நம் தாயின் புன்னகை...

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Wednesday, March 14, 2012

35. பரீட்சை பேப்பரேய்ய்! - ஆயில்யன்

வாத்தியாரு புல்லட்டை விட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா! பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு!எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும்டோய்ய்ய்ய்!

அலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு காலையில வாராம எஸ்கேப்பாகிடுவான்.வூட்டுக்குபோயிடலாமான்னு ஒரு நினைப்பு வந்துடும்! ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும்தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட்லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு! அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது!



சரி வர்றது வரட்டும்ன்னு, நல்லா ஜம்முன்னு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணிவைச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூட்க்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா - பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர்கட்டோட எண்ட்ரீ போடுவாரு - அந்த டைமிங்கல கடைசி நேரத்துல க்ளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாகஅமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட - அப்படி எதுவுமே நடக்காம படம்ரீலிசு ஆகறமாதிரி வாத்தியாரு வந்துப்புடுவாரு! வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூடஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னாஅடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னா”க்களுக்கு கனாகண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும்! [எனக்குமட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]

சரி இனி நடப்பது நடந்தே தீரும் அப்படின்னு மனசை தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிசமே ஒரு டெரரான நினைப்பு வந்துகுந்தும் பாருங்க! அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்க்கோமே அப்புறம் என்னடா தம்பி பயம் அனேகமாநாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம் நல்லவேளை நம்ம இங்கீலிசு மீடியத்துல போயி படிக்கல - பொம்பள புள்ளைங்ககிடையாது - ஸோ நாமதான் ஃபர்ஸ்ட்டு மார்க் அப்படின்னு திரும்பவும் ஒரு குட்டி கனவு!

பலிச்சிருச்சான்னு இண்ட்ரஸ்டாயிட்டீங்க போல (ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுலடிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்கவீணாக்குவேன்!?)

சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்!

குட் வெரிகுட் இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார் அப்படின்னு அன்பா அனுப்பி வைத்தஅந்த வாத்தியாரு இன்னும் கண்ணுல நிக்கிறாங்க - தெய்வம் ! :)


டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா,திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!

Sunday, March 4, 2012

34. பள்ளி ஆண்டுவிழா தொகுப்பு - புகைப்படங்கள்



ஆண்டு விழா 23-02-2012 வியாழக்கிழமை மாலை 3.00 மணி அளவில் பள்ளி வழிபாட்டரங்கில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தாளாளர் திரு. J. R. இராமமூர்த்தி அவர்கள் தலைமை உரை ஆற்றவும் , தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் திரு. K. இராஜேந்திரன் அவர்கள் ஆண்டறிக்கை வாசிக்கவும் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களான Er. திரு. M. கோபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.

மாணவரும், சிறப்பு விருந்தினருமான திரு. G. வெங்கடசுப்பிரமணியன், (Project Director, Mettupakkam Foundations Pvt. Ltd., Chennai) ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மலரினை பள்ளியின் உதவித்தலைமையாசிரியர்கள் திருமதி. H. நிர்மலா அவர்களும் திரு. S. அண்ணாதுரை அவர்களும் பெற்று கொண்டனர். திரு. G.மதியரசன் அவர்கள் வாழ்த்துச் செய்திகளை வாசித்தார்.


நம் பள்ளியில் 25 ஆண்டு பணி முதிர்வு பெற்ற ஆசிரியர்கள் திரு. S. விஜயரெங்கன் மற்றும் நல்லாசிரியர் திரு. G. மதியரசன் ஆகியோருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


2010-2011 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச்செய்த 33 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சார்பாக
நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. R. ஜெயசங்கர், Prop. K.S.M. & R.V.V. Whole sale, அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். ரூ. 30000 மதிப்புள்ள பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களால் நிகழத்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

விழா நிகழ்ச்சிகளை திரு. T. குலசேகரன் மற்றும் திருமதி M. அபிராமிதேவி மற்றும் திரு. D. கலைச்செழியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதுகலை உதவித்தலைமையாசிரியர் திரு கே. பத்மனாபன் அவர்கள் நன்றியுரை ஆற்றவும் நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.



