வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Friday, March 26, 2010

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!!

இன்றைக்கு ஒரு நண்பரை பார்த்தேன். பார்த்தேன் என்பதை விட தரிசித்தேன் என்பதே சரி! காரணம் சீமாச்சு அண்ணாவின் மிகப்பெரிய தேடல் லிஸ்ட் நண்பர். கிட்ட தட்ட எனக்கு சீனியர் ஹீரோ!

திரு.பஸ்ருல் ரஹமான். அப்போது அவரால் ஒரு நாள் எங்களுக்கு லீவ் கிடைத்தது என்பதே எங்களுக்கு அவரை ஹீரோ ஆக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.


அவர் பால் பேட்மிட்டனில் நேஷனல் சாம்பியன். அப்போதே பல கப் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்.

அது போகட்டும். இன்றைக்கு அவர் உதிர்த்த வார்த்தைகள்!!

"தம்பி எப்படிடா இருக்கே?"

"அண்ணே எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே!"

"டேய் நீ தானே உன் வண்டி வந்து இடிச்சே! டேய் இது இனோவாடா தம்பி"

"ஸோ வாட்! மாயவரம் ரோட்டுக்குக்கு BMWவும், ஒபாமா காரும் ஒரே தராசு தான். ஆனா என்னை வா, போ, வாடா, போடா போடும் தகுதி யாருக்கும் கொடுக்கலை இன்னும்"

"டேய் நான் தாண்டா! எட்டாம் நம்பர் கிளியனூர் பஸ்"

"அண்ணா"

"போகட்டும்டா! டேய் நம்ம வாசன் நம்ம ஸ்கூல் கட்ட பயங்கரமா ஏர்பாடு ஆகுதாமே"

ஆமா அண்ணா"

"டேய் உனக்கு தெரியுமா? நீ கேள்வி பட்டதுண்டா நம்ம ஸ்கூல்ல தான் இஸ்லாமிய ஆண்பிள்ளைங்க எந்த நாளும் கைலி அணிந்து வரலாம். தவிர வெள்ளி கிழமை 2 மணி நேரம் மதிய பிரேயருக்காக பர்மிஷன்"

"ஓ அப்படியா அண்ணே"

"என்னடா சுரத்தே இல்லாம பேசுர"

"இல்லை அண்ணே உடம்பு சரியில்லை"

"சரி சரி நம்ம கே.ஆர் சார் எப்படி இருக்கார்?"

"நல்லா இருக்காரு அண்ணே"

"மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு...முதன் முதலா தலைமை ஆசிரியர்! எனக்கு மனசு குளுந்து போச்சுடா தம்பி"

"இதுக்கு எல்லாம் காரணம் என்னன்னு நினைக்குறெடா"

"தெரியலைண்ணா"

"நம்ம ஸ்கூல் நிர்வாகம் அப்படி!"

"அஃகோர்ஸ் நாங்க எல்லாம் நாட்டுக்கு வெளியே இருந்தாலும் அம்மா மடி மாதிரிடா நம்ம ஸ்கூல். நீ என்னவோ சுரத்தே இல்லாம பேசுற. சரி பை நாளை பார்ப்போம்"

**********

நான் சுரத்தே இல்லாமல் இல்லை! எங்களை சுத்தி இருக்கும் நீடூர், வடகரை, இலந்தங்குடி, கிளியனூர் உட்பட 23 இஸ்லாமிய கிராமங்கள் , அந்த ஊர் பெரிய மனிதர்கள் எல்லாரும் படித்த பள்ளி எங்கள் பள்ளியே! இதில் தான் எனக்கு பெருமையே!!!!

"

Wednesday, March 24, 2010

12. இறைவர் பூசனை - ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம்

கானகமெங்கும் இங்குமங்குமாய் ஓடி, அலையாய் அலைந்து, ஏதோ ஒரு மரத்தின் கொம்பில் இருக்கும் தேன் அடைதனைக் கண்டு, அதில் இருக்கும் தேனையும் வடித்தாயிற்று. ஆம், பெற்ற பிள்ளைக்கு ஊட்டச்சத்தாய், நோய்க்கு மருந்தாய் தேவைப்படுவதுதான் அந்த மாமருந்து. அடுத்தபடியாக அதைப்பக்குவமாய் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிய தருணம் எப்படியோ, அப்படிப்பட்ட தருணம்தான் ஜெகதீசனுக்கும்!

