"பாய் எனக்கு காப்படி பச்சரிசி, 4 வர மொளகா, 15 காசுக்கு கடுவு, 5 காசுக்கு உப்பு, இந்தா தொன்னையிலே கொஞ்சம் கல்லெண்ணய் , 3 காஞ்ச வெறகு கொடு, உருண்டை வெரகு வேண்டாம் அத்தாச்சி திட்டும், ஒடச்ச வெரகு கொடு"
"அட ஒப்பம்மொவளே செவ்வாபுள்ளயாருக்கு அத்தாச்சி உப்பு கூடவா வாங்கியார சொன்னுச்சு? அடி கழுத உப்புல்லாம் கெடயாது . இந்தா இதை எடுத்து கிட்டு போ 3 ரூவா பத்து காசு ஆச்சு. கொடுத்துட்டு போ"
செவந்தி அதை எடுத்து கிட்டு அத்தாச்சி வீட்டுக்கு போகும் போதே தான் கலந்துக்க போகும் முதல் செவ்வாபுள்ளயாரை பத்தி கனவு கண்டு கிட்டே போனா! நேற்று செவந்தி, புவனா, மஞ்சுளா எல்லோரிடமும் செவ்வா புள்ளயாரை பத்தி பேசிகிட்டது நியாபகம் வந்தது செவந்திக்கு.
"டீ பொம்பள மட்டும் தான் அங்க உண்டு. எல்லாரும் துணிய அவுத்து போட்டு புள்ளயாரை கும்மிடனும். அப்ப தான் நம்ம வீட்டு ஆம்புளைங்க எல்லாம் நல்லா இருப்பாங்க"
" கருமம் .கருமம். இல்லடீ மக்குட்டு தான் அவ சொல்லறது போல இல்ல"
" அய்யோ நான் போன ஆடி மாசம் வசந்தா மாமி வீட்டுல நடந்துச்சே அப்ப அங்குனி ஆத்தா அழைச்சுட்டு போச்சு. டிரஸ் எல்லாம் உண்டு. அய்யோ அய்யோ . ஆனா அந்த கொழுக்கட்டை எல்லான் டிசன் டிசனா இருக்கும் உரல் உளக்கை மாதிரி . அம்மி குழவி மாதிரி, புள்ளயார் மாதிரி, தேங்கா போட்டிருக்கும் ஆனா உப்பு இருக்காது அத்தன ஒரு ருசி. ஆனா இருடீ நாம பொம்பள கூட மாத்திரம் கூடத்தான் இதல்லாம் பேசிக்கனும். ஆம்பள கூட பேசினா ரத்த போக்கு அதிகமா ஆவும்"
"ரத்த போக்குன்னா"
"அய்யோடி இது பேக்கு இதுக்கு எல்லாம் எல்லாம் என்னா தெரியும்?!, வா வா அத்தாச்சி எல்லாம் சொல்லும்"
நினைவில் இருந்து மீண்ட செவ்வந்தி க்கு ஆசை ஆசையா இருந்துச்சு. தான் முதலில் கலந்துக்க போகும் செவ்வா புள்ளயார் பத்தி.
செவ்வாய் இரவு வசந்தா மாமி வீடு களை கட்டுச்சு. வசந்தா மாமியின் புருஷன் சுந்தரத்து கிட்ட அத்தாச்சி திங்கள் கிழமையே அடுத்த நாள் அவரு வீட்டிலே நடக்க போகும் செவ்வா புள்ளையாருக்கு பர்மிஷன் எல்லாம் வாங்கிடுச்சு. "அண்ணே உங்க வீடு தானே கொஞ்சம் பெரிசா இருக்கு நாங்க இங்க கும்பிட்டா உங்க வீடே செழிக்கும் அண்ணே, நீங்க ராத்திரி எதுனே புது படம் வந்திருக்காமே "மூன்று முடிச்சி"ன்னு அதுல ஒரு கொட மொளா மூக்கு பொண்ணு அழகா இருக்காம் போயிட்டு வாங்க அண்ணே"
சுந்தரம் ரயில்வேயில் வேலை. இரண்டாம் ஷிப்ட் முடிஞ்சு செவ்வாய் ராத்திரி ஒன்பது மணிக்கு வரும் போதே வாசலில் அத்தாச்சி நின்று கொண்டு "அண்ணே உள்ள கிட்ட தட்ட ஆரம்பிக்க போவுதுண்ணே. இப்படி திண்ணையிலே குந்துங்க. இருங்க வசந்தாவை இட்லி எடுத்துட்டு வர சொல்றேன்" என்று மடக்க "அத்தாச்சி அப்படியே என் கைலியயும் எடுத்துட்டு வர சொல்லுங்க" என்று சொன்னார்.
