27.06.1966 என பிறந்த நாளா எழுதி விட்டார். (என்னை அப்போது சேர்க்க வந்த என் பாட்டியும் காதை சுத்தி மூக்கை தொட வாத்தியார் "அம்மா நீங்க தொட தேவை இல்லை"ன்னு சொன்னது நியாபகம் வருது. பாட்டி ஒரு தீர்க்கதரிசி போல இருக்கு. பிற்காலத்தில் குழந்தைகளை சேர்க்கும் போது பெற்றோர்க்கும் தேர்வு வரும் எனபதை உணர்த்துவதாக உணர்கிறேன்)விஷயத்துக்கு வருவோம். அப்படியாக நாங்க 25 பேர் எழுந்து நின்றோம். பின்னே அவர் "சரி என்னை பற்றி நானே சொலி கொள்வதை விட நீங்களே கேள்வி கேட்கலாம்" என சொன்ன போது ராதா தான் முதல் கேள்வி " சார் நீங்க +2 சார் தானே பின்ன ஏன் 9ம் வகுப்புக்கு எல்லாம் எடுக்குறீங்க" அதுக்கு அவர் சொன்னார் "நான் படித்து முடித்தவுடம் நான் யு.ஜி முடித்த அதே ஏ.வி.சி. கல்லூரியில் 6 மாதம் தற்காலிகமாக பணியாற்றினேன். நான் புதுசு தானே இந்த ஆசிரிய பணிக்கு. அதனால் எடுத்த உடன் +1 எடுக்க வேண்டாம் முதலில் சின்ன வகுப்புகளுக்கு எடுத்து பழகட்டும் என மேனேஜ்மெண்ட் நினைத்திருக்கலாம். அவர்கள் நம்பிக்கையை பெறுவேன். மிக நன்றாக பணியாற்றி பிற்காலத்தில் மேனேஜ்மெண்ட் என்னை அழைத்து தலைமையாசிரியர் பதவி கொடுக்கும் படியாக நம்பிக்கையுடன் பணியாற்றுவேன். ( அவர் தான் இப்போது தலைமை ஆசிரியர் - என்னே ஒரு நம்பிக்கை பாருங்க) அப்படியே அவர் மாணவர்களோடு நண்பர் மாதிரி நடந்து கொண்டார்.முதல் வகுப்பாக இருப்பதால் பாடம் வேண்டாம். ஆனா சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துப்போம் என சொல்லி டினோசர் படம் வரைந்தார் போர்டில். (மிக அழகாக இருக்கும் அவர் கையெழுத்தும், படம் வரையும் திறமை)அவர் அதன் சைஸ் பத்தி எல்லாம் சொன்ன போது ஒருத்தன் கேட்டான்" சார் 3 தென்ன மரம் உயரம் இருக்குமா?"" அதுக்கு அவர் அதுக்கு மேலயும் இருக்கும். என சொல்லிய போது சார் கதை விடுறார் என நினைத்து கொண்டோம். அதற்கு முன்னால் அவர் ஏ.வி.சி கல்லூரியில் வேலை பார்த்த போது அதன் வெள்ளி விழா வந்தது. அப்போது அங்கே 40 அடி உயரத்தில் பிலாஸ்டர் ஆஃப் பாரீசினால் டினோசர் சிலை செய்து அங்கே இருக்கும் பிருந்தாவன் தோட்டத்தில் வைத்தார். அதன் பிறகு ஏ வி சி நிர்வாகம் அதன் மேலேயே ஸ்டீல் பொருத்தி அதை எலும்பு கூடாக ஆக்கி அதன் உள்ளே ஒரு வகையான புல் வளர்த்து இப்போது பார்த்தால் பிரம்மாண்ட பச்சை டினோசர் மாதிரி இப்பவும் கம்பீரமாக நிற்கின்றது.அடுத்து வகுப்பு வந்தது. அடுத்த ஹீரோ வந்தார். இரண்டு பேருமே இளமை ஊஞ்சலாடுகிறது கமல் மாதிரி இருப்பாங்க. எங்கள் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா? வீட்டில் 8 கஜ புடவை கட்டின பாட்டி, அம்மா, 8 முழ வேஷ்டி கட்டின அப்பா எல்லோரையுமே பார்த்து பழகின நம் கண்களுக்கு எப்பவாது விருந்தாளியா டெல்லி, மும்பாய்ல இருந்து சுடிதார், ஹை ஹீல்ஸ், திருத்திய புருவத்தோடு வரும் சித்தியை, ஜீன்ஸ், டிஷர்ட், ஷூ, கூலிங் கிளாஸ் சகிதமாவரும் சித்தப்பாவோ, மாமாவையோ பார்த்தால் ஒரு சந்தோஷம் வருமே (எங்களுக்கு அப்ப வந்தது. இப்போது மாதிரி சுடிதார் கலாசாரம் அப்ப கிடையாது) அது போல எங்களுக்க்கு இந்த இரண்டு நாயகர்களையும் பிடித்து விட்டது.உள்ளே வந்தார் "என் பெயர் K. பத்மனாதன், (K.P) நான் படிச்சது கெமிஸ்ட்ரி. ஆனா உங்களுக்கு ஆங்கிலம் எடுக்க போகிறேன். என சொல்லி விட்டு நேரிடையாக பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். KR சார் ஒரு டைப்புன்னா, இவர் வேறு மாதிரியான டைப். பாடத்தை மண்டையில் ஏற்றாமல் விட மாட்டார். ஜாலியாகவும் இருப்பார். அதே சமயம் கண்டிப்பாகவும் இருப்பார். அந்த கால கட்டத்தில் எங்க பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் சினிமா தியேட்டர்களுக்கு போக மாட்டாங்க. ஏன்னா ஏதாவது ஒரு மாணவன் தன்னை அங்கே பார்த்து விட்டால் மானமே போவதாக உணர்வார்கள். அதை உடைத்து எறிந்தவர் K.P சார் எல்லா படமும் பார்த்துவிட்டு அடுத்த நாள் நல்ல படமா இருந்தா வகுப்பிலேயே சொல்லுவார்.
கெமிஸ்ட்ரி ஈக்குவேஷன் எழுதும் போது இடமிருந்து வலமாக எழுதுவார், அடுத்த ஸ்டெப்பை அப்படியே வலமிருந்து இடமாக வருவார். பீரியாடிக் டேபிள் அவர் மனதில் அப்படியே பசை போட்டு ஒட்டியிருக்கும். லேப்பில் அவர் ஆக்டிவிட்டீஸ் அருமையா இருக்கும். எந்த கலவை சால்ட்டாக இருந்தாலும் பார்த்த உடனே சொல்லி விடுவார்.

