வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Wednesday, September 1, 2010

தமிழய்யா முனைவர்.திரு.இராமபத்திரன் பரிமளரங்கனிடம் இணைந்தார்!!!


*** மேலே முன்பு இருந்த படம் மாற்றப்பட்டுள்ளது ***

காலை அந்த செய்தி வந்தபோது ஒரு நிமிடம் மூச்சு நின்று போனது. தமிழய்யா முனைவர் திரு இமாமபத்திரன் உலக வாழ்வில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு வைகுண்டம் அடைந்தார் என்கிற செய்தி இடியாய் தாக்கியது.

அவர் பாடம் நடத்தும் பாங்கும், தனிமனித ஒழுக்கமும், அவரின் நேர்மையான உழைப்பும், தான் செய்த வேலையை வேலையாக நினைக்காமல் தன் கடமையாக நினைத்த குணமும், அவர் கம்பரை, கம்பரின் தமிழை காதலித்த அழகும், பலமொழி புலமையும், நன்றி மறவா குணமும் நினைவில் வந்து வந்து போயின.

அவர் தன் கடைசி காலத்தில் தன் மகன் வீட்டில் புதுச்சேரியில் வசித்தாலும் தன் கடைசி விருப்பத்தின் பொருட்டு ரங்கன் காலடியில், காவிரியின் மடியில் கரைய ஆசைப்பட்ட காரணத்தால் அன்னாரின் உடல் அவர் வாழ்ந்த பரிமள ரங்கநாதர் சன்னதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. என் வீட்டில் இருந்து அவர் வீட்டுக்கு கிளம்பி வரும் வழியில் எங்கள் பள்ளியை பார்த்தேன். களை இழந்து காணப்பட்டது. வாசலில் ஒரு கரும்பலகையில் அவரது மறைவு செய்தி எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

கிருஷ்ணஜெயந்தி என்று கூட பார்க்காமல் ரங்கன் தன் நடையை சாத்திகொண்டு துக்கம் அனுஷ்டித்தான். ரங்கனை சேவிக்க சந்தோஷமாக வந்த கூட்டம் இராமபத்திரன் அய்யாவின் மறைவை கேட்டு அதிர்ந்தது."கண்ணன் பிறந்தநாள் இந்த அஷ்டமி திதியில் அய்யா போய் அவனுடன் சேர்ந்தது மிகவும் பொருத்தமான நிகழ்வு" என்றே அங்கே இருந்த அத்தனை பேரும் முணுமுணுத்தனர்.

எங்கள் பள்ளி முன்னாள் தாளாளர் டாக்டர் வெங்கட்ரமணன் முதல் தற்போதைய தாளாளர் எங்கள் ஆசிரியர் திரு. ஜே.ஆர்.ஆர், முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி.புஷ்பவள்ளி, தற்போதைய தலைமை ஆசிரியர் திரு. கே.ஆர், உதவி தலைமை ஆசிரியர் திரு. கே.பி உட்பட அனைத்து ஆசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் என அந்த ரங்கனின் சன்னதியே ஒரு வித இறுக்கமான சூழ்நிலையில் குழுமியிருந்தது.

அய்யாவை போய் பார்த்தேன். ஒரு கண்ணாடி பெட்டியில்.... அந்த ஸ்ரீரங்கம் ரங்கனின் கம்பீர சயனமா? குடந்தை சாரங்காவின் எழுந்தமாதிரி ஆனால் எழாமல் நடிக்கும் சயனமா? சுகவாசி மாயவரம் பரிமள ரங்கனின் சயனமா என தெரியாத அளவு "நான் இந்த உலகில் சாதிக்க வந்ததை சாதித்து விட்டு நிம்மதியாய் ரங்கனின் பாதம் பணிந்தேன்" என்கிற ஒரு கர்வமான மந்தகாச புன்னகையோடு அதே மாயவரத்தான் வேஷ்டி என சொல்லுவார்களே அந்த பட்டை மயில்கண் காரிகன் பஞ்சகச்சம், தோளில் ஆண்டாள் மாலை மாதிரி அதே பட்டை மயில்கண் சிகப்பு பச்சைகரை உருமா, நான்கு நாட்கள் முள்வெள்ளை மழிக்கப்படாத முகம், அதே கம்பீரம்....

பக்கத்தில் அய்யாவின் பாரியாள், மகள், மகன்...

"மூணு வருஷம் முன்னே அப்போலோவில் சேர்த்த போது டாக்டரம்மா (டாக்டர் டெல்பின் விக்டோரியா அம்மா) ரொம்ப உபகாரமா இருந்தாங்க. ரொம்ப கடமைப்பட்டிருக்கோம்" - இது அய்யாவின் மனைவி!