பின்னே அத்தாச்சியே உள்ளே போய் இட்லியும் கைலியும் எடுத்து வர திண்ணை மேலே ஏறி கைலியை மாத்திகிட்டு திண்ணையிலேயே சாப்பிட உட்கார்ந்தார்.
"அத்தாட்சி! முத்துராமன் , சிவகுமார் எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சே! இந்த பய கட்சி காமாச்சின்னு அலையறானே ஒரு புத்தி சொல்ல கூடாதா"இட்லி சாப்பிட்டு கிட்டே தன் தம்பிய பத்தி கேட்டார் அத்தாச்சிகிட்டே.
"அண்ணே அவனுக்கு என்ன ராசா உன் அக்கா மக தான் இருக்காளே ராசாத்தியாட்டாம் "
"என்னவோ போ அத்தாச்சி"
"சரி போ, உங்க தம்பி உங்களுக்கு. ஜமுக்காளமும் தலவாணியும் சின்ன தம்பி கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன். அது கொண்டு போய் பிரசவ ஆஸ்பத்திரி வராண்டாவிலே போட்டுடும். வேப்பங்காத்து நல்லா வரும்"
"சரி நான் ரெண்டாமாட்டம் பார்த்துட்டு அங்க வந்து படுத்துகுறேன். வருஷத்துக்கு எட்டு நாள் அங்க தான படுக்கை"
"அது என்ன கணக்கு எட்டு நாளு"
"அதான் ஆடி மாசம் நாலு செவ்வா கெழமை தைமாசம் நாலு செவ்வா நீங்க அடிக்கிற கூத்துல நான் வேப்பங்காத்து தான வாங்க வேண்டி கெடக்கு"
"எல்லாம் குடும்பத்து ஆம்பளைங்க நல்லா இருக்கதான அண்ணே"
"சரி அத்தாச்சி நான் வரேன் நான் பெத்த கொடுக்கு எங்க/"
"அதல்லாம் சின்ன தம்பி கூட்டிட்டு போயிடுச்சு நீங்க போங்களேன் சீக்கிரமா"
அத்தாச்சி சுந்தரம் சைக்கிளை எடுத்ததும் வீட்டுக்குள்ளே போய் "என்னங்கடி மச மசன்னு நிக்குறீங்க. வசந்தா நீ அந்த உரல்ல ஊறுன பச்சரிசிய போட்டு இடிக்க வேண்டியது தான. இது எவடீ நாலு வெறவு ஈர வெறவா அனுப்பினது, ஒரு சீசா மண்ணென்னெய் இதுக்கே ஆவும் போல இருக்கே, இங்கபாரு காஞ்ச சேப்பு மொளாக்கி பதிலா எவலோ பச்ச மொளா அனுப்புனவ, ஆகா எவளோ ரேசன் அரிசி அனுப்பியிருக்காளே..." இப்படியாக 10 வீட்டில் இருந்து வந்த சாமான்களை பார்த்து ஒரே அலப்பரை.
"அத்தாச்சி எனக்கு நாளக்கி தீட்டு வர நாளு. இடுப்பு கடுக்குது. காலை வர தாங்கனுமேன்னு நானே காசு முடிஞ்சு போட்டு வச்சிட்டு வேலை பாத்துகிட்டு இருக்கேன். அரிசி இடிக்க மங்களாவ வர சொல்லியிருக்கேன்"
"உக்கூம் அவ எங்க வர போறா, குடிகார காசிநாதன சமாளிச்சு அவ வரங்காட்டியும் தைமாச செவ்வா புள்ளையாரு வந்துடுவாரு"
"அத்தாச்சி வந்துட்டன் அத்தாச்சி" இது மங்களா.