தோஹா! பாரசீக வளைகுடாவின் தீபகற்ப நாடான கட்டார் நாட்டின் தலைநகர்தான் இந்த தோஹா என்கிற நகரம். அராபிய மொழியில், தோஹா என்றால் பெரிய மரம் என்று பொருள். அதாவது, பெரிய மரங்களைக் காவு கொண்ட நகரம் என்கிற பொருளில் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். அங்கேதான் தமிழகத்து இளைஞனான ஜெகதீசனுக்கு வேலை. மாதமெல்லாம் உழைத்து ஈட்டிய வருவாயை, வங்கியினூடாக தன் இந்தியாவில் மயிலாடுதுறையிலுள்ள தன் பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டிய அலுவலில் மும்முரமாய் நம் ஜெகதீசன்.

“மாமு, நீங்க யார்கிட்ட இந்தவாட்டி டிமாண்ட் டிராப்ஃட் கொடுத்து அனுப்பப் போறீங்க? நானும் கொடுத்து அனுப்பணும் மாமு!”

“ஜெகதீசா, நான் நம்ம ஜவஹர் பாய்கிட்ட கொடுத்துட்டேன் நேத்தே!”

“அட, அப்படியா? ஜவஹர் அண்ணன் எப்ப ஊருக்கு போறாரு?”

“நாளை மறுநாள்னு நினைக்கேன், வியாழக்கிழமை மதியம்!”

“அப்படியா, அப்ப நான் இப்பவே போயி பேங்க்ல டீடீ எடுத்துட்டு வந்திடுறேன் மாமு!”

"சீக்கிரம், சலாவுக்கு நேரமாகுது பாருங்க; பேங்க் மூடிடுவாங்க இல்லையா!”

அல் திவான் வீதியும் அல் ஷமால் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு மிக அண்மையில் இருக்கும் ஜெகதீசனுக்கு, வாடி முஷேரப் வீதியில் இருக்கும் தோஹா வங்கிக்குச் செல்ல எப்படியும் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆகும். அதே சமயத்தில் சலா என்று சொல்லப்படுகிற தொழுகைக்கு இன்னமும் ஒண்ணரை மணி நேரம்தான் இருக்கிறது. அதற்குள் எப்படியாவது வங்கி வேலையை முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால், ஜவஹர் பாய் கிளம்பி விடுவார்; அடுத்த வாரம் வரை ஊருக்கு பணம் அனுப்புவதைக் கிடப்பில்தான் போட வேண்டும். எப்படியும் அனுப்பியே தீருவது என்ற மனநிலையோடு வங்கிக்கு விரைந்தார் ஜெகதீசன்.

துரித கதியில் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில், குறுக்குச் சாலையான அப்துல்லா பின் தானி வீதி வழியாகச் சென்று வாடி முஷேரப் சாலை அடைகிறார் ஜெகதீசன். அடைந்த மாத்திரத்திலேயே, மற்றொரு வங்கியான யூனியன் வங்கியில் இந்தியர்கள் பெருமளவிலாகக் கூடி வரிசையில் நிற்பதைக் கண்டதும் ஜெகதீசனுக்கு முகம் சோர்ந்தது. என்றாலும், மனம் தள்ராது தோஹா வங்கியையும் சென்று பார்த்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

யூனியன் வங்கிக்கு மிக அருகண்மையிலேயே தோஹா வங்கி என்பதால், சில நிமிடங்களில் தோஹா வங்கியை அடைந்து விட்ட ஜெகதீசனுக்கு முகம் மலர்ந்தது. யூனியன் வங்கி அளவுக்கு கூட்டம் இல்லை; என்றாலும் சுமார் பத்துப் பதினைந்து பேர் ஏற்கனவே வரிசையில் நினிறிருந்தார்கள்.

பொறுமையாக நின்றிருந்தார் ஜெகதீசன். இனியும் தொழுகைக்கு கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இருக்கின்றன எனும் தைரியமும் கூட. தனது முறையும் வந்தது. தொகையைச் சொல்லி, நிரப்பிய படிவத்தையும் வங்கி அலுவலர்களிடத்தே கொடுத்து ஆயிற்று. மற்றவர்களோடு ஜெகதீசனும் அமர்ந்திருக்க, வந்திருந்த அனைவரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கான சான்றளிக்கப்பட்ட காசோலையும் அவர்களிடத்தே ஒப்படைக்கப்பட்டது.