இவர்களின் சுறு சுறுப்பை பார்த்து நிர்வாகம் KR சாருக்கு Interact Club- Incharge, பொறுப்பும் KP சாருக்கு N.S.S In Charge பொறுப்பும் தந்தார்கள். அங்கே தான் பல மாணவர்கள் பட்டை தீட்ட பட்டாங்க. 12 வது படிக்கும் போது 1 மாதம் KR சார் வீட்டில் தான் இரவு முழுக்க தங்கி படித்தோம். காலை 4 மணிக்கு எழுப்பி விடுவார். காபி கிடைக்கும். அவங்க அம்மா எங்களை அவங்க பிள்ளை மாதிரி தான் நடத்துவான்க. அது போல இரவு 12 மணிக்கு மேல் படிக்க விட மாட்டார். வந்து லைட் ஆஃப் செய்து விடுவார்.ஆயிற்று. எல்லோரும் கல்லூரி வந்தாச்சு. நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கும் போது இருவருக்கும் கல்யாணம். ஓடி ஓடி வேலை செய்தோம். (கவனிக்க அப்போ நாங்க கல்லூரிக்கு வந்தாச்சு) வந்த இரண்டு அண்ணிகளும் சொக்க தங்கம். எங்கள் மீது அப்படி ஒரு அன்பாக இருப்பாங்க. இப்போ வரையிலும் நான் ஊருக்கு போனா முதல்ல அங்க தான் போவோம்.

1984ம் வருடம். எம்.ஜி.ஆர் ஆட்சி. அப்போது மிக பெரிய ஆசிரியர் போராட்டம். பல்லாயிரகணக்கான ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு பள்ளி கூடத்துக்கு குறந்தது 40 ஆசிரியர்கள் சிறைக்கு போக சங்கம் முடிவெடுத்தது. தமிழநாடு முழுக்க இருந்தும் 30000 ஆசிரியர்கள். எங்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகள் வேண்டாம் என சொல்லி விட்டு மீதி அனைத்து ஆண் ஆசிரியர்களும் சிறைக்கு. நம்ம இந்த பதிவின் நாயகர்கள் புது மாப்பிள்ளைகள். ஓரிரு நாட்களில் விட்டு விடுவாகள் என நினைத்தோம். ஆச்சு 50 நாட்களுக்கு மேலே. திருச்சி சிறைவாசம்.
இந்த நிலையில் KR சார் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அண்ணி சாரை பார்க்க வேண்டும் என அழுகை. திருச்சியில் போய் மனு போட்டு பார்க்கலாம் என்றால் அந்த பச்ச குழந்தையை தூக்கி போக முடியுமா. பின்பு ஒரு நாள் எல்லா ஆசிரியரும் தஞ்சை நீதிமன்றத்துக்கு வருகிறார்கள் என கேள்வி பட்டு நான் அண்ணியை ரயிலில் மெதுவாக அழைத்து சென்றேன் குழந்தையோடு. தஞ்சை ஸ்டேஷனில் இருந்து ஒரு குதிரை வண்டி பிடித்து கோர்ட்க்கு போனேன். அன்றைக்கு 300 ஆசிரியர்களிக்கு அழைப்பு கோர்ட்டில் இருந்து. அந்த கோர்ட் வளாகமே 300 ஆசிரியர் குடும்பத்தினரால் நிரம்பி வழிந்தது. நாங்க காலை 9 மணிக்கு அங்கே இருந்தோம். ஆனா எங்கள் பள்ளியின் பஸ் திருச்சியில் இருந்து மதியம் 2 மணிக்கு தான் வந்தது. பாவம் அந்த பச்சை குழந்தையை வைத்து கொண்டு அந்த வெயிலில் படாத பாடு பட்டாங்க.