"வாடி மங்களா ஏன் உன் மூஞ்சி இருக்கு மங்கலா"
"அட போங்க அத்தாச்சி. கழுத்து புருசன் குடிக்க காசு கேக்குறான். வயித்து புருசன் படிக்க காசு கேக்குறான். நா ஒம்போது வீட்டுல பத்து பாத்திரம் தேச்சு பதினோரு மணிக்கு வூடு வந்து சேர்ந்து ஓடா ஒழச்சு நாயா தேயுறேன். குடிக்க காசு குடுத்துட்டு போய் பிரசவ ஆஸ்பத்திரி வராண்டாவுல படுய்யான்னு சொல்லிட்டு ஓடியாறேன்"
"ஏண்டி இத்தன வியாக்யானம் பேசுன நேரத்துல அரைப்படி இடிச்சிருக்க்கலாம்டி. சரி இடி"
"தள்ளு அத்தாச்சி. யத்தாச்சி யாத்தாச்சி"
"என்னடி இழுவையா இழுக்குற"
"மாமா காலைல கொழுக்கட்டை எடுத்துட்டு வாடின்னு சொல்லுது அத்தாச்சி"
"அடப்பவி மொவளே ஆம்பள அதை பார்த்தாலே பாவம். தின்னா ரத்த வாந்தி எடுத்து செத்துடுவாங்களேடி"
"போய் தொலையட்டும் நான் நிம்மதியாவது இருப்பேன்"
"போடீ போக்கத்தவளே"
மள மளன்னு செவ்வா புள்ளயார் வேலை ஆரம்பிச்சுது.
இங்க பிரசவ ஆஸ்பத்திரியிலே.....
ஜமுக்காளம் தலையனை எடுத்துகிட்டு சுத்தரத்தின் மகனை கூட்டிகிட்டு போன சுத்தரத்தின் தம்பி "எலேய் தம்பி இந்த ஜமுக்காளம் தலவாணிய விரிச்சுகிட்டு படு. உன் பிரண்டு கிருஷ்ணன் மொவன், பத்தரு மொவன் எல்லாம் இப்ப வந்துவாங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். அப்பா சினிமா வுட்டு வந்து நான் எங்கன்னு கேட்டா இத்தன நேரம் சித்தப்பா இங்க தான் பக்கத்துல படுத்து இருந்துச்சு. இப்பதான் வயித்தவலிக்குதுன்னு ராஜன் தோட்டம் பக்கம் போச்சுப்பான்னு சொல்லு. இந்தா கார்ரூவா வச்சிக்க" என்று சொல்லிவிட்டு அழகப்பா கொட்டாயிலே நான்கு கில்லாடி பார்க்க போயிட்டாரு.
சொன்ன மாதிரியே பிரகாஸ், லோகு பத்தர் மொவன் சம்மந்தம் எல்லாம் வர அங்க செவ்வா புள்ளயார்ல என்னா நடக்குதுன்னு ஒரே பட்டி மன்றம் ஓடுச்சு.
பக்கத்து ஒட்டன் காலனியிலே மூச்சு முட்ட சாராயம் குடிச்சுட்டு மங்களா புருசன் காசிநாதன் கூட வந்தாச்சு.
"எலேய் மாப்ளங்களா, அந்த கொழுக்கட்டை எவனெவனுக்கு வேணும் கை தூக்குங்க"
படுத்துகிட்டு இருந்த பசங்க கை கால் எல்லாத்தையும் தூக்க "அப்படின்னா எவனெவன் கிட்ட எத்தனை காசு இருக்கோ குடுங்க விடிகாலை 4 மணிக்கு போய் நைசா தள்ளிகிட்டு வர்ரேன். மங்களா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிட்டன்ல மாமா. இந்த மாமனுக்காக எத வேணா செய்வா என் தர்மபத்தினி"
மாமாவின் பேச்சில் ஒரு நம்பிக்கை ஏற்பட முதலி சுந்தரம் ம்கன் கால்ரூவா கொடுக்க மத்தவனும் 10 காசு 20 காசுன்னு கொடுக்க அது சேர்ந்துச்சு தொன்னூத்து அஞ்சுகாசு. காசிநாதன் வாங்கி கைலில சுத்திகிட்டு தூங்கி போயிட்டாரு.
