வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Sunday, June 26, 2011

27. முன்னாள் மாணவர் அரசூரானுக்கு நன்றி!!

எங்கள் பள்ளி (மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி)யின் உள்கட்டமைப்பு வசதிக்கு உதவுமாறு எங்கள் முன்னாள் மாணவர்களை சங்கத்தின் சார்பில் தொடர்பு கொண்டு வருகிறேன்

பள்ளியின் கட்டடங்கள் மற்றும் இதர வசதிகளை உலகத்தரத்துக்கு இல்லாவிட்டாலும் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளி தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு. அரசு உதவிபெறும் பள்ளி இது. கட்டட அமைப்புக்களை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4000 ஏழை மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். மயிலாடுதுறை நகரில் கடந்த 110 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளி இது.

பள்ளியில் புதிதாக 75,000 சதுர அடி கட்டடங்கள் கட்டப்படவேண்டும். முடிந்தால் அருகிலுள்ள வீடுகளை வாங்கி பள்ளியை விரிவு படுத்தியாக வேண்டும். மயிலாடுதுறையில் தரமான கட்டடம் கட்ட தற்போது சதுர அடிக்கு ரூ1300 முதல் 1500 வரை ஆகிறது.

அதனால் கட்டடப்பணிகளுக்கென ரூபாய் 10 கோடியும் புதிய நிலங்கள் வாங்க ரூபாய் 5 கோடியும் திட்ட மதிப்பாக இடப்பட்டு நிதி வசூலிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. எங்கள் பள்ளியில் படித்து, பள்ளியின் பால் அன்பும் பாசமும் கொண்ட முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்.

110 வருட பாரம்பரியப் பள்ளி என்பதால் எங்கள் பள்ளியின் மூத்த மாணவர்களின் தலைமுறைகளும் இப்பொழுது உலகளவில் இருக்கிறார்கள். “எங்க அப்பாவும் தாத்தாவும் மாயவரம் நேஷனல் ஹைஸ்கூல்ல தான் சார் படிச்சாங்க” என்று பெருமை பேசும் இளைஞர்கள் அதிகம்.

எங்கள் பள்ளியில் படித்து இங்க பதிவு எழுதும் இளம் பதிவர்கள் அதிகம்.

பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் பேசும் போது பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் அவர்களின் அனுபவங்களையும் நெகிழ்ச்சியான சம்பவங்களையும் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. “அப்ப மட்டும் நான் இந்த ஸ்கூல்ல படிக்கலைனா, அந்த ஆசிரியர்கள் எனக்கு அன்பாக சொல்லிக் கொடுத்திருக்காவிட்டால் இப்ப என்னால இந்த அளவுக்கு வந்திருக்கவே முடியாது சார்.. என் குடும்பம் நல்ல நிலையில் இன்று இருப்பதற்கு பெரிய்ய காரணமே அந்த பள்ளிக்கூடம் தான் சார்” என்ற வார்த்தைகளை நான் மாணவர்களிடம் கேட்காத நாளே கிடையாது.

ஒவ்வொருவரிடமிருந்து அதைக் கேட்கும் போது ஒரு கலவையான உணர்ச்சிக்குவியலே பதிலாகத் தெரியும்..


புதிய கட்டடத்திற்கான 15 கோடி ரூபாய் எப்படி நான் வசூலிப்பதென்று எனக்கு முதலில் மலைப்பாகத்தான் இருந்தது.. அப்துல் கலாம் பாணியில் கனவு மட்டும் கண்டுகொண்டிருந்தால் மட்டும் போதாது.. கண்ட கனவை நிறைவேற்ற உழைக்கவும் வேண்டும் என்பது புரிந்தது.. உலகெங்கிலும் உள்ள எங்கள் பள்ளி மாணவர்களைத் தொடர்பு கொண்டு 1500 பேரைத் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரிடமுன் 1 லட்ச ரூபாய் நன்கொடையாகப் பெற்றால் இது நிச்சயம் முடியும். 110 வருடங்களில் 7-8 தலைமுறைகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெருமையுடன் படித்துச் சென்ற பள்ளி இது. தொடர்பு கொண்டு அவர்களிடம் பள்ளி நினைவுகளில் அவர்களை ஆழ்த்தினால் நிச்சயம் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் பலரிடம் பேசி வருகிறேன்