அப்ப தான் சார் பார்க்கிறார் குழந்தையை. எல்லா ஆசிரியரும் தாடி. அய்யோ கொடுமையாக இருந்தது. ஆனால் கம்பீர்மாக இருந்தனர். இப்போது சீமாச்சு அண்ணன் மாதிரி மேனேஜ்மெண்ட் குழுவில் இருபவரும், முன்னாள் தலைமை ஆசிரியருமான J.R. ராமமூர்த்தி சார் தான் கொஞ்சம் சோர்வா இருந்தார். ஒரு 15 நிமிடம் தான் பேச முடிந்தது. திரும்பவும் சிறை க்கு போயிட்டாங்க. இந்த நிகழ்ச்சி யை சொல்வதன் காரணம் நான் மட்டும் அல்ல அவர்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் ஆயிரகணக்கானோர் ஆசிரியர் மாணவர்கள் போல கிடையாது. குடும்ப அங்கத்தினர் மாதிரி தான். இது எங்க பள்ளியின் சிறப்பு.


பிறகு என் திருமணத்தின் போது KR சார் அப்பாவிடம் "எனக்கு கலயாண வேலையிலே முக்கியமான ஒரு வேலை தாங்க நான் தான் செய்வேன் " என சொல்ல (நான் கல்யாணத்துகு முதல் நாள் தான் போனேன்) அப்பா பிடிவாதமாக "நீங்க வந்தா போதும் சார்" என சொல்ல இவர் ரொம்ப பிடிவாதமாக இருக்க பின்னே சார் தான் சிதம்பரம் போய் தேங்காய் பையில் போட்டு கொடுக்க அபிராமி அந்தாதி புத்தகம் 600 அழகான ஆப்செட் அட்டையோட பிரிண்ட் செய்து அவரே எடுத்து வந்தார். நான் போய் மிகவும் கடிந்து கொண்டேன்.


வேலையில் சேர்ந்த அன்று சார் சொன்ன மாதிரியே கடந்த 4 வருடங்களாக KR சார் தலைமை ஆசிரியர், (நல்லாசிரியர் விருதும் வாங்கி விட்டார்), KP சார் உதவி தலைமை ஆசிரியர். நம்பு உன்னால் முடியும் என அடிக்கடி சொல்வார்கள் இருவரும். சாதித்து விட்டனர்.
நான் சொல்ல வந்ததில் 10 சதம் மட்டுமே சொல்லியிருக்கேன். ஏன்னா இப்பவே பதிவு பெரியதாக ஆகிவிட்டது.


எனக்கு 1 வருஷ சீனியர் சீமாச்சு அண்ணா அடுத்து இராமபத்திரன் சாரை பத்தி சொல்லுவார்.
அடுத்து எனக்கு 1 வருஷம் ஜூனியர் மயிலாடுதுறை சிவா (ஏற்கனவே NV சார் பத்தி எழுதிவிட்டார்) அதனால வேற ஹீரோ பத்தி எழுதனும்.
ராம்கி எழுதனும், ஆயில்யன், மூக்கு சுந்தர் , எல்லே ராம் சார் எல்லாரும் எழுதனும் நம்ம ஏணிப்படிகள் பற்றி என்பது என் சின்ன வேண்டுகோள்!!

Tuesday, June 30, 2009

எம்.பி.பி.எஸ் கட்-ஆப் ரேங்க் - எங்க ஊரு பொண்ணு ஃபர்ஸ்ட்டேய்ய்ய்ய்!"செவ்வா புள்ளயார்!!!" - உரையாடல் சிறுகதை போட்டிக்காக!