மூன்று முடிச்சு முடிஞ்சு சுந்தரம் வந்து படுத்தாச்சு.
"எலேய் எங்கடா சித்தப்பா?"
"இங்க தான் படுத்து இருந்துச்சு. வெளிக்கி வருதுன்னு இப்பதான் ராஜன் தோட்டத்துக்கு போச்சுப்பா"
"டார்ச் லைட்டு எதுனா வச்சிருந்தானா, சரி நீ படு"ன்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே அவர் தம்பி நான்கு கில்லாடிகள் முடிஞ்சு வந்தாச்சு.
அப்போ அங்க முனகி கிட்டு இருந்த காசிநாதன் முனகல் அதிகமா ஆச்சு.
"அண்ணே அவரை தூக்கி மாமர அடியிலே போடவா" என சுந்தரத்தின் தம்பி கேட்ட போது "பாவம் டா விடுடா அவன் பொண்டாட்டி கூட நம்ம வீட்டுல தான் இவன் நல்லா இருக்கணும்னு செவ்வா புள்ளயார் வச்சிகிட்டு இருக்கு" என்றார். எல்லாரும் படுத்தாச்சு. பசங்க மாத்திரம் எப்ப 4 மணி ஆகும் கொழுக்கட்டை எப்ப வரும் காசிநாதன் எழுந்திருப்பாரா மட்டையாயிடுவாரான்னு குசு குசுன்னு பேசிகிட்டு படுத்து இருந்தாங்க.
சரியா விடிகாலை நாலு மணிக்கு காசிநாதன் அலாரம் வச்ச மாதிரி விலுக்கு எழுந்தார். நிற்க முடியலை. ஆடிகிட்டே வேலிய எல்லாம் முட்டிகிட்டே பிரசவ ஆஸ்பத்திரிய விட்டு வெளியே வந்தாரு.
பின்ன நடந்ததை பின்ன பார்ப்போம்.
பூசை எல்லாம் முடிச்சு எல்லாம் கூட்டம் கூட்டமா கொழுக்கட்டை பிரிச்சு எடுத்து கிட்டு இருந்தாங்க. கால்படி அரிசி கொடுத்தவங்களுக்கு இத்தனை கொழுக்கட்டை, அரைப்படிக்கு இத்தனை அப்படின்னு அத்தாச்சி கூறு போட்டு விட்டு "காப்பி சட்டி, படி, மரக்கா எல்லாம் கொண்டாங்கடீ கொழுக்கட்டை தரேன். அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன். ஆம்பளை ஜாக்கிரதை அத்தன தான் சொல்லுவேன்"ன்னு சொல்ல எல்லாரும் வந்து வாங்கிக மங்களா மாத்திரம் முந்தானையை நீட்டினா.
"ஏண்டி பொச கெட்டவளே ஒரு பாத்திரம் கூடவா எடுத்து வரலை"
"அத்தாச்சி அவசரத்துல ஓடியாந்துட்டேன்"
"சரி புடி. இந்தா மாங்கு மாங்குன்னு மாவுடிச்சதால எச்சமா கொஞ்சம்"
டொக் டொக் டொக் கதவு தட்டப்பட்டது.
"யாரிடீ இது இந்த நேரத்துல் வசந்தா போய் பாரு சன்னலு வழியா"
"அத்தாச்சி மங்களா புருசன் வந்து நிக்க முடியால நெறகொடமா ஆடிகிட்டு இருக்கு நீங்க தான் அத்தாச்சி சரி வரும் போய் பதில் சொல்லுங்க"
அத்தாச்சி எழுத்து போய் "காசிநாதா போயிடு வீணா தொல்ல குடுக்காத காலையில வருவா ஒம் பொண்டலாட்டி செல்ல பொண்டலாட்டி"ன்னு திட்டி விட்டு வந்து அவரவர் கொழுக்கட்டை மேய ஆரம்பிச்சாச்சு.