எனக்கு சிலிர்தது. இந்த நேரத்தில் இந்த நன்றி என்னும் வார்த்தை சொல்ல வேண்டுமா என்ன? அய்யாவின் குணம் அங்கே பிரதிபலித்தது.

வெளியே வந்தேன். அவருடைய தம்பி திரு. அரங்கநாதன் தமிழய்யா(எங்கள் பள்ளி தான்) வந்து என் கையை பிடித்து கொண்டு எதும் சொல்லாமல் அப்படியே நின்றார். அவர் கண்களில் கண்ணீர். நானும் கசிந்தேன். "வாசன் அப்பா கார்த்தால வந்துட்டு போனார். உங்க அப்பா இப்போதான் வந்துட்டு போனார்" என்றார். மயிலாடுதுறை சிவாவின் அப்பா அங்கே தான் இருந்தார்.

நினைத்து பார்க்க பிரம்மிப்பாக இருந்தது. நாங்கள் எல்லோரும் அவரிடம் படித்தோம். ஆனால் அதையும் மீறி எங்க குடும்பம் எல்லாம் கூட அவருக்காக வருகின்றது அங்கே அவர் குடும்ப துக்கத்தில் பங்கெடுக்க. காரணம் அவர் ஆசிரியர் என்பதுக்கும் மேலாக அவரிடம் படித்த மாணவர்களை நடத்திய விதம் தான்.

திரும்ப வீட்டுக்கு வரும் போது நகராட்சி மேல்நிலைப்பள்ளி வழியாக வந்தேன். வாசலில் கரும்பலகையில் "எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்..." என குறிப்பிட்டு அய்யாவின் மறைவு செய்தி எழுதி வைக்கப்பட்டு இருந்தது. என்ன தான் அவர் எங்கள் பள்ளியின் மாபெரும் ஆசிரியராக இருந்தாலும் அந்த பள்ளிக்கு மாணவர் தானே 60 வருடம் முன்பாக! அதான் டெல்லிக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளை தானே! அவரைப்போலவே அவர் படித்த பள்ளிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்தேன் இப்படிப்பட்ட ஒரு ஆசிரியரை எங்கள் பள்ளிக்கும் எங்களுக்கும் தந்தமைக்காக!

அய்யாவின் ஆன்மா ஆண்டவனிடத்தில் அமைதியடையட்டும்!

12 comments:

அபி அப்பா said...

அய்யாவின் மற்ற புகைப்படங்களை இதற்கு முந்தைய சீமாச்சு அண்ணாவின் பதிவில் பார்க்கவும்!

பழமைபேசி said...

அன்னாரது புகழ் என்றும் வாழும்!!!

துளசி கோபால் said...

தமிழய்யாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நேரா பெருமாளிடம் போயிருப்பார்.

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த அஞ்சலிகள்.

natpu valai said...

மிக மிக வருத்தமாக இருக்கிறது.மிக அற்புதமான மனிதர். என் தந்தையாரின் இனிய நண்பர்.அவரின் ஆத்மா சாந்தியடைய பெருமாளை பிராத்திக்கிறேன்.

ஆயில்யன் said...

ஆழ்ந்த அஞ்சலிகள் :(

மயிலாடுதுறை சிவா said...

அய்யாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

மன வருத்ததுடன்

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

எளிமையான மனிதர்! இவரைப்போன்றவர்கள் இறந்தும் மனத்தில் வாழ்வார்கள்.
ஷைலஜா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணல் இராமபத்ரன் ஐயாவுக்கு கரம் கூப்பி அடியேன் அஞ்சலி!
அண்ணலின் தமிழும், பெருமாள் மீதான இறையன்பும் என்றும் வாழும்!

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்காள்
வாழ்மின் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்

படிக்கேழ் இல்லாப் பெருமாளைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்

முடிப்பான் சொன்ன ஆயிரத்துள்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்

பிடித்தார் பிடித்தார்
(இராமபத்திரன் பிடித்தார் பிடித்தார்)
வீற்றிருந்து
பெரிய வானுள் நிலாவுவரே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்!

மாயவரத்தான் said...

அய்யாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

தயவு செய்து மேலே உள்ள புகைப்படத்தை நீக்கிவிடுங்களேன்!

அபி அப்பா said...

மன்னிக்கவும்! ஒரு அறியாமையில் அந்த புகைப்படம் போடப்பட்டு விட்டது. நடந்த தவறுக்கு மன்னிக்கவும்!இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

SATHIYA said...

ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய அந்த ஆண்டவணை வேண்டுகிறேன்