வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்.. வானமளவு யோசிப்போம்.. முயற்சி என்ற ஒன்றை மட்டும்.. மூச்சுப்போல சுவாசிப்போம்...

Tuesday, December 28, 2010

M.K என்கிற M.கிருஷ்ணமூர்த்தி சாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

M.K என்கிற M. கிருஷ்ணமூர்த்தி சாரை எங்க பள்ளிகூடத்தில் தெரியாதவங்க யாரும் உண்டோ? ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர். எங்கள் பள்ளி துணைத் தலைமை ஆசிரியராக ஓயுவு பெற்றவர். இன்று நம்மிடையே இல்லை. சென்ற 19 டிசம்பர் 2010 ஞாயிறு மறைந்துவிட்டார் என்கிற செய்தி பேரிடியாக வந்து இறங்கியது.

எட்டுமுழ பாலியெஸ்டர் பளிச் வேஷ்டி. அரைக்கை சட்டை நெற்றியில் ஒரு சந்தன கோபி. நீரில் நனைக்கப்பட்ட விபூதி பட்டைகள் தெரிந்தும் தெரியாமலும். சில சமயம் பூசப்பட்ட விபூதி பட்டைகள் கைகளிளும் தெரியும். எதிலும் ஒரு ஃபர்பக்ஷன் இருக்கும். எப்போது பார்த்தாலும் அப்போது தான் குளித்து முடித்து வந்த மாதிரி ஒரு பளிச் முகம். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அப்படி ஒரு தும்பைப்பூவால் அர்ச்சனை செய்த மாதிரியான தோற்றம்.

வகுப்புக்கு வந்த பின் எழுதும் கரும்பலகை சுத்தமாகவே இருந்தாலும் அதை மீண்டும் ஒரு முறை சுத்தம் செய்து மேலே ஒரு பிள்ளையார் சுழி போட்டு விட்டு மாணவர்களை பார்த்து ஒரு புன்சிரிப்பு.

சொல்லிக்கொடுக்கப்போகும் பாடத்தை பற்றி ஒரு சின்ன அலுக்காத முன்னுரை. பின்னர் அது சம்பந்தமான படம் கரும்பலகையில். அதில் பாகம் குறிக்கும் போது கூட கன்னாபின்னா என கோடு போட்டு குறிக்காமல் அதன் இடத்தில் இருந்து ஸ்கேல் வைத்து நேர் கோடாக கிழித்து அதன் நேராக பாகம் எழுதும் ஒரு நேர்த்தி. எழுத்துகள் அழகாக மிகவும் அழகாக பிலிப்பைனீஸ் எழுத்து மாதிரி டைமன் டைமனாக அதும் ஆங்கிலத்தில் எழுதினால் எல்லாமே கேப்பிட்டல் எழுத்துகள் என எம்கே சாரின் ஸ்டைலே தனி தான்.

ஒரு மக்கு மாணவனுக்கு கூட புரியும் படியாக விளக்குதல் அவரின் தனிச்சிறப்பு. அறிவியலில் கண்டிப்பாக எல்லா மாணவனும் எண்பது சதம் மார்க்குகள் எடுக்க வைக்கும் திறன். இவை எல்லாமே தான் எம்கே சார்.

சமீபத்தில் சீமாச்சு அண்ணனுடன் பள்ளியில் இருக்கும் போது ஆசிரியர் மதி அவர்கள் "நம்ம எம்கே சாரின் இடது காலை எடுத்துட்டாங்களாம்" என சொன்ன போது கேட்டுக்கொண்டிருந்த எல்லோருமே ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டோம். அவரை போய் பார்ப்போம் என நினைத்த போது தான் அவன் தன் மகளுடன் பூனே போய் தங்கிவிட்டதாகவும் அவருக்கு காலில் Osteosarcoma என்ற நோய் (ஒரு வித அரிதான் புற்று நோய்.. இது பொதுவாக ஒருவரை 30 வயதுக்குள் மட்டுமே தாக்கக்கூடியது.. சாருக்கு 70 வயதில் எப்படி வந்ததென்பதே ஒரு புதிர்தான்) தாக்கி அதனால் அவர்து இடது காலில் முழங்காலுக்கு மேல் ஆறு அங்குலத்திலிருந்து எடுக்க நேரிட்டது எனவும் அறிந்து வேதனைப்பட்டோம். He was diagnosed with Osteosarcoma in May 2010 and his leg was amputated in October 2010. After that incident he moved to Pune to his daughter's house. In the beginning of December he developed Osteosarcome cancerous tumor in his lungs and started having breathing problems. The cancer spread too fast and he breathed his last on 19th December 2010.

மாலை நேரத்தில் ஒரு ஒயர் கூடை எடுத்து கொண்டு காய்கறிகள், கீரை எல்லாம் வாங்கிகொண்டு கடைத்தெருவை விடு விடென்று ஒரு வலம் வருவார். காய்கறி வாங்கி முடித்து, துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயிலில் , மலைக் கோயிலில் எழுந்தருளியுள்ள பால தண்டாயுதபாணியை அதே விடு விடு வேகமான நடையுடன் மூன்று பிரதட்சிணங்கள்.. கண்ணில் படும் தெரிந்த முகங்களுக்கு (அது தெய்வமாகவே இருந்தாலும்) ஒரு சிறிய தலை அசைப்புடன் கூடிய ஒரு புன்னகை.. நடையில் வேகம் குறைக்காது வீடு போய்ச் சேருவார்.. அப்படி எல்லாம் அவரை பார்த்து பழகிவிட்ட எங்களுக்கு அவர் கால் இல்லாமல் பார்க்கும் தைரியம் இல்லை என்பதால் தான் எங்கள் கண்ணுக்கு எட்டா தூரத்தில் போய்விட்டார் போலும்.