"பாய் எனக்கு காப்படி பச்சரிசி, 4 வர மொளகா, 15 காசுக்கு கடுவு, 5 காசுக்கு உப்பு, இந்தா தொன்னையிலே கொஞ்சம் கல்லெண்ணய் , 3 காஞ்ச வெறகு கொடு, உருண்டை வெரகு வேண்டாம் அத்தாச்சி திட்டும், ஒடச்ச வெரகு கொடு"

"அட ஒப்பம்மொவளே செவ்வாபுள்ளயாருக்கு அத்தாச்சி உப்பு கூடவா வாங்கியார சொன்னுச்சு? அடி கழுத உப்புல்லாம் கெடயாது . இந்தா இதை எடுத்து கிட்டு போ 3 ரூவா பத்து காசு ஆச்சு. கொடுத்துட்டு போ"

செவந்தி அதை எடுத்து கிட்டு அத்தாச்சி வீட்டுக்கு போகும் போதே தான் கலந்துக்க போகும் முதல் செவ்வாபுள்ளயாரை பத்தி கனவு கண்டு கிட்டே போனா! நேற்று செவந்தி, புவனா, மஞ்சுளா எல்லோரிடமும் செவ்வா புள்ளயாரை பத்தி பேசிகிட்டது நியாபகம் வந்தது செவந்திக்கு.

"டீ பொம்பள மட்டும் தான் அங்க உண்டு. எல்லாரும் துணிய அவுத்து போட்டு புள்ளயாரை கும்மிடனும். அப்ப தான் நம்ம வீட்டு ஆம்புளைங்க எல்லாம் நல்லா இருப்பாங்க"

" கருமம் .கருமம். இல்லடீ மக்குட்டு தான் அவ சொல்லறது போல இல்ல"

" அய்யோ நான் போன ஆடி மாசம் வசந்தா மாமி வீட்டுல நடந்துச்சே அப்ப அங்குனி ஆத்தா அழைச்சுட்டு போச்சு. டிரஸ் எல்லாம் உண்டு. அய்யோ அய்யோ . ஆனா அந்த கொழுக்கட்டை எல்லான் டிசன் டிசனா இருக்கும் உரல் உளக்கை மாதிரி . அம்மி குழவி மாதிரி, புள்ளயார் மாதிரி, தேங்கா போட்டிருக்கும் ஆனா உப்பு இருக்காது அத்தன ஒரு ருசி. ஆனா இருடீ நாம பொம்பள கூட மாத்திரம் கூடத்தான் இதல்லாம் பேசிக்கனும். ஆம்பள கூட பேசினா ரத்த போக்கு அதிகமா ஆவும்"

"ரத்த போக்குன்னா"

"அய்யோடி இது பேக்கு இதுக்கு எல்லாம் எல்லாம் என்னா தெரியும்?!, வா வா அத்தாச்சி எல்லாம் சொல்லும்"

நினைவில் இருந்து மீண்ட செவ்வந்தி க்கு ஆசை ஆசையா இருந்துச்சு. தான் முதலில் கலந்துக்க போகும் செவ்வா புள்ளயார் பத்தி.

செவ்வாய் இரவு வசந்தா மாமி வீடு களை கட்டுச்சு. வசந்தா மாமியின் புருஷன் சுந்தரத்து கிட்ட அத்தாச்சி திங்கள் கிழமையே அடுத்த நாள் அவரு வீட்டிலே நடக்க போகும் செவ்வா புள்ளையாருக்கு பர்மிஷன் எல்லாம் வாங்கிடுச்சு. "அண்ணே உங்க வீடு தானே கொஞ்சம் பெரிசா இருக்கு நாங்க இங்க கும்பிட்டா உங்க வீடே செழிக்கும் அண்ணே, நீங்க ராத்திரி எதுனே புது படம் வந்திருக்காமே "மூன்று முடிச்சி"ன்னு அதுல ஒரு கொட மொளா மூக்கு பொண்ணு அழகா இருக்காம் போயிட்டு வாங்க அண்ணே"

சுந்தரம் ரயில்வேயில் வேலை. இரண்டாம் ஷிப்ட் முடிஞ்சு செவ்வாய் ராத்திரி ஒன்பது மணிக்கு வரும் போதே வாசலில் அத்தாச்சி நின்று கொண்டு "அண்ணே உள்ள கிட்ட தட்ட ஆரம்பிக்க போவுதுண்ணே. இப்படி திண்ணையிலே குந்துங்க. இருங்க வசந்தாவை இட்லி எடுத்துட்டு வர சொல்றேன்" என்று மடக்க "அத்தாச்சி அப்படியே என் கைலியயும் எடுத்துட்டு வர சொல்லுங்க" என்று சொன்னார்.