தனக்குப் பின்னாலே வந்தவர்களுக்குக் கூட வேலை முடிந்து விட்டதே, தனக்கு மட்டும் ஏன் இன்னும் அழைப்பு வரவில்லை எனும் கவலை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது ஜெகதீசனுக்கு. தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால், வங்கியை மூடிவிடுவார்கள். என்ன செய்வது? இனி அடுத்த வாரம்தான் கொடுத்து அனுப்ப முடியும் எனும் கவலை தோய்ந்த முகத்தோடு இருந்த ஜெகதீசனுக்கு, வழமையான அறையை விடுத்து வேறொரு அறையில் இருந்து அழைப்பு வந்தது. ஜெகதீசனுக்கு இப்போது வேறு பயம் பற்றிக் கொண்டது. தமது வங்கிக் கணக்கில் ஏதாவது குளறுபடியாக இருக்குமோ என்கிற கவலைதான் அது.

அறைக்குள் நுழைந்ததுமே ஒலித்தது தமிழ்க் குரல்! புலம் பெயர்ந்த நாட்டிலே, நாட்டின் தலைசிறந்த வங்கி அலுவலராக ஒரு தமிழரா?? ஜெகதீசனுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியும் அளவு கடந்த ஆச்சரியமும் மேலோங்கியது.

“வாங்க ஜெகதீசன்! நீங்க மயிலாடுதுறையா??”

“ஆமாங்க சார்!”

“அதான், படிவத்துல பார்த்தேன்! நானும் மயிலாடுதுறைதான்!! ஆமா, நீங்க ஊர்ல....?”, இழுத்தார் அந்த அதிகாரி.

“சார், நான் DBTR தேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே.ஆர். இராமமூர்த்தி ஆசிரியரோட மகன் சார்! ஸ்கூல்ல JRR ன்னு சொன்னால் எல்லாருக்கும் எங்க அப்பாவைத் தெரியும் சார்”

ஜெகதீசன் சொல்லி முடிப்பதற்குள் அந்த அலுவலர் எழுந்து, ஜெகதீசனை உச்சி முகர்ந்து ஆரத் தழுவிக் கொண்டார். ஜெகதீசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பள்ளியின் மகிமையா? அல்லது தனது தந்தையின் புகழா?? எதுவாயினும் அது தனக்குப் பெருமையே என்கிற பரவசத்தில்,

“சார், நீங்க??”

”ஜெகதீசன், நானும் DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவன் தான்... உங்கப்பாவோட மாணவனுங்கூட... இப்ப இந்த வங்கியோட தலைமை நிர்வாகி, CEOவாக வேலை செய்துட்டு இருக்கேன்!”, ஒரு சில மணித் துளிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்,

“நான் இப்ப இந்த நிலையில இருக்கேன்னா, அதுக்கு உங்கப்பாதான் காரணம் தெரியுமா? அந்தப் பள்ளிக்கூடத்தையும் உங்கப்பாவையும் மறக்கவே முடியாதுப்பா!! சார் இப்போ எப்படி இருக்காங்க? உடல் நிலையெல்லாம் நல்ல நிலைமையில் இருக்காரா?”, கண்களின் ஓரத்தில் ஆனந்தக் கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

அறையில் நிலவிய பரவசத் தருணத்தில் ஜெகதீசனுக்கும் மெய் சிலிர்த்தது. அதனூடாக வினவினார், “சார், உங்க பேரு?”

உணர்ச்சிவயப்பட்டதில் இருந்து மீண்டவாறே பேசலானார், “ஆங்...ஜெகதீசன்... சொல்ல மறந்துட்டனே? எம் பேரு சீத்தாராமன். குத்தாலத்து சீத்தாராமன் அப்படின்னு உங்க அப்பாகிட்டச் சொல்லுங்க. என்னை அவருக்கு நல்லாத் தெரியும்! சாரை நான் அவசியம் சந்திக்கணும்னு சொன்னேன்னு சொல்லுங்க. என்னோட நமஸ்காரத்தையும் மறக்காமல் சொல்லிடுங்க.”

“சரிங்க சார்!”, என்று கூறி, வங்கி வேலையை முடித்த கையோடு புறப்படலானார் ஜெகதீசன்.

