எங்க ஸ்கூலில் 1974 முதல் 1978 வரை 8, 9, 10, 11 ம் வகுப்புகளில் (அந்தக் கால old SSLC) படித்துத் தேறி இன்று அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் பெரிய பதவியில் இருப்பவர்.
நான் 2003 ல் பேசியபோது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருக்கு ஆதர்சமான ஆசிரியர் எஸ். கே அன்று அன்புடன் அறியப்பட்ட திரு எஸ். கிருஷ்ணமுர்த்தி என்ற கணித ஆசிரியர்.
“நானெல்லாம் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் சார்.. என் கிட்டே புத்தகம் நோட்டு வாங்க எல்லாம் அப்ப காசு கிடையாது சார்.. நான் நல்லாப் படிக்கிறதைப் பார்த்துட்டு எஸ். கே சார் தான் எனக்கு அகோர சாஸ்திரிகள் அற நிலைய ட்ரஸ்டுல சொல்லி எனக்கு பாடப் புத்தகங்களெல்லாம் இலவசமாக வாங்கிக் கொடுத்து என்னைக் கரை சேர்த்தவர்.. அவர் ஃபோன் நம்பர் உங்ககிட்டே இருக்கா? அவர்னா எனக்கு ரொம்ப உசிர் சார்” என்று உருகினார்.
எஸ்கே அவர்கள் அப்பொழுது தனது ஆசிரியப் பணியை முடித்து ஓய்வு பெற்று சென்னையில் தன் மகனுடன் செட்டிலாயிருந்தார்.. அவரது தொலைபேசி எண்ணையும் வீட்டு முகவரியையும் வாங்கி கணேசனிடம் கொடுத்தேன்..
“அடுத்த வருஷம் நான் வகேஷனுக்குப் போகும் போது அவசியம் எஸ்.கே சாரைப் பார்த்து நன்றி சொல்லப் போறேன்” என்று ஆனந்தமாக கண்ணீருடன் வாங்கிக்கொண்டார்.
அவரது துரதிருஷ்டம, கணேசன் லீவுக்கு சென்னை செல்வதற்கு முன் அக்டோபர் 2004ல் எங்கள் அன்புக்குரிய ஆசிரியர் காலமாகிவிட்டார்.
பள்ளியின் கட்டிட ப்ராஜெக்ட் ஆரம்பித்த போது நவம்பர் 2009ல் நான் மீண்டும் பேசியது கணேசனிடம் தான்.. கணேசன் ஸ்கூலுக்கு ஏதாவது பண் உதவி முடிந்தால் செய்யுங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தேன். அன்று மட்டும் என்னிடம் அவர் எஸ்.கே சாரைப் பற்றியும் அவர் தனக்குச் செய்த உதவிகளையும் பற்றி 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்..
“அப்ப ஸ்கூலுக்கு ஒரு க்ளாஸ் ரூம் கட்டிக் கொடுத்து விடுங்கள் .. க்ளாஸுக்கு எஸ். கே சார் பேரை வைத்து விடுவோம். சாரோட பொண்ணு துர்கா சென்னையில் தானிருக்கிறார். அவரை வரவழைத்து வகுப்பறையைத் திறந்து வைத்து விடுகிறேன் “ என்றேன்.
“எவ்வளவு சார் ஆகும்? “ என்றார் கணேசன்.
“ஒரு வகுப்பறை எப்படியும் 500 சதுர அடி கட்ட வேண்டியிருக்கும்.. 5 லட்ச ரூபாய் ஆகுமே” என்றேன்.
அடுத்த வினாடி..”எப்போ சார் வேணும்.. கொடுத்துடறேன்” என்று வாக்கு கணேசனிட்மிருந்து வந்தது.
“இப்பத்தான் நாங்க திட்ட வேலைகள் ஆரம்பித்திருக்கிறோம்.. தேவைப் படும் போது தொடர்பு கொள்கிறேன்.. நன்றி..” என்று சொல்லி முடித்தேன்..
சென்ற வாரம் அவரைத் தொடர்பு கொண்டு பள்ளிக்காகத் தொடங்கிய வங்கிப் பதிவு எண்ணைச் சொன்னேன்..
இன்று கணேசனிடமிருந்து செய்தி..
“ஒரு லட்ச ரூபாய் நம்ம ஸ்கூல் அக்கவுண்டுக்கு அனுப்பியிருக்கிறேன்... வந்து விட்டதா என்று சொல்லுங்கள்.. அது வந்த வுடன் அடுத்த வாரம் மீதம் 4 லட்ச் ரூபாய் அனுப்பி வைக்கிறேன்” என்று.
எங்கள் பள்ளி மாணவர்களின் குருபக்திக்கு மாணவர் கணேசன் முத்துகிருஷ்ணன் ஒரு பெரிய சான்று..
கணேசனுக்கும் அவர் தம் குருபக்திக்கும் எனது பெரிய வந்தனங்கள் !!
தான் மறைந்த பின்னும் தனது மாணவர்கள் மனதில் இடம் பிடித்த எனது அன்புக்குரிய ஆசிரியர் (இவர் எனக்கும் கணித ஆசிரியர்.. அவரிடம் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் நான் கணிதமும் ஆங்கிலமும் படித்திருக்கிறேன்) திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அவரது குடும்பத்தினர் பல்லாண்டு வாழ அன்புடன் பிரார்த்திக்கிறேன்..
2 comments:
nice to hear great students
Good work
Post a Comment