பின்னே அத்தாச்சியே உள்ளே போய் இட்லியும் கைலியும் எடுத்து வர திண்ணை மேலே ஏறி கைலியை மாத்திகிட்டு திண்ணையிலேயே சாப்பிட உட்கார்ந்தார்.


"அத்தாட்சி! முத்துராமன் , சிவகுமார் எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சே! இந்த பய கட்சி காமாச்சின்னு அலையறானே ஒரு புத்தி சொல்ல கூடாதா"இட்லி சாப்பிட்டு கிட்டே தன் தம்பிய பத்தி கேட்டார் அத்தாச்சிகிட்டே.

"அண்ணே அவனுக்கு என்ன ராசா உன் அக்கா மக தான் இருக்காளே ராசாத்தியாட்டாம் "

"என்னவோ போ அத்தாச்சி"

"சரி போ, உங்க தம்பி உங்களுக்கு. ஜமுக்காளமும் தலவாணியும் சின்ன தம்பி கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன். அது கொண்டு போய் பிரசவ ஆஸ்பத்திரி வராண்டாவிலே போட்டுடும். வேப்பங்காத்து நல்லா வரும்"

"சரி நான் ரெண்டாமாட்டம் பார்த்துட்டு அங்க வந்து படுத்துகுறேன். வருஷத்துக்கு எட்டு நாள் அங்க தான படுக்கை"

"அது என்ன கணக்கு எட்டு நாளு"

"அதான் ஆடி மாசம் நாலு செவ்வா கெழமை தைமாசம் நாலு செவ்வா நீங்க அடிக்கிற கூத்துல நான் வேப்பங்காத்து தான வாங்க வேண்டி கெடக்கு"

"எல்லாம் குடும்பத்து ஆம்பளைங்க நல்லா இருக்கதான அண்ணே"

"சரி அத்தாச்சி நான் வரேன் நான் பெத்த கொடுக்கு எங்க/"

"அதல்லாம் சின்ன தம்பி கூட்டிட்டு போயிடுச்சு நீங்க போங்களேன் சீக்கிரமா"

அத்தாச்சி சுந்தரம் சைக்கிளை எடுத்ததும் வீட்டுக்குள்ளே போய் "என்னங்கடி மச மசன்னு நிக்குறீங்க. வசந்தா நீ அந்த உரல்ல ஊறுன பச்சரிசிய போட்டு இடிக்க வேண்டியது தான. இது எவடீ நாலு வெறவு ஈர வெறவா அனுப்பினது, ஒரு சீசா மண்ணென்னெய் இதுக்கே ஆவும் போல இருக்கே, இங்கபாரு காஞ்ச சேப்பு மொளாக்கி பதிலா எவலோ பச்ச மொளா அனுப்புனவ, ஆகா எவளோ ரேசன் அரிசி அனுப்பியிருக்காளே..." இப்படியாக 10 வீட்டில் இருந்து வந்த சாமான்களை பார்த்து ஒரே அலப்பரை.

"அத்தாச்சி எனக்கு நாளக்கி தீட்டு வர நாளு. இடுப்பு கடுக்குது. காலை வர தாங்கனுமேன்னு நானே காசு முடிஞ்சு போட்டு வச்சிட்டு வேலை பாத்துகிட்டு இருக்கேன். அரிசி இடிக்க மங்களாவ வர சொல்லியிருக்கேன்"

"உக்கூம் அவ எங்க வர போறா, குடிகார காசிநாதன சமாளிச்சு அவ வரங்காட்டியும் தைமாச செவ்வா புள்ளையாரு வந்துடுவாரு"

"அத்தாச்சி வந்துட்டன் அத்தாச்சி" இது மங்களா.

"வாடி மங்களா ஏன் உன் மூஞ்சி இருக்கு மங்கலா"

"அட போங்க அத்தாச்சி. கழுத்து புருசன் குடிக்க காசு கேக்குறான். வயித்து புருசன் படிக்க காசு கேக்குறான். நா ஒம்போது வீட்டுல பத்து பாத்திரம் தேச்சு பதினோரு மணிக்கு வூடு வந்து சேர்ந்து ஓடா ஒழச்சு நாயா தேயுறேன். குடிக்க காசு குடுத்துட்டு போய் பிரசவ ஆஸ்பத்திரி வராண்டாவுல படுய்யான்னு சொல்லிட்டு ஓடியாறேன்"

"ஏண்டி இத்தன வியாக்யானம் பேசுன நேரத்துல அரைப்படி இடிச்சிருக்க்கலாம்டி. சரி இடி"

"தள்ளு அத்தாச்சி. யத்தாச்சி யாத்தாச்சி"

"என்னடி இழுவையா இழுக்குற"

"மாமா காலைல கொழுக்கட்டை எடுத்துட்டு வாடின்னு சொல்லுது அத்தாச்சி"

"அடப்பவி மொவளே ஆம்பள அதை பார்த்தாலே பாவம். தின்னா ரத்த வாந்தி எடுத்து செத்துடுவாங்களேடி"

"போய் தொலையட்டும் நான் நிம்மதியாவது இருப்பேன்"

"போடீ போக்கத்தவளே"

மள மளன்னு செவ்வா புள்ளயார் வேலை ஆரம்பிச்சுது.