அப்பாவின் மாணவர்கள் என்று நிறைய பேரை நிறைய பதவிகளில் சந்தித்தி்ருந்தாலும் கத்தார் நாட்டில் முக்கிய வங்கி்யின் முதன்மை மேலதிகாரியாக சீத்தாராமனைச் சந்தித்ததும், அவர் தன் அப்பாவின் பெயரைக் கேட்டவுடனேயே முகத்தில் காட்டிய உணர்ச்சி பாவங்களும் ஜெகதீசனை மிக்க வியப்பிலாழ்த்தியது. 40 வருடங்களாக ஒரு ஆசிரியரின் மகனாக இருக்கும் நிலையில் தனக்குக் கிடைத்த பல்வேறு விதமான அனுபவங்களில் இது அவனுக்கு மிக மகத்தானதாக இருந்தது. எப்படியும் வெள்ளிக்கிழமை அப்பாவுக்கு தொலைபேசும் போது சீத்தாராமனைச் சந்தித்தது குறித்துச் சொன்னால் மகிழ்ச்சியடைவார். அவருக்கு சீத்தாராமனை நினைவிருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆசிரியர் தொழிலில் அதுவும் 50 ஆண்டுகால ஆசிரியர் தொழிலில் அப்பா சில ஆயிரம் மாணவர்களை உருவாக்கியிருப்பார். ஒவ்வொருவரையும் நினைவில் கொள்வதென்பது முடியாத காரியம். பலவிதமான நினைவலைகள் மனதைச் சுழற்ற ஜவகரிடம் டீடீயை நேரத்தில் கொடுக்க வேண்டுமென்ற பிரதான கவலையே முன்னால் நின்றது.

oOo

வழக்கமான லெளகீக வாழ்க்கையில் காலதேவனின் காலச் சக்கரம் சுழன்றதில் சில மாதங்கள் கழிந்தது. ஜெகதீசனுக்கு வாழ்க்கைத்தரமும் சற்றே உயர்ந்தது. கட்டார் மற்றும் வளைகுடா நாடுகளை பெற்றோருக்குக் காண்பிக்கும் பொருட்டு பெற்றோரை அழைத்து வந்தார் ஜெகதீசன். வந்தவர்கள் பல இடங்களைக் கண்டு களித்தனர். அதனூடாக ஜெகதீசன் தன் தந்தையிடம் அவரது மாணவரான சீத்தாராமன் அவர்கள் பற்றிய விபரத்தைக் கூறவே, அவரும் தோஹா வங்கிக்கு வங்கியின் தலைமை அதிகாரியான தனது மாணவனைக் காணச் சென்றார்.

“சார், உங்களுக்கு என்ன வேணும்?”

“நான், சி.இ.ஓ சீத்தாராமன் சாரைப் பார்க்கணும்!”

“என்னது? சி.இ,ஓ சாரைப் பார்க்கணுமா?? அப்பாயின்ட்மென்ட் இருக்கா??”

“இல்லீங்களே?”

“அப்படின்னா, இங்க உக்காருங்க! பிஸியா இருப்பாரு ! முடிஞ்சா பார்க்கலாம்!!”

காத்திருந்தார், காத்திருந்தார், காத்துக் கொண்டே இருந்தார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் அல்லவா? பொறுமையே உருவாகக் காத்திருந்தார். வேலையின் உச்சத்தில் மூழ்கி இருந்த அலுவலர்களில் ஒருவர், பெரியவர் ஒருவர் வெகு நேரமாகக் காத்திருக்கிறாரே என நினைத்தவரானார். சற்று இரக்க குணம் மிகுந்தவர் போலத் தெரிகிறது. அப்படி நினைத்த அந்த அதிகாரி, தலைமை நிர்வாகியான சீத்தாராமன் அவர்கள் அறைக்குச் சென்று,

“சார், வணக்கம்! உள்ள வரலாமா?”

“யெஸ்!”

“சார், யாரோ உங்க ஆசிரியராம், ஜே.ஆர்.ஆர்னு சொல்லிட்டு ஒருத்தர் ரிசப்சன்ல காத்திட்டு இருக்கார் சார். அவரை....”, தயங்கித் தயங்கி சொல்ல முயற்சித்தார் அந்த அலுவலர்.

“யோவ்... என்னையா சொல்லுறீங்க? ஜே.ஆர்.ஆர் சார், இங்க வந்திருக்காரா?? யோவ், அவரைப் பார்க்க நான் அல்லவா போகணும்?? ஏன்யா அவரைக் காத்திருக்கச் சொன்னீங்க??”

தனது ஆசானைக் காத்திருப்பில் அமரச் சொல்லிவிட்டார்களே என்கிற பரிதவிப்பில், ஏதோ செய்யக் கூடாத செயலைச் செய்து விட்ட குற்ற உணர்ச்சியில் கிளர்ந்து எழுந்தார் அந்த நல்ல மாணவரும், ஆசானின் மீது பயபக்தியும் கொண்ட தோஹா வங்கியின் தலைமை நிர்வாகியான சீத்தாராமன். அத்தோடு நில்லாமல், தனது ஆசான் ஜே.ஆர்.ஆர் இருக்கும் இடம் நோக்கித் தானே விரைந்து செல்கிறார்.