"அத்தாச்சி இந்த வாட்டி தேங்கா அதிகம் அத்தாச்சி"
"உப்பே இல்லாட்டியும் என்னா ருசி"
"குட்டிகளா ஆம்பள பசங்க என்னா நடந்துச்சுன்னு கேட்டா சொல்ல கூடாது. சொன்னா என்னா நடக்கும்ன்னு சொல்லியிருக்கேன்ல சாக்கிரத"
"மங்களா எங்கடீ போற கொல்ல கதவ தொறந்து கிட்டு"
"ஒன்னுக்கு வருதுக்கா"
"முத்தத்துல போயிட்டு தண்ணி ஊத்திட வேண்டியது தான, இதுக்கு கொல்லைக்கு தான் போவனுமா"
"அய்யோ அதல்லாம் வேண்டாம் அத்தாச்சி அவ பயப்பட மாட்டா நீ போடி" இது வசந்தா.
மங்களா கொல்லை பக்கமா வந்து சந்து வழியா தெருவுக்கு வந்து கீழே கிடந்த காசிநாதனை எழுப்பி மடியில் கட்டியிருந்த கொழுக்கட்டையை கொடுக்க எழுந்து உட்கார கூட முடியாம திங்க ஆரம்பிச்சார்.
காலை ஆறு மணி. ஜனா ஓடி வந்து பிரசவ ஆஸ்பத்திரில "அய்யோ ஓடியாங்க ஓடியாங்க காசிநாதன் ரத்த வாந்தி எடுத்து செத்து கிடக்கு ரோட்டிலே"ன்னு கத்த தூங்கிகிட்டு இருந்த கூட்டன் எல்லாம் எழுந்து ஓடுச்சு தெரு பக்கமா.
அங்க செவ்வா புள்ளயார் கூட்டம் எல்லாம் சுத்தி நின்னு ஒப்பாரி வைக்க மங்களாவோ "அய்யோ அத்தாச்சி நானே கொழுக்கட்ட குடுத்து ரத்த வாந்தி எடுக்க வச்சிட்டனே அத்தாச்சி"ன்னு கதற அத்தாச்சியோ என்ன செய்வதுன்னு தெரியாம அழ மொத்த கூட்டமும் புள்ளயாரை சபிச்சும், அவரின் பவர் நினைத்து பயந்தும் கதறியது.
வேஷ்ட்டியில் இருந்து சிதறிய கொழுக்கட்டைகளும் வாயில் பாதி கொழுக்கட்டையும் ரத்தமுமாக கோணல் மானலாக கிடந்தார் காசிநாதன்.
சைக்கிளை நிப்பாட்டி விட்டு கூட்டத்தை விலக்கி விட்டு எட்டி பார்த்தான் அழகப்பன். பதறி போய் சைக்கிளை திருப்பி கொண்டு வேக வேகமாக ஒட்டன் காலனியை நோக்கி சீட்டில் குந்தாம மிதிச்சு கிட்டு போய் ஸ்டாண்டு கூட போடாம தள்ளி விட்டுட்டு "எலேய் செந்திலு செந்திலு நா போன பின்ன யாருக்காவது சரக்கு வித்தியா"ன்னு கேட்க செந்திலு இல்லையண்ணே"ன்னு சொன்னான்.
"என்ன ஆச்சுண்னே போலீஸ் ரயிடு வருதா அதான் காளிமுத்து வந்து இந்த மாசத்துக்கு வாங்கிட்டு போயிட்டாரே"
"பேசாதடா முதல்ல சரக்க அஞ்சு கேனையும் சாக்கடையிலே கவுறுடா ன்னு சொல்லி ரெண்டு பேரும் சேர்ந்து கவுத்தாங்க.
