
நம் பள்ளி கட்டிட வேலைகளுக்காக நம் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் நன்கொடை கேட்கும் நேரங்களில் நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைய்ய நடக்கின்றன. எல்லாவற்றிலும் எனக்கு அதிகமாக போதிப்பவர்கள் குழந்தைகள் தான் !!
இந்த முறை என் க்ளீவ்லேண்ட் பயணத்தின் போது என் நெடு நாளைய நண்பர் ஜெயராஜுவையும் அவரது இரண்டு மகன்களையும் (முகுந்த், நித்தின்) சந்திக்க நேர்ந்தது.. ஜெயராஜுவையும் அவரது மனைவியையும் 10 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்.
ஜெயராஜுவும் அவரது மனைவியும் என்னுடன் முன்னாட்களில் நான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே வேலை பார்த்தவர்கள்.. 2002 வாக்கில் அவர்களுக்குத் திருமணமானவுடன் பார்த்தது. அதற்குப் பிறகு 10 வருடங்கள் சென்று இப்பொழுதுதான் மகன்களுடன் சந்திக்கிறேன்.
ஜெயராஜு ஒரிஜினலா தெலுங்கு பேசும் ஆந்திராக்காரர். ஆனால் கலந்து கட்டி தமிழ், கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளும் பேசுவார்.. நான் 1995லிருந்து செய்து வரும் நல்ல காரியங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
சிறுவன் நித்தின் என்னிடம் வந்தான்.. அவனுக்கு நேற்றுதான் (ஏப்ரல் 6) 7 வயது முடிந்திருந்தது.
“மாமா.. எனக்கு நேத்திக்குத் தான் பர்த் டே !!”
“ரொம்ப சந்தோஷம்டா ராஜா... ஹேப்பி பர்த்டே..!!”
”தேங்க்ஸ்..மாமா !!”
”எனக்கு ஒரு உதவி செய்யேன்... நீ நல்லா பர்த்டே கொண்டாடியிருப்பே...நான் என் புள்ளங்களுக்காக ஒரு ஸ்கூல் கட்டிக்கிட்டிருக்கேன்.. அதுக்கு ஒரு லட்சம் சதுர அடி கட்டணும்.. உன் பர்த்டேக்காக எனக்கு ஒரே ஒரு சதுர அடி கட்ட $35/- டாடி கிட்டேருந்து வாங்கிக் கொடேன்.....”
பள்ளிக்கூடம் கட்டறது.. சதுர அடி கணக்கு எல்லாம் 7 வயசுக் குழந்தைகிட்டே பேசறது எனக்கே ஒரு மாதிரியா இருந்திச்சி... இருந்தாலும் அவனுக்குள் அந்த விதையை ஊன்றி விடுவதில் எனக்கு ஒரு பிடிவாதம்..
“உங்க ஸ்கூலை எனக்குக் காட்டுங்களேன்..”
உடனே ஐ-போன் எடுத்து நம் பள்ளியின் வீடியோவக் காட்டினேன்.. விவரமாகக் கேள்விகள் எல்லாம் கேட்டான்..
”ஏன் எல்லாரும் தரையில உக்கார்ந்திருக்காங்க.. சேர் ..டேபிள் எல்லாம் இல்லியா உங்க கிட்டே..”
“வாங்கணும்டா ராஜா...”
“உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்..?”
“3.5 மில்லியன் டாலர் வேணும்.. முப்பத்தஞ்சு .. முப்பத்தஞ்சு டாலரா நான் ஒரு லட்சம் பர்த்டே வாழ்த்துக்கள் சொல்லி பணம் திரட்டணும்..”
“அப்படியா,...,.”
ரொம்ப ஆழமாக யோசித்தான்....அவன் டாடியிடம் திரும்பி..
“டாடி.. இந்த மாமா ஸ்கூலுக்குக் காசு கொடுங்க.. அவங்க கட்டட்டும்...”
“எவ்வளவுடா கொடுக்கட்டும்...” - ஜெயராஜு அவன் மகனிடம் கேட்டார்...
“நிறைய்ய கொடுங்க.. எல்லாத்தையும் கொடுங்க...”
கர்ணனிடம் கையேந்திய வறியவனாக.. அவன் முன் மண்டியிட்டு அவனை முத்தமிட்டு அவன் கையிலிருந்தே $101/- க்கான காசோலாயைப் பெற்றுக் கொண்டேன்..
“மாமா.. அடுத்த பர்த்டேக்கும் தர்றேன்.. அண்ணன் பர்த்டேக்கும் தர்றேன்.. அடிக்கடி ஃபோன் பண்ணுங்க...”
நித்தின் நீ பல்லாண்டு வாழ்க.. என் பள்ளி போல பல பள்ளிக்கூடங்கள் நீ கட்டி அதில் நிறைய்ய மாணவர்கள் உன்னைப்போல் படித்து வளர்ச்சியுற வாழ்த்துகிறேன் !!
என் நாட்டுக் குழந்தைகள் தெய்வங்கள்.... அவர்களுக்கு இருக்கும் பரந்த உள்ளங்களில் நம் கனவுகளை விதைத்து விட்டால் போது.. நாளைய பாரதம் பிரகாசமாயிடும்..
என் பள்ளி வளர்ச்சிக்கு தன் பிறந்த நாள் பரிசாக முன்று சதுர அடி (ஜெயராஜுவின் $101 + என் பங்கு $4/- மொத்தம் $105/-) வழங்கிய என் நவீன வாமனன்.. நித்தின் அவர்கள் பல்லாண்டு வாழ நம் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் !!
1 comment:
விளையும் பயிர் ! முளையிலே தெரிகிறது !நல் வாழ்த்துக்கள் !
Er.கணேசன்/மனியகாரன்பாளையம் / கணபதி /
கோயம்புத்தூர் /தமிழ்நாடு /இந்தியா
Post a Comment