புதிய வகுப்பறை (Shri. S.K. Hall) கட்டிட திறப்பு விழா

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். பெற்றோர் ஆசிரியர் கழக கட்டிட வளாகத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. M. கணேசன், Bank of America, U.S.A., அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட ரூ. 5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம்) மதிப்புள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஓய்வு பெற்ற பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் நல்லாசிரியர் திரு S. கிருஷணமூர்த்தி B.A., B.Sc., B.Tஅவர்களது நினைவாக Shri. S.K. Hall என்ற பெயரில் அன்னாரது துணைவியார் திருமதி கமலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். முன்னதாக முதுகலை தமிழாசிரியை திருமதி வி. அபிதகுஜாம்பாள் அவர்கள் திருக்குறள், கடவுள் வாழ்த்து பாக்களைப் பண்ணுடன் இசைத்தார். திரு S.K அவர்களின் புதல்வர் திரு K. முத்துராஜகோபால் அவர்களும், புதல்வி திருமது K.துர்கா ரமணி அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.





பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு வாஜபேயர் அவர்களது நினைவாக அன்னாரது புதல்வர் பள்ளி வளர்ச்சிநிதிக்கு ரூ 10,001 அளித்து உதவினார். பள்ளியின் முன்னாள் மாணவரும், ஆஸ்த்துமா மற்றும் அலர்ஜி சிறப்பு மருத்துவருமான Dr. திரு. ஸ்ரீதரன் M.D. அவர்கள் பள்ளிக் கட்டிட நிதிக்காக ரூபாய் 10,001 அளித்து உதவினார். விழாவில் பள்ளித் தாளாளர் திரு JR இராமமூர்த்து அவர்கள் தலைமையேற்கவும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு M. கோபாலன் அவர்கள், திரு ஸ்ரீதரன் அவர்கள், திரு வி.கிருபாநிதி அவர்களுடன் பள்ளித்தலைமையாசிரியர், நல்லாசிரியர் திரு கே.இராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். விழாவிம் போது பள்ளியின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.



Tuesday, February 21, 2012

33. நம் பள்ளி ஆண்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் !!

நமது பள்ளியின் 112 வது ஆண்டுவிழா நாளை மறுநாள் (பிப்ரவரி 23, வியாழக்கிழமை நம் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் G.வெங்கடசுப்ரமணியன், R.ஜெயசங்கர் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்.

நம் பள்ளி ஆண்டு விழா மலர் வெளியீடு, பள்ளியில் 25 ஆண்டுகள் பணிமுடித்த எங்கள் அன்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்குதல், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெறுகிறது.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.






அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுமாய்க் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்..

Thursday, February 16, 2012

32. கல்விக் குற்றவாளிகள் ‍-- நன்றி விகடன்

இந்த கல்வி வியாபார நிறுவனங்களை விட எங்கள் மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி பல கோடி மடங்குகள் சிறந்ததென்பதில் எங்களுக்கு ஐயமில்லை

ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்

கல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து அரங்கேறி வரும் அவலங்களைப் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மேலிடுகிறது.

பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையிலேயே கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற மாணவன்; உடன் பழகிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளைச் சூறையாடிய மாணவர்கள்; 'பஸ் தினம்' என்ற பெயரில் அரசுப் பேருந்துகளின் மீது கல்லெறிந்து நாசமாக்கி, பொதுமக்களையும் போலீஸாரையும் காயப்படுத்திய மாணவர் கூட்டம்... இவை எல்லாமே, அடுத்தடுத்து வெளியான செய்திகள். இதே நாட்களில்தான், படிப்பின் மீது கொண்ட விரக்தி, பயம் காரணமாக மாணவன் ஒருவன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட தகவலும் வெளியாகி இருக்கிறது.



'இங்கேதான் தவறு' என்று இடம்சுட்டிப் பொருள் விளக்க முடியாத அளவுக்கு கல்வித் தாயின் உடலெங்கும் புரையோடிப்போய் இருக்கின்றன கண்மூடித்தனமான காயங்கள். ஒழுக்கம் என்பது கற்பவர்களுக்கு மட்டுமல்ல... கற்பிக்கும் ஆசான்களுக்கும் அதிஅவசியம் என்பதுதான் காலம் காலமாக இருந்துவந்த நிலைமை. ஆனால், அரசாங்கம் தொடங்கி, கல்விக்கூடங்கள் வரையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களில் எதுவுமே ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை. அவையும்கூட, மதிப்பெண் சார்ந்தவையாகவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சாமர்த்தியம் சார்ந்தவையாகவும் மாறிப்போயிருக்கின்றன!

