எங்கள் பள்ளி (மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி)யின் உள்கட்டமைப்பு வசதிக்கு உதவுமாறு எங்கள் முன்னாள் மாணவர்களை சங்கத்தின் சார்பில் தொடர்பு கொண்டு வருகிறேன்
பள்ளியின் கட்டடங்கள் மற்றும் இதர வசதிகளை உலகத்தரத்துக்கு இல்லாவிட்டாலும் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளி தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்பது என் நீண்டநாள் கனவு. அரசு உதவிபெறும் பள்ளி இது. கட்டட அமைப்புக்களை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4000 ஏழை மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். மயிலாடுதுறை நகரில் கடந்த 110 வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பள்ளி இது.
பள்ளியில் புதிதாக 75,000 சதுர அடி கட்டடங்கள் கட்டப்படவேண்டும். முடிந்தால் அருகிலுள்ள வீடுகளை வாங்கி பள்ளியை விரிவு படுத்தியாக வேண்டும். மயிலாடுதுறையில் தரமான கட்டடம் கட்ட தற்போது சதுர அடிக்கு ரூ1300 முதல் 1500 வரை ஆகிறது.
அதனால் கட்டடப்பணிகளுக்கென ரூபாய் 10 கோடியும் புதிய நிலங்கள் வாங்க ரூபாய் 5 கோடியும் திட்ட மதிப்பாக இடப்பட்டு நிதி வசூலிக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. எங்கள் பள்ளியில் படித்து, பள்ளியின் பால் அன்பும் பாசமும் கொண்ட முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டவண்ணம் இருக்கின்றேன்..
புதிட கட்டடத்துக்கான மாதிரி படங்கள்.. கட்டி முடித்தபின் எங்கள் பள்ளியின் கனவு கட்டடங்கள் இவ்வாறு இருக்கும் என விழைகிறேன்..
பள்ளியின் முகப்பில் இருக்கும் பெரியவர் தான் கோமல் சீனுவாச ஐயங்கார். 1901 ம் ஆண்டு எங்கள் பள்ளியை நிறுவி அதன் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்தவர். அப்பொழுது எங்கள் பள்ளி அமைந்திருந்த கூரைக் கொட்டகை ஒரு விபத்தில் தீப்பிடித்து எரிந்த போது, பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தன் இல்லத்தையே தந்தவர். அவரும் அவர் மனைவியும், குழந்தைகளும் அவர் வீட்டு மாட்டுக் கொட்டகையில் தங்கி சமைத்து சாப்பிடும் போது பள்ளி வகுப்புகள் அவர் இல்லத்தினுள் தொடர்ந்தன. அவரின் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகத்தினால் மட்டுமே எங்கள் பள்ளி மாணவர்கள் 110 வருடங்களாக சிறந்த முறையில் பயின்று வந்திருக்கின்றனர். தற்போது பள்ளியில் இருப்பது அவரது ஒரு படம் மட்டுமே. பள்ளி கட்டடம் நிறைவுற்றதும், அவரது மார்பளவிலான வெங்கலச் சிலையினை பள்ளி வளாகத்தினுள் என் சொந்த செலவில் அமைத்து அவர் தம் தியாகத்தினை எழுதி வைக்க வேண்டுமென்பது என் அவா. அவர் தம் வாரிசுகள் எங்கிருக்கின்றனர் என் நான் அறியேன்.. தேடிக்கொண்டிருக்கிறேன்.. கிடைத்தால் அவர்களையும் அழைத்து கௌரவிக்க வேண்டும் என்பது என் ஆசை..
2 comments:
இந்த படங்கள் Graphics-தானே
ஆமாங்க சதீஷ்.. பள்ளியின் சிவில் எஞ்சினீயர்கள் மற்றும் ஆர்க்கிடெக்ட்கள் போட்டுத்தந்த ப்ளானிலிருந்து கிராஃபிக்ஸ் உதவியால் செய்யப்பட்ட எங்கள் கனவின் மாதிரி..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
Post a Comment