"என்ன அண்ணே நடந்துச்சு"
"செந்திலு காலை எனக்கு சரக்கு நாலு மணிக்கு வந்துச்சுடா.ஒடனே காசிநாதன் வந்துட்டான் சரக்கு போட. போட்டுட்டு போய் தெருவுல ரத்த வாந்தி எடுத்து செத்து கிடக்காண்டா"
"அய்யோ நரசிம்மனுக்கு கொடுக்காம ஏண்ணே காசிநாதனுக்கு குடுத்த"
அதாவது நரசிம்மன் என்னும் குடி பார்ட்டி தான் அந்த கள்ள சாராயகடைக்கு QA/QC . அவனுக்கு முதல்ல குடுத்து அவன் உசிரோட இருந்தா தான் யாவாரம் தொடங்கும். கடை வாசலில் தான் நரசிம்மன் எப்போதும் விழுந்து கிடப்பான்.
"இல்லடா செந்திலு அவனுக்கு எழுப்பி குடுக்கங்காட்டியும் இவன் பறந்தாண்டா அதான் குடுத்து தொலைச்சேன்"
இது போல கள்ள சாராய மகாபாவிகள் செய்யும் பாவத்தை கூட செவ்வாபுள்ளயார் தானே ஏத்துகிட்டு சிரிச்சு கிட்டு இருக்காரு.
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...
Tuesday, June 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அட்டகாசமான ஊர் பேச்சு வழக்கு !
வாழ்த்துக்கள் !
செவ்வா புள்ளையார்ன்னா
உப்பு போடாத கொலுக்கட்டை அப்புறம் அன்னிக்கு ஃபுல்லா காசு செலவழிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க !
அட்டகாசமான ஊர் பேச்சு வழக்கு !
வாழ்த்துக்கள் !//
மறுக்கா கூவிக்கறேன்.
உங்கள் ‘குள்ள மாமா’வுடன் போட்டி போட வந்திருக்கிறார் ‘செவ்வாப் புள்ளையார்’! வட்டார வழக்கு மணக்கிறது. யதார்த்தத்தை சொல்லி முடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
தம்பி ஆயில்யன், அது ‘கொலு’க்கட்டை இல்லை. கொழுக்கட்டை:)!
சூப்பர் :)
நல்லாருக்குண்ணே...
வெற்றிக்கு வாழ்த்துகள்
நல்லா வந்துருக்கு அபி அப்பா.
ஒரு சில தட்டச்சுப்பிழை(!) சரி செஞ்சுருங்கோ
SUPER AH IRUKKUNNA...
PRIZE ADIKA POREENGA:-)
அசத்தலான வட்டார வழக்கு கதையை சட சடன்னு நகத்தி கொண்டு போன பாங்கு எல்லாமே நச்!!!
இது போல கள்ள சாராய மகாபாவிகள் செய்யும் பாவத்தை கூட செவ்வாபுள்ளயார் தானே ஏத்துகிட்டு சிரிச்சு கிட்டு இருக்காரு.
romba nalla irukku. Aanaal en mangala Kasinathanukku Kozhukkattai Koduththaal? Raththa vaanthi eduthu saakattum enraa?
//ராமலக்ஷ்மி said...
தம்பி ஆயில்யன், அது ‘கொலு’க்கட்டை இல்லை. கொழுக்கட்டை:)!///
ம்ம் திருத்திக்கிட்டேன் அக்கா !
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கடைசில வைச்ச ட்விஸ்ட் சூப்பர் சித்தப்பூ.
பரிசு நிச்சயம், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
அடப் பிள்ளையாரே.
உமக்குப் பழி வந்ததே.
அபி அப்பா, உயிரோட்டமான நடை. வெற்றிக்கு வாழ்த்துகள். .
சூப்பர் கதை அபி அப்பா.
கிராமத்துல இப்படி எல்லாம் நடக்குமா ? நிறைய மிஸ் பண்ணி இருக்கேன் போல.
வாழ்த்துகள்.
அன்புடன்
மாசற்ற கொடி
Post a Comment