இன்னொரு பக்கம், புகழ்பெற்ற பல தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மட்டுமல்ல... அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் மரியாதையும்கூட ரொம்பவே சிறுத்துப்போய் இருக்கிறது!

மாணவனின் வாழ்க்கை என்பது அவன் வாங்கும் மதிப்பெண்களில் மட்டும் ஊசலாடும் விதமாகக் கல்விமுறையை வைத்திருப்பதால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட, அவன் வாழ்க்கையே அறுந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டதுபோல பெற்றோர் காட்டும் பதற்றம், அப்படியே மாணவர்களையும் தொற்றிக்கொள்கிறது.

'பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் வெற்றி காட்டாவிட்டால், எங்கள் கல்வி நிலையத்தின் வியாபாரம் கெட்டுவிடும்' என்று வெளிப்படையாகச் சொல்லியே மாணவர்களை வெளியேற்றும் சீர்கெட்ட கல்விமுறைதானே, ஒரு பாவமும் அறியாத அந்த ஆசிரியை உயிரை இன்று விலையாகக் கேட்டுவிட்டது? கல்விக்குக் கொட்டிக் கொடுப்பதைக் குடும்பத்தின் கௌரவமாகவும்... கை நிறைய குழந்தையின் செலவுக்குக் கொடுப்பதைத் தங்கள் குற்ற உணர்வுக்கான வடிகாலாகவும் நினைக்கிற பெற்றோரும் அல்லவா இந்தப் பாவத்தின் பங்குதாரர்கள்?

தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த நடைமுறை புத்திசாலிகளையும் ஒழுக்கச் சீலர்களையும் உழைப்பாளிகளையும் குழந்தைகளுக்கு உதாரணம் காட்டத் தவறுவது கல்விக்கூடங்கள் மட்டுமா... பெற்றோரும்தானே? பொய் சொல்லாத அரிச்சந்திரனைப் பற்றியோ, தர்மம் தவறாத தருமரைப் பற்றியோ, அகிம்சையே உருவான மகாத்மா காந்தியைப் பற்றியோ நினைப்பதற்காவது இவர்களுக்கு நேரம் இருந்தால்தானே, குழந்தைகளோடு வாய்விட்டுப் பகிர்ந்துகொள்வதற்கு!

'நீதி போதனை' வகுப்புகளை முற்றிலுமாக இழுத்து மூடிவிட்ட நாம், மதிப்பெண் குவிக்கும் சூத்திரங்களை மட்டுமே வாழ்க்கையின் சாத்திரங்களாக இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்கப்போகிறோம்? புத்தியைத் தீட்ட வேண்டிய தெய்வீகப் பட்டறையில் கத்தியைத் தீட்டியது அந்த மாணவனின் தவறல்ல... முழுக்க முழுக்க இன்றைய கல்விமுறையின் குற்றம்தான் என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறோம்?

அரசாங்கம், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரின் நோக்கும் போக்கும் ஒரே நாளில் நேராகிவிடும் என்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கு இன்றில் இருந்தாவது நம் பார்வையைச் சீராக்கி, நேராக்கிக்கொள்ள மாட்டோமா?!

இந்தச் சூழ்நிலையில், எங்கள் பள்ளி ஆசிரியர்களையும், முன்னாள், இந்நாள் மாணவர்களையும் அவர் தம் நல்லொழுக்கத்தினையும் எண்ணிப் பெருமையுறுகிறோம்

Tuesday, January 31, 2012

31. எங்கள் பள்ளியின் பெருமை மிகு வேதியியல் ஆசிரியர் திரு கே.பி


மயிலாடுதுறை அருகே நீடூர் கடுவங்குடியில் உள்ள தீன் கலை அறிவியல் கல்லூரியில் உலக வேதியியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் டி.எஸ்.ஏ ரபியுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி கவுரவத்தலைவர் ஜலாலுதீன், நீடூர் அரபிக் கல்லூரி தலைவர் நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வாசுதேவன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கல்வித்துறையில் சிறந்த வேதியியல் பணியாற்றியதற்காகநாகை ஏ.டி,எம் கல்லூரி வேதியியல் பிரிவு தலைவர் பேராசிரியை மதுராம்பாள்,மயிலாடுதுறை டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர்பத்மநாபன், மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நடராஜன் ஆகியோருக்கு ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் தலைவர் சி.செந்தில்வேல் விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் பேங்காக் தமிழ் முஸ்லிம் அமைப்பின் தலைவர் சலாலுதீன், மயிலாடுதுறை டி.பி.டி.ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.ராஜேந்திரன், உதவி தலைமையாசிரியர் காஞ்சிநாதன், நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிவக்குமார், செல்வக்குமார், பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், வினோத்குமார், சுகந்தவல்லி, குணசுந்தரி, கங்காதேவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை கல்யாணி நன்றி கூறினார்.