அவரிடம் டியூஷன் படிக்க அவர் வசித்த செட்டித்தெருவுக்கு காலை 5.30க்கு எல்லா மாணவர்களும் போகும் போதே தெரு விழித்துக்கொள்ளும். தெருவே அவரால் கலகலப்பாக ஆகிவிடும். அவருடைய மாணவர்கள் எல்லோருமே கிட்ட தட்ட அவரைப்போலவே எதிலும் ஒரு ஃபர்பெக்ஷன் என்கிற நிலைக்கு கொண்டு வரப்பட்டுவிடுவர். குளிர்காலத்தில் வகுப்பில் மூன்று பிரிவாக இருக்கும் டெஸ்க் எல்லாவற்றையும் இனைத்து போட்டு கொண்டு சிலசமயம் எங்களுக்கு முன் டெஸ்க் மேலே ஏற்றி போட்டு கொண்டு உட்காந்து இருக்கும் போது வந்து "கால் இடுக்கிலே மாட்டிச்சுன்னா விரலை வழிச்சு தான் எடுக்கனும்" என தன் கைவிரலால் வழிப்பது போன்ற பாவனை செய்து காட்டுவது இன்றும் மனதில் நிற்கின்றது.

அவரிடம் படித்த நம் சக பதிவரும், கிழக்குபதிப்பகத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவரும் என் தம்பியுமான முத்துகுமார் ஒரு பத்து நாட்கள் முன்பாக எனக்கு தொலைபேசிய போது "அண்ணே, என் நான்கு வருட உழைப்பில் உண்டான புத்தகம் 'திராவிட இயக்க வரலாறு" இரண்டு பாகமாக 800 பக்க புத்தகமாக வெளிவர இருக்கு. என் மனசுக்கு பிடிச்ச என் ஆசிரியர்கள் எம்கேசாருக்கும் கேபி சாருக்கும் தான் இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்து அச்சில் ஏற்றிவிட்டு விட்டு வந்து உங்களுக்கு போன் செய்கிறேன்" என சொன்ன போது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. திரு. எம்கே சார் கால் இழந்த விஷயத்தை சொல்லலாமா என யோசித்து பின்னர் மெதுவாக சொன்னேன். வெடித்து அழுதான். பின்னர் தேற்றிவிட்டு அவரிடம் நீயே பேசி இந்த விஷயத்தை சொல்லேன் அவர் சந்தோஷப்படுவார் என சொன்னேன். தம்பியும் பூனேவுக்கு போன் செய்து சொன்னான்.

இப்படியாக அவருடைய மாணவர்களின் அன்புக்கு பாத்திரமான திரு. எம்கே சார் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா அமைதியடைய எங்கள் பள்ளியின் சார்பிலும், பள்ளியின் தாளாளர், பள்ளிக்குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய அலுவலர்கள்,முன்னாள், இந்நாள் மாணவர்கள் சார்பாக பிரார்திக்கின்றோம்.

3 comments:

அபி அப்பா said...

ஆசிரியரின் புகைப்படத்தை சீமாச்சு அண்ணனை இந்த பதிவில் ஏற்றும் படி கேட்டுக்கொள்கின்றேன்!

a said...

எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்......

சீமாச்சு.. said...

ரொம்ப நல்ல ஆசிரியர். அறிவியலையும் கணிதத்தையும் அவரைப் போன்று எளிதாக போதிக்கும் ஆசிரியர்களைப் பார்ப்பது அரிது.

ஓன்பதாவது அறிவியல் அவரிடம் படித்து முதல் மதிப்பெண் வாங்கிய மாணவனானாலும்... என்னவோ தெரியவில்லை.. என்னால் அவரிடம் நெருக்கம் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. பல வருடங்கள் கழித்து அவரை மலைக்கோயிலில் சந்திக்கும் போது கூட என்னை அடையாளம் தெரிந்து கொண்டாரா என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை.. அதே தலையசைப்பும் புன்னகையும் எனக்கும் பலமுறை கிடைத்தது.. அவரது நடை வேகத்துக்கு அவரை நிறுத்திப் பேசும் தைரியம் எனக்கு இருந்ததில்லை..

ஒரு முறை என் தந்தையைச் சந்தித்து “என் ஸ்டூடண்ட் வாசன் ஊர்ல நிறைய நல்ல காரியம் பண்ணிட்டிருக்கிறது ரொம்ப சந்தோஷம்.. என் ஆசிர்வாதங்களை அவனுக்குச் சொல்லுங்கோ” என்று சொன்னதாக அறிந்த போது.. அந்த ஆசிரியரின் அன்பு எனக்குள் பிரவாகமாயிற்று..

”சார்.. நீங்க சொல்லிக்கொடுத்ததெல்லாம் மறக்கலை சார்.. உங்க ஆசீர்வாதத்தில் நாங்கள் உங்கள் பெயரையும் புகழையும் என்றென்றும் போற்றுவோம்..சார்..”

கண்ணீருடன்,
உங்கள் அன்பு மாணவன்,