இங்க பிரசவ ஆஸ்பத்திரியிலே.....

ஜமுக்காளம் தலையனை எடுத்துகிட்டு சுத்தரத்தின் மகனை கூட்டிகிட்டு போன சுத்தரத்தின் தம்பி "எலேய் தம்பி இந்த ஜமுக்காளம் தலவாணிய விரிச்சுகிட்டு படு. உன் பிரண்டு கிருஷ்ணன் மொவன், பத்தரு மொவன் எல்லாம் இப்ப வந்துவாங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். அப்பா சினிமா வுட்டு வந்து நான் எங்கன்னு கேட்டா இத்தன நேரம் சித்தப்பா இங்க தான் பக்கத்துல படுத்து இருந்துச்சு. இப்பதான் வயித்தவலிக்குதுன்னு ராஜன் தோட்டம் பக்கம் போச்சுப்பான்னு சொல்லு. இந்தா கார்ரூவா வச்சிக்க" என்று சொல்லிவிட்டு அழகப்பா கொட்டாயிலே நான்கு கில்லாடி பார்க்க போயிட்டாரு.

சொன்ன மாதிரியே பிரகாஸ், லோகு பத்தர் மொவன் சம்மந்தம் எல்லாம் வர அங்க செவ்வா புள்ளயார்ல என்னா நடக்குதுன்னு ஒரே பட்டி மன்றம் ஓடுச்சு.

பக்கத்து ஒட்டன் காலனியிலே மூச்சு முட்ட சாராயம் குடிச்சுட்டு மங்களா புருசன் காசிநாதன் கூட வந்தாச்சு.

"எலேய் மாப்ளங்களா, அந்த கொழுக்கட்டை எவனெவனுக்கு வேணும் கை தூக்குங்க"

படுத்துகிட்டு இருந்த பசங்க கை கால் எல்லாத்தையும் தூக்க "அப்படின்னா எவனெவன் கிட்ட எத்தனை காசு இருக்கோ குடுங்க விடிகாலை 4 மணிக்கு போய் நைசா தள்ளிகிட்டு வர்ரேன். மங்களா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிட்டன்ல மாமா. இந்த மாமனுக்காக எத வேணா செய்வா என் தர்மபத்தினி"

மாமாவின் பேச்சில் ஒரு நம்பிக்கை ஏற்பட முதலி சுந்தரம் ம்கன் கால்ரூவா கொடுக்க மத்தவனும் 10 காசு 20 காசுன்னு கொடுக்க அது சேர்ந்துச்சு தொன்னூத்து அஞ்சுகாசு. காசிநாதன் வாங்கி கைலில சுத்திகிட்டு தூங்கி போயிட்டாரு.

மூன்று முடிச்சு முடிஞ்சு சுந்தரம் வந்து படுத்தாச்சு.

"எலேய் எங்கடா சித்தப்பா?"

"இங்க தான் படுத்து இருந்துச்சு. வெளிக்கி வருதுன்னு இப்பதான் ராஜன் தோட்டத்துக்கு போச்சுப்பா"

"டார்ச் லைட்டு எதுனா வச்சிருந்தானா, சரி நீ படு"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே அவர் தம்பி நான்கு கில்லாடிகள் முடிஞ்சு வந்தாச்சு.

அப்போ அங்க முனகி கிட்டு இருந்த காசிநாதன் முனகல் அதிகமா ஆச்சு.

"அண்ணே அவரை தூக்கி மாமர அடியிலே போடவா" என சுந்தரத்தின் தம்பி கேட்ட போது "பாவம் டா விடுடா அவன் பொண்டாட்டி கூட நம்ம வீட்டுல தான் இவன் நல்லா இருக்கணும்னு செவ்வா புள்ளயார் வச்சிகிட்டு இருக்கு" என்றார். எல்லாரும் படுத்தாச்சு. பசங்க மாத்திரம் எப்ப 4 மணி ஆகும் கொழுக்கட்டை எப்ப வரும் காசிநாதன் எழுந்திருப்பாரா மட்டையாயிடுவாரான்னு குசு குசுன்னு பேசிகிட்டு படுத்து இருந்தாங்க.