மாதா, பிதா, குரு தெய்வம் என்றல்லவா படித்தோம்? அந்த குருவான விசுவாமித்திரரே, தனது குருவான ஜே.ஆர்.ஆர் உருவில் தன்னைக் காண வந்திருப்பதைப் போலத்தான் உணர்கிறார், DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவரான இந்த சீத்தாராமன். தான் இன்றைக்கு ஒரு பன்னாட்டு வங்கியின் தலைமை நிர்வாகியாக இருப்பதற்கு இவர்தானே காரணம் என்கிற தாக்கத்தில் கட்டுண்டு போகிறார் இந்த மாணவர்.

ஆசானைத் தாள்பணிந்து, வரவேற்று தன் அறைக்கு அழைத்துச் சென்றார். வங்கி அலுவலர்களும், வாடிக்கையாளர்களும் அக்காட்சியை வியந்து கண்டனர். ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு எத்தகையது என்பதை அக்காட்சிப் பறைசாற்றிச் சொல்லியது.

நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். முத்தாய்ப்பாகக் கேட்டார் அந்த சீரிய மாணவர், “சார், என்னோட வாழ்க்கையே உங்களாலதான் சார். நான் உங்களுக்குக் குருதட்சிணையா என்ன தரணும் சார். தயங்காமச் சொல்லுங்க சார். இது என்னோட பணிவான விண்ணப்பம்!”

ஆசிரியர் பெருந்தகை எதுவும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அவர் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியதைப் பெருமையாக நினைப்பதாகவும், அங்கே அவர் செய்தவை எல்லாம் தனது கடமை என்றும் சொல்லி மறுத்தது கண்டு கண்கலங்கிப் போனார் சீத்தாராமன். ஆசிரியரின் பெருமையை தனது பள்ளிக்காலத்திலேயே அறிந்திருந்தாலும், தன் ஆசிரியர் ஒ்ரு சொக்கத்தங்கம்தான் என்ற ஒரு பெருமையே அவரையும் தற்பெருமை கொள்ளச் செய்தது. ஆசிரியர் தொழிலில் மாணவனின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன்னலம் கருதாது பணியாற்றும் மிக நல்ல ஆசிரியர்களை 110 வருடங்களுக்கும் மேலாகக் கொண்டது அந்தப் பள்ளி. அந்த ஆசிரியர்களுக்கெல்லா தலைமைஆசிரியரான ஜேஆர் ஆரா “எனக்கு இதைக் கொடு” என்று மாணவனிடம் கேட்டுவிடப் போகிறார். சீத்தாராமனும் சம்பிரதாயத்திற்காகக் கேட்கவில்லை, ஆசிரியரும் சம்பிரதாயத்திற்காக மறுக்கவில்லை. இருவர் உள்ளங்களுமே அதை மிக நன்றாக அறிந்திருந்தன.

“சார், முடியவே முடியாது! நீங்க எதனா சொல்லியே ஆகணும். இல்லாட்டி, என்னால நிம்மதியாவே இருக்க முடியாது சார்!! நான் ஸ்கூல்ல படிக்கும் போது நீங்கள் எனக்களித்த தனிப்பட்ட கவனமும் வழிகாட்டலும் மட்டுமே எனது இன்றைய நிலைக்குக் காரணம்.. என் கடமையை நான் செய்ய ஒ்ரு வழி சொல்லுங்கள் சார்”, இறைஞ்சினார், உயர்ந்த பதவியில் இருக்கும் அந்த சீரிய மாணவரான சீத்தாராமன்.

நல்லதொரு வாய்ப்பு தனக்குக் கிடைக்கப் பெற்றதையும், தனது மாணவர்களுள் ஒருவரான சீத்தாராமனும் இதற்குக் கடமைப்பட்டவன்தானே என உணர்ந்த, ஆசான் ஜே.ஆர்.ஆர் அவர்கள் வாய் திறந்து சொன்னார்,

“அப்படியா சீத்தாராமா, அப்ப எனக்கு உங்களால ஒரு காரியம் ஆகணுமப்பா!”

“ சொல்லுங்க சார்! அது என்னோட பாக்கியம்!! ப்ளீஸ் சொல்லுங்க சார்....” - ஆசிரியர் எதைச் சொன்னாலும் தன்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை சீத்தாராமனிடம்.