30. எங்கள் பள்ளியில் குடியரசு தின விழா - 2012 - மயிலாடுதுறை

இந்த வருடத்தின் 63-வது இந்திய குடியரசுதின விழா நம் பள்ளியின் மைதானத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டு பணி நிறைவைப் பெற இருக்கும் நம் பள்ளியின் பதிவு எழுத்தர் திரு செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். திரு செல்வராஜ் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் திரு கே ராஜேந்திரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.


பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவேறியது.






Sunday, July 31, 2011

29. மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி புதிய கட்டட மாதிரிப் படங்கள்

எங்கள் பள்ளி (மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி)யின் உள்கட்டமைப்பு வசதிக்கு உதவுமாறு எங்கள் முன்னாள் மாணவர்களை சங்கத்தின் சார்பில் தொடர்பு கொண்டு வருகிறேன்

பள்ளியின் கட்டடங்கள் மற்றும் இதர வசதிகளை உலகத்தரத்துக்கு இல்லாவிட்டாலும் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளி தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு. அரசு உதவிபெறும் பள்ளி இது. கட்டட அமைப்புக்களை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4000 ஏழை மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். மயிலாடுதுறை நகரில் கடந்த 110 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளி இது.

பள்ளியில் புதிதாக 75,000 சதுர அடி கட்டடங்கள் கட்டப்படவேண்டும். முடிந்தால் அருகிலுள்ள வீடுகளை வாங்கி பள்ளியை விரிவு படுத்தியாக வேண்டும். மயிலாடுதுறையில் தரமான கட்டடம் கட்ட தற்போது சதுர அடிக்கு ரூ1300 முதல் 1500 வரை ஆகிறது.

அதனால் கட்டடப்பணிகளுக்கென ரூபாய் 10 கோடியும் புதிய நிலங்கள் வாங்க ரூபாய் 5 கோடியும் திட்ட மதிப்பாக இடப்பட்டு நிதி வசூலிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. எங்கள் பள்ளியில் படித்து, பள்ளியின் பால் அன்பும் பாசமும் கொண்ட முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டவண்ணம் இருக்கின்றேன்..

புதிட கட்டடத்துக்கான மாதிரி படங்கள்.. கட்டி முடித்தபின் எங்கள் பள்ளியின் கனவு கட்டடங்கள் இவ்வாறு இருக்கும் என விழைகிறேன்..

பள்ளியின் முகப்பில் இருக்கும் பெரியவர் தான் கோமல் சீனுவாச ஐயங்கார். 1901 ம் ஆண்டு எங்கள் பள்ளியை நிறுவி அதன் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்தவர். அப்பொழுது எங்கள் பள்ளி அமைந்திருந்த கூரைக் கொட்டகை ஒரு விபத்தில் தீப்பிடித்து எரிந்த போது, பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தன் இல்லத்தையே தந்தவர். அவரும் அவர் மனைவியும், குழந்தைகளும் அவர் வீட்டு மாட்டுக் கொட்டகையில் தங்கி சமைத்து சாப்பிடும் போது பள்ளி வகுப்புகள் அவர் இல்லத்தினுள் தொடர்ந்தன. அவரின் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகத்தினால் மட்டுமே எங்கள் பள்ளி மாணவர்கள் 110 வருடங்களாக சிறந்த முறையில் பயின்று வந்திருக்கின்றனர். தற்போது பள்ளியில் இருப்பது அவரது ஒரு படம் மட்டுமே. பள்ளி கட்டடம் நிறைவுற்றதும், அவரது மார்பளவிலான வெங்கலச் சிலையினை பள்ளி வளாகத்தினுள் என் சொந்த செலவில் அமைத்து அவர் தம் தியாகத்தினை எழுதி வைக்க வேண்டுமென்பது என் அவா. அவர் தம் வாரிசுகள் எங்கிருக்கின்றனர் என் நான் அறியேன்.. தேடிக்கொண்டிருக்கிறேன்.. கிடைத்தால் அவர்களையும் அழைத்து கௌரவிக்க வேண்டும் என்பது என் ஆசை..