சரியா விடிகாலை நாலு மணிக்கு காசிநாதன் அலாரம் வச்ச மாதிரி விலுக்கு எழுந்தார். நிற்க முடியலை. ஆடிகிட்டே வேலிய எல்லாம் முட்டிகிட்டே பிரசவ ஆஸ்பத்திரிய விட்டு வெளியே வந்தாரு.

பின்ன நடந்ததை பின்ன பார்ப்போம்.பூசை எல்லாம் முடிச்சு எல்லாம் கூட்டம் கூட்டமா கொழுக்கட்டை பிரிச்சு எடுத்து கிட்டு இருந்தாங்க. கால்படி அரிசி கொடுத்தவங்களுக்கு இத்தனை கொழுக்கட்டை, அரைப்படிக்கு இத்தனை அப்படின்னு அத்தாச்சி கூறு போட்டு விட்டு "காப்பி சட்டி, படி, மரக்கா எல்லாம் கொண்டாங்கடீ கொழுக்கட்டை தரேன். அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன். ஆம்பளை ஜாக்கிரதை அத்தன தான் சொல்லுவேன்"ன்னு சொல்ல எல்லாரும் வந்து வாங்கிக மங்களா மாத்திரம் முந்தானையை நீட்டினா.

"ஏண்டி பொச கெட்டவளே ஒரு பாத்திரம் கூடவா எடுத்து வரலை"

"அத்தாச்சி அவசரத்துல ஓடியாந்துட்டேன்"

"சரி புடி. இந்தா மாங்கு மாங்குன்னு மாவுடிச்சதால எச்சமா கொஞ்சம்"

டொக் டொக் டொக் கதவு தட்டப்பட்டது.

"யாரிடீ இது இந்த நேரத்துல் வசந்தா போய் பாரு சன்னலு வழியா"

"அத்தாச்சி மங்களா புருசன் வந்து நிக்க முடியால நெறகொடமா ஆடிகிட்டு இருக்கு நீங்க தான் அத்தாச்சி சரி வரும் போய் பதில் சொல்லுங்க"

அத்தாச்சி எழுத்து போய் "காசிநாதா போயிடு வீணா தொல்ல குடுக்காத காலையில வருவா ஒம் பொண்டலாட்டி செல்ல பொண்டலாட்டி"ன்னு திட்டி விட்டு வந்து அவரவர் கொழுக்கட்டை மேய ஆரம்பிச்சாச்சு.

"அத்தாச்சி இந்த வாட்டி தேங்கா அதிகம் அத்தாச்சி"

"உப்பே இல்லாட்டியும் என்னா ருசி"

"குட்டிகளா ஆம்பள பசங்க என்னா நடந்துச்சுன்னு கேட்டா சொல்ல கூடாது. சொன்னா என்னா நடக்கும்ன்னு சொல்லியிருக்கேன்ல சாக்கிரத"

"மங்களா எங்கடீ போற கொல்ல கதவ தொறந்து கிட்டு"

"ஒன்னுக்கு வருதுக்கா"

"முத்தத்துல போயிட்டு தண்ணி ஊத்திட வேண்டியது தான, இதுக்கு கொல்லைக்கு தான் போவனுமா"

"அய்யோ அதல்லாம் வேண்டாம் அத்தாச்சி அவ பயப்பட மாட்டா நீ போடி" இது வசந்தா.

மங்களா கொல்லை பக்கமா வந்து சந்து வழியா தெருவுக்கு வந்து கீழே கிடந்த காசிநாதனை எழுப்பி மடியில் கட்டியிருந்த கொழுக்கட்டையை கொடுக்க எழுந்து உட்கார கூட முடியாம திங்க ஆரம்பிச்சார்.


காலை ஆறு மணி. ஜனா ஓடி வந்து பிரசவ ஆஸ்பத்திரில "அய்யோ ஓடியாங்க ஓடியாங்க காசிநாதன் ரத்த வாந்தி எடுத்து செத்து கிடக்கு ரோட்டிலே"ன்னு கத்த தூங்கிகிட்டு இருந்த கூட்டன் எல்லாம் எழுந்து ஓடுச்சு தெரு பக்கமா.

அங்க செவ்வா புள்ளயார் கூட்டம் எல்லாம் சுத்தி நின்னு ஒப்பாரி வைக்க மங்களாவோ "அய்யோ அத்தாச்சி நானே கொழுக்கட்ட குடுத்து ரத்த வாந்தி எடுக்க வச்சிட்டனே அத்தாச்சி"ன்னு கதற அத்தாச்சியோ என்ன செய்வதுன்னு தெரியாம அழ மொத்த கூட்டமும் புள்ளயாரை சபிச்சும், அவரின் பவர் நினைத்து பயந்தும் கதறியது.