“நம்ம பள்ளிக்கூடக் கட்டடமெல்லாம் நீ படிக்கிறதுக்கு முன்னாடி கட்டினதுதான். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் 50 வயசுக்கு மேல ஆறது. மழை பெயஞ்சா கட்டிடமெல்லாம் ஒழுகறது. பசங்கள்ளாம் வகுப்புல உக்கார்ந்து படிக்கக் கஷ்டப் படறாங்க. நீங்க உங்களால முடிஞ்சதை.....”, அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே இடைமறித்தார் சீத்தாராமன்.

”சார், நான் செய்யுறேன் சார். அது எவ்வளவு ஆனாலும் நான் செய்யுறேன் சார்!!”, ஆசிரியர், மாணவர் இருவருமே புளகாங்கிதமடைந்தனர்.

கல்விக்கூடங்கள் கோயில்கள் என்பதும், கோவிலில் இருப்பது தெய்வம் என்பதும் இவர்கள் வாழ்க்கையில் உண்மையாகிப் போனதுதான் வரலாறு. பத்து இலட்சம் ரூபாய் என்கிற திட்ட மதிப்பீட்டில் வேலைகளைத் துவங்க, மயிலாடுதுறை தேசியத் துவக்கப் பள்ளியின் கோபால இராகவ சர்மா பிளாக் எனும் உபகட்டிடமானது உருவானது பதினேழு இலட்ச ரூபாய்ச் செலவில். மனமுவந்து முழுத்தொகைக்கும் பொறுப்பேற்றார், கல்விக்கும் அறத்திற்கும் பெருமை சேர்க்கும் இந்த சீத்தாராமன்.

நல்லதொரு நாளில், பள்ளிக்கட்டிடத் திறப்பு விழாவானது செவ்வனே நடத்தப்படுகிறது. முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்ப்பொது மக்கள் என அனைவரும் திரளாக வந்திருந்து விழாவுக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

அப்போது அத்தனை பேர் முன்னிலையிலும் நடந்தேறிய காட்சியில், அந்த தசரத இராமனே வந்து இந்த சீத்தாராமன் உருவில் தோன்றுகிறார். கட்டார் நாட்டிலே, பல கோடிகளைக் கட்டியாள்கிற உயர்ந்த பதவியில் வீற்றிருக்கும் தலைமை நிர்வாகியானவர், அந்த நிமிடத்தில், அந்தப் பள்ளியின் மாணவர்களுள் ஒருவர் மட்டுமே என்கிற சூழலில் தன்னை இருத்திக் கொண்டு, தன்னையும் மயிலாடுதுறையைச் சார்ந்த சமுதாயத்தையும் மேன்மைப்படுத்துகிற ஆசானின் பாதங்களை, தரையில் வீழ்ந்து தொட்டு வணங்குகிறார்! காட்சியைக் கண்டவர் மனம் நெக்குருகிப் பணிவில் நண்ணி நெகிழ்கிறது. DBTR தேசியத் துவக்கப் பள்ளியும் பொன்னொளி வீசும் தோற்றத்தோடு மிடுக்கோடு காட்சியளிக்கத் துவங்குகிறது!!

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்!
புதிய கட்டிடத் திறப்பு விழாவில் ஆசிரியர் வழியொற்றிப் பின் தொடரும் மாணவரும் அவர் குடும்பத்தாரும்


ஆ்சிரியர் வழிகாட்டலில் தந்தைபெயரில் தான் அமைத்த பள்ளிக்கட்டிடத்தை தன் தாய் கையால் திறந்து வைக்க, தன் குழந்தைகள் அதைப் பெருமையுடன் வழிகாட்டலாய் நோக்க கடமை முடிக்கிறார் சீத்தாராமன்


தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியைகளுடன் சீத்தாராமன்ஆச்சார்ய தேவோ பவ! பள்ளியின் விழாமேடையில் ஆசிரியன் தாள் பணியும் மாணவர் சீத்தாராமன் - தன் ஆசிரியரையும் மாணவரையும் பெருமையுடன் மடி சுமக்கும் எங்கள் பள்ளி மேடை


அவையத்து முந்தியிருந்த மாணவனை பெருமையுடன் தன் அருகமர்த்திய ஆசிரியர் ஜே ஆர் இராமமூர்த்தி


உங்களைப் போல நாங்களும் வருவோம் என்று முன்னாள் மாணவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் இந்நாள் மாணவர்கள்