இங்கு தமிழ்ப் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் என் நண்பர் அரசூரான் ராஜா எங்கள் பள்ளியில் 11வது மற்றும் 12வது படித்தவர். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு எங்கள் பள்ளிக்கு வந்தவர். ”நான் இரண்டு வருடங்களே இந்தப் பள்ளியில் படித்திருந்தாலும் இந்தப்பள்ளிக்கு நான் முழுமையாகக் கடன்பட்டிருக்கிறேன் அண்ணே.. ” என்று அடிக்கடி என்னிடம் சொல்லி பெருமைப் பட்டிருக்கிறார்

சென்ற வருடம் நான் அவரிடம் பேசியபோது ”என் சார்பாக நான் ரூ50,000 தருகிறேன் அண்ணே” என்று உடனடியாக வாக்கு தந்தவர். அதற்கு பின் மற்ற மாணவர்களிடம் பேசினாலும் நானே முன்வந்து அரசூரானுக்கு அவரது வாக்குறுதியை நினைவுறுத்தவில்லை.. எங்கள் பள்ளி மாணவர்கள் நினைவூட்டினால் தான் தருவார்கள் என்பது கிடையாதென்று எனக்குத் தெரியும்.

சனிக்கிழமை அரசூரானிடமிருந்து ஒரு ஃபோன். அவர் தற்போது வட அமெரிக்காவில் வசிக்கிறார். விடுமுறைக்கு இந்தியா செல்வதுண்டு.

“அண்ணே மாயவரம் போயிட்டு இப்பத்தான் வந்தேண்ணே !”

“என்ன ராஜா ..ட்ரிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா?”

“நல்லாயிருந்திச்சிண்ணே..”

இப்பத்தான் ப்ளேன்ல இருந்து வந்து இறங்கியிருக்காரு.. இன்னும் களைப்பாயிருப்பாரு.. நாம ஆரம்பிக்க வேண்டாமென்று ஒரு மனது சொன்னாலும்.. இன்னொரு மனது கேட்கவில்லை..

“ரொம்ப பிஸியா இருந்திருப்பீங்க அங்க.. நம்ப ஸ்கூல் பக்கம் போயிட்டு வந்தியா ராஜா..” - கொஞ்சம் தயக்கதுடன் தான் கேட்டேன்..

“வெள்ளிக்கிழமை போயிருந்தேண்ணே.. கிளம்பறதுக்கு முதல் நாள் தான் கொஞ்சம் நேரம் கிடைச்சது.. போய் ஹெட் மாஸ்டரைப்பார்த்து நம்ம பள்ளி கட்டட நிதிக்காக நான் சொன்னமாதிரி ரூபாய் 50000 காசோலை கொடுத்திட்டேன் அண்ணே..” - அப்படீன்னாரு...

ரொம்ம மகிழ்ச்சியா இருந்தது.. சொல்லி ஒரு வருடம் ஆனது. நான் எந்தவிதமான நினைவூட்டலும் செய்யவில்லை.. தான் அங்கு போயிருந்த போது மறக்காமல் பள்ளிக்குச் சென்று காசோலை தந்து வந்தது .. இது தான் எங்கள் பள்ளி எங்கள் எல்லோருக்கும் கற்றுத் தந்தது..

இரண்டுவருடங்கள் மட்டுமே எங்கள் பள்ளியில் படித்திருந்த மாணவருக்கே இவ்வளவு பாசமிருந்திருந்தால் ஒன்றாம் வகுப்பிலிருந்தோ, ஆறாம் வகுப்பிலிருந்தோ 7 முதல் 12 வருடங்கள் படித்த மாணவர்களுக்கு எவ்வளவு பாசமிருக்கும் !!

நான் அந்தப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 7 வருடங்கள் படித்தேன்.. எல்லோர் ஆதரவிலும் நான் எடுத்துள்ள இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்னும் என் நம்பிக்கை விருட்சமாக என்னுள் வளர்கிறது !!!

பள்ளியின் அனைத்து மாணவர்கள் சார்பாக.. என் அன்பு நண்பர் அரசூரான் ராஜா-சுஜா தம்பதிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..