வேஷ்ட்டியில் இருந்து சிதறிய கொழுக்கட்டைகளும் வாயில் பாதி கொழுக்கட்டையும் ரத்தமுமாக கோணல் மானலாக கிடந்தார் காசிநாதன்.

சைக்கிளை நிப்பாட்டி விட்டு கூட்டத்தை விலக்கி விட்டு எட்டி பார்த்தான் அழகப்பன். பதறி போய் சைக்கிளை திருப்பி கொண்டு வேக வேகமாக ஒட்டன் காலனியை நோக்கி சீட்டில் குந்தாம மிதிச்சு கிட்டு போய் ஸ்டாண்டு கூட போடாம தள்ளி விட்டுட்டு "எலேய் செந்திலு செந்திலு நா போன பின்ன யாருக்காவது சரக்கு வித்தியா"ன்னு கேட்க செந்திலு இல்லையண்ணே"ன்னு சொன்னான்.

"என்ன ஆச்சுண்னே போலீஸ் ரயிடு வருதா அதான் காளிமுத்து வந்து இந்த மாசத்துக்கு வாங்கிட்டு போயிட்டாரே"

"பேசாதடா முதல்ல சரக்க அஞ்சு கேனையும் சாக்கடையிலே கவுறுடா ன்னு சொல்லி ரெண்டு பேரும் சேர்ந்து கவுத்தாங்க.

"என்ன அண்ணே நடந்துச்சு"

"செந்திலு காலை எனக்கு சரக்கு நாலு மணிக்கு வந்துச்சுடா.ஒடனே காசிநாதன் வந்துட்டான் சரக்கு போட. போட்டுட்டு போய் தெருவுல ரத்த வாந்தி எடுத்து செத்து கிடக்காண்டா"

"அய்யோ நரசிம்மனுக்கு கொடுக்காம ஏண்ணே காசிநாதனுக்கு குடுத்த"

அதாவது நரசிம்மன் என்னும் குடி பார்ட்டி தான் அந்த கள்ள சாராயகடைக்கு QA/QC . அவனுக்கு முதல்ல குடுத்து அவன் உசிரோட இருந்தா தான் யாவாரம் தொடங்கும். கடை வாசலில் தான் நரசிம்மன் எப்போதும் விழுந்து கிடப்பான்.

"இல்லடா செந்திலு அவனுக்கு எழுப்பி குடுக்கங்காட்டியும் இவன் பறந்தாண்டா அதான் குடுத்து தொலைச்சேன்"

இது போல கள்ள சாராய மகாபாவிகள் செய்யும் பாவத்தை கூட செவ்வாபுள்ளயார் தானே ஏத்துகிட்டு சிரிச்சு கிட்டு இருக்காரு.

Saturday, February 28, 2009

தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கே. ராஜேந்திரன் M.Sc.,M.Ed., அவர்களுக்கு தமிழக அரசின் 2008 ம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.

இவர் கடந்த 28 ஆண்டுகளாக தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் துறை ஆசிரியராகவும் 01-10-2007 முதல் பள்ளியின் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவர் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி LCD Projector திரை மூலம் செயல்முறை கல்வியளித்து மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்ப்பதுடன் ஆண்டுதோறும் ஏ.வி.சி. கல்லூரியின் பேராசிரியர்களை அழைத்து Biology, Micro Biology, Micro Informatics போன்ற துறைகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு செமினார் வகுப்புகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. பெரும்பாலான ஆண்டுகளில் 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்திலும் 12-ம் வகுப்பு உயிரியல் பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டினை பெறச்செய்தது பாராட்டுக்குரியது.

இவ்வாண்டு மாவட்ட அளிவிலான 116 பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியை மிகச்சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது. மேலும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு கொள்ளச் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இவர் சிறந்த இலக்கிய ஆர்வலர். அறிவியலை இலக்கியத்துடன் கலந்து மாணவர்களை நன்னெறிப் படுத்துவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

மேலும் தொண்டு நிறுவனங்களான Lions New Century Club, Rotary Club மற்றும் சமரச சன்மார்க்க இளைஞர் கழகம் ஆகியவை இவருக்கு ஆசிரியச்செம்மல், அறம் வளர்ச் செம்மல் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. இன்ட்ராக்ட் கழக பொறுப்பாளராகவும், நாட்டு நலப்பணித்திட்ட உதவித் திட்ட அலுவலராகவும் இருந்து பல சமுதாயத் தொண்டினையும் செய்துள்ளார்.

தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற பின்பு முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவி பெற்று பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார். இத்துடன் மாணவர்களின் வளர்ச்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு காலம் பாராமல் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் இவருக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது பெருமைக்குரியதாகும்.