வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Thursday, July 15, 2010

18. இந்த வார குமுதத்தில் எங்கள் பள்ளி மாணவர் சீதாராமன்

லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் தமிழின் புகழ் உலகெங்கும் பறந்து கொண்டிருக்க,தஞ்சாவூரில் பிறந்த ஒரு தமிழரின் புகழ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆர்.சீதாராமன். இன்று இவரது கட்டுப்பாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. கத்தார் நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான தோஹா பேங்க்கின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன்.வங்கித் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியதற்கான உலக விருதை,சென்ற மாதம் பெற்றிருக்கிறார் சீதாராமன்.

பிறந்தது தஞ்சாவூர் அருகே உள்ள தரங்கம்பாடியில்.அப்பாவுக்கு ஆசிரியர் வேலை.சீதாராமனையும் சேர்த்து நான்கு குழந்தைகள்.சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தியிருக்கிறார்கள்.பிறகு வேலை விஷயமாக குடும்பம் மும்பை சென்று விட,சீதாராமனும் அவரது இன்னொரு சகோதரரும் மயிலாடுதுறை இலவச ஹாஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்கள். ‘அங்க தங்கிப் படிச்சா, எங்க ரெண்டு பேரோட செலவு அப்பாவுக்கு குறையுமேனு இங்க தங்கினோம்’ என்கிறார். இன்று லண்டன், பாரீஸ், நியூயார்க் என்று உலகப் பெருநகரங்களுக்குப் பறந்து கொண்டிருக்கும் சீதாராமன். மயிலாடுதுறையில் பள்ளிப் படிப்பு, பிறகு பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.காம் படிப்பு.

“எங்கம்மா எங்ககிட்ட சொன்னதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ‘நல்லா படிங்க, படிப்புதான் வாழ்க்கையை உயர்த்தும், எப்பவும் உங்களைவிட்டுப் போகாது’ இதைத்தான் சொல்வாங்க’’ என்கிறார் சீதாராமன். தாய் சொல்லைத் தட்டாமல் படித்த சீதாராமன் சி.ஏ.படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு கம்பெனியாக பணியாற்றி, வளர்ந்து, உயர்ந்து இன்று அரபு நாடுகளின் மிக முக்கியமான வங்கியான தோஹா வங்கியின் தலைமைப் பொறுப்பு.

சமீபத்தில் தோஹா சென்றிருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் சீதாராமனைச்சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.அங்கு நடந்த விழாவில் சீதாராமனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனும் கலந்து கொண்டிருக்கிறார்.

“சீதாராமனை நான் முன்பு பல முறை சந்தித்தும் அவர் சாதனைகளைக் கேள்விப்பட்டு இருந்தாலும் தோஹாவில் அவரைச் சந்தித்து சாதனைகளை நேரில் கண்டபோது வியந்து போனேன். வங்கித் துறையில் அவர் சாதித்த சாதனைகள் பிரமிக்க வைத்தன.அந்நாட்டு அரசாங்க அதிகாரிகளும் பிரமுகர்களும் பாராட்டிய விதமே அதற்கு உரைகல். வெளியே மட்டுமல்ல அவரது இல்லமும் பிரமிக்க வைக்கிறது. அந்த வீட்டைக் காண ஆயிரம் கண் வேண்டும்.அதை ஒரு அருங்காட்சியகமாகவே அலங்கரித்து வைத்திருக்கிறார் அவரது மனைவி. எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள அருங்கலைப் பொருளை தேடிக் கொண்டு வந்து விடுகிறார்.விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு இலக்கணம் சீதாராமன் தம்பதியினர்.வங்கித் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளையும் அவர் பெற்ற விருதுகளையும் பட்டியலிட முடியாது. ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளியிலும் சீதாராமனின் பேச்சாற்றல் அழகுமிக்கது’’ என்று சீதாராமனின் நல்ல குணங்களைப் பட்டியலிடுகிறார் நீதியரசர்.

இன்று உலகமெங்கும் சுற்றினாலும் தனது ஆதார வேர்களை மறந்துவிடவில்லை சீதாராமன்.அவருக்கு கல்வி தந்த பள்ளிக்கு நிதியுதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்.கண் பார்வையற்ற நாற்பது மாணவர்களைத் தனது சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.

“பணமில்லாமல், வசதியில்லாமல் ஒரு மாணவனின் எதிர்காலம் தடைப்பட்டுவிடக்கூடாது என்று கருதுகிறேன். அதனால் கல்விக்கு அதிக உதவிகள் செய்கிறேன்’’ என்கிறார் சீதாராமன்.

கல்வி ஒருவரை எந்த அளவு உயர்த்தும் என்பதற்கு இந்த தமிழர் சாட்சி.



நன்றி: குமுதம் வார இதழ்


6 comments:

அபி அப்பா said...

\\http://dbtrnhss.blogspot.com/2010/03/12.html\\

திரு.சீதாராமன் அவர்களை பற்றி இதே வலைப்பூவில் சீமாச்சு அண்ணா அவர்கள் எழுதிய பதிவை மேலே இருக்கும் இனைப்பில் படிக்கவும்.

மிகவும் பெருமையாக இருந்தது திரு.சீதாராமன் அவர்கள் பற்றிய குறிப்புகள் செய்திகள் "சாதனை தமிழர்" தலைப்பில் குமுதத்தில் பார்த்த போது.

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Arun Nishore said...

I would like to contribute for the new building fund....kindly provide me the details to nishore.bhaskaran@gmail.com

Thanks,
Arun

a said...

நம்ம பள்ளி மாணவர் பற்றி படிக்கயில் சந்தோசமாக இருக்கிறது...

மதுரை சரவணன் said...

//நல்லா படிங்க, படிப்புதான் வாழ்க்கையை உயர்த்தும், எப்பவும் உங்களைவிட்டுப் போகாது’ இதைத்தான் சொல்வாங்க’’ என்கிறார் சீதாராமன்.//

thanks for sharing.

பனித்துளி சங்கர் said...

நழுவி செல்லும் நம்பிக்கையை மீண்டும் இழுத்துக் கட்டிக்கொள்கிறது உணர்வுகள்.!
இந்தப் சாதனை தமிழனை பற்றி வாசிக்கும்